கிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர் ஹியூஸ் மரணம்! | Phillip Hughes dies aged 25

வெளியிடப்பட்ட நேரம்: 10:23 (27/11/2014)

கடைசி தொடர்பு:16:24 (27/11/2014)

கிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர் ஹியூஸ் மரணம்!

சிட்னி: கிரிக்கெட் பந்து தாக்கி தலையில் பலத்த காயம் அடைந்த ஆஸ்திரேலியா வீரர் ஹியூஸ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அந்நாட்டு ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் முதல்தர கிரிக்கெட் போட்டியில், தெற்கு ஆஸ்திரேலியா- நியூ சவுத் வேல்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில், தெற்கு ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான இடக்கை பேட்ஸ்மேன் பிலிப் ஹியூஸ் 63 ரன் எடுத்திருந்தபோது, எதிரணியின் இளம் பவுலர் சீன் அப்போட் வீசிய வேக பந்துவீச்சில் காயமடைந்தார். எகிறி வந்த பந்தை அவர் அடிக்க முயற்சித்த போது, பந்து தலையின் இடது பக்கத்தில் பயங்கரமாக தாக்கியது.

பவுன்சர் பந்து தாக்கியதில் நிலைகுலைந்து போன அவர், மைதானத்தில் சுருண்டு விழுந்தார். சுயநினைவை இழந்து ‘கோமா’ நிலைக்கு சென்ற ஹியூஸுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், ஆம்புலன்ஸ் மூலம் சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று காலை 10.20 மணிக்கு ஹியூஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஆஸ்திரேலியா பிரதமர், வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

25 வயதான பிலிப் ஹியூஸ், ஆஸ்திரேலியாவின் வளர்ந்து வரும் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வந்தார். ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்டில் விளையாடி 3 சதம் உள்பட 1,535 ரன்களும், 25 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 2 சதங்களுடன் 826 ரன்களும் சேர்த்துள்ளார். இதே போல் 114 முதல்தர ஆட்டங்களில் 26 சதங்கள் உள்பட 9,023 ரன்கள் குவித்திருக்கிறார்.

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில், ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் உடல்தகுதியை எட்டாமல் போகும் பட்சத்தில், அவரது இடத்தில் பிலிப் ஹியூஸ் விளையாட பிரகாசமான வாய்ப்பிருந்தது குறிப்பிடத்தக்கது.

கதறி அழுத மைக்கேல் கிளார்க்

றைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹியூக்ஸ் குடும்பத்தினர் சார்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் உணர்ச்சிப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஹியூஸ் மரணம் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட மைக்கேல் கிளார் கண்ணீர் விட்டு அழுதார்.

இந்த அறிக்கை ஹியூஸின் தந்தை கிரேக், தாய் விர்ஜினியா, சகோதரர் ஜான்சான் மற்றும் தங்கை மேகான் சார்பாக வெளியிடப்படுகிறது என்று பேச்சை மைக்கேல் கிளார்க் தொடங்கினார். "நாங்கள் எங்களுடைய மிகவும் அன்புநிறைந்த மகன் மற்றும் சகோதரன் இறப்பினால் பெரும் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளோம். "இது மிகவும் கடினமானதாக இருக்கும், நாங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வீரர்கள்,  ஆஸ்திரேலியா கிரிக்கெட் மற்றும் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து ஆதரவையும் பாராட்டுகிறோம்." கிரிக்கெட் ஹியூக்ஸின் வாழ்க்கை. கிரிக்கெட்டின் மீதான அவரது அன்பை நாங்களும் பகிர்ந்து கொண்டோம். ஹியூக்ஸை காப்பாற்ற போராடிய அனைத்து டாக்டர்கள், மருத்து உதவியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் உங்களை விரும்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இரங்கல்

கிரிக்கெட் ஆஸ்திரேலியா வழியாக இந்திய கிரிக்கெட் அணி தனது இரங்கல் செய்தியை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.

"நம்மிடையே இருந்து மறைந்த பிலிப் ஹியூசின் குடும்பத்திற்கு உலகம் முழுவதும் இருந்து கிரிக்கெட் அமைப்பினர் தெரிவிக்கும் இரங்கலுடன் இந்திய அணியும் இணைந்து கொள்கிறது. வருத்தம் நிறைந்த இந்த தருணத்தில் இந்த துரதிர்ஷ்டவசமான சோகத்தில் இருந்து அவரது குடும்பம் மீண்டுவர ஆன்மபலம் அவர்களுக்கு கிடைக்க நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

அவருடன் ஒன்றாக விளையாடியதை சக கிரிக்கெட் வீரர்களாக மகிழ்ச்சியுடன் நினைத்து பார்க்கிறோம். அவர் கிரிக்கெட் விளையாட்டிற்கு ஆற்றிய பணிக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close