கேன்சரை வென்ற யுவி! - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு! | yuvaraj singh

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (12/12/2014)

கடைசி தொடர்பு:12:45 (12/12/2014)

கேன்சரை வென்ற யுவி! - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

விடாமுயற்சியும், போராட்டக் குணமும் நிறைந்த ஒரு வீரனால் எந்த சூழ்நிலையிலும் தன்னை நிருபிக்க முடியும் என்பதற்கு யுவராஜ் சிங் ஒரு உதாரணம். ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் என உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த அதிரடி ஆட்டக்காரர், 2014ம் ஆண்டு உலகக் கோப்பையின் தொடர் நாயகன்.

உலககோப்பைக்கு பின் நுரையீரல் புற்று நோய் தாக்கியவுடன் அனைவரும் கூறியது,  அவ்வளவுதான் இனி யுவராஜ் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் பார்வையாளர்தான் என்று. ஆனால் அவர் மீண்டு வந்ததுதான் ஆச்சர்யம்!!

சண்டிகரில் டிசம்பர் 12ம் தேதி பிறந்த யுவராஜ் சிங், ரசிகர்களால் செல்லமாக யுவி என்றழைக்கப்பட்டார். சிறுவயதில் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்.  14 வயதுக்குட்பட்டவருக்கான தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்ற யுவராஜை, அவரது தந்தை, 'நீ கிரிக்கெட்தான் ஆடவேண்டும்!' என கட்டாயபடுத்தி கிரிக்கெட் வீரராக்கினார். அதிலும் கில்லியாக வலம் வந்தார் யுவராஜ். 2002 ஆண்டில் நாட்வெஸ்ட் இறுதிபோட்டியில் இமாலய இலக்கை இந்தியா எட்ட இவர்தான் காரணமாக இருந்தார். 2007ம் ஆண்டு முதல் T20 உலகக் கோப்பையில், ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸ்ர் அடித்து பந்துவீச்சாளரை அழவைத்தவர் யுவி.2011ம் ஆண்டு உலக கோப்பைக்கு முன் யுவராஜை நுரையீரல் புற்றுநோய் தாக்கியது. அது தெரியமலேயே களமிறங்கினார் யுவி. முதல் சுற்று ஆட்டங்களின்போதே அவருக்கு தனக்கு ஏதோ பிரச்னை இருப்பது தெரியவந்தது.இருந்தாலும் சமாளித்து உலககோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அவர் இல்லையெனில் இந்தியா உலகக்கோப்பை வெல்வது சற்று கடினமாகி இருக்கும் என்ற அளவிற்கு ஆடி 2011ம் ஆண்டு உலக கோப்பையின் தொடர் நாயகன் ஆனார். அதோடு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவருக்கு நுரையீரல் புற்றுநோய் என்றனர் மருத்துவர்கள். இனி கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட வேண்டியதுதான் என பலர் கூறினாலும், தன் தன்னம்பிக்கை, சக வீரர்களின் தூண்டுதல் இதையெல்லாம் தாண்டி கிரிக்கெட் மீதான காதல் அவரை மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு அழைத்து வந்தது.

மீண்டு வந்த யுவராஜை அணியில் சேர்த்தபோது அவர் மீது உள்ள கரிசனத்தில் எடுத்துள்ளனர்; அவரது ஆட்டத்திறன் திருப்தி அளிக்காது என்றவர்களுக்கு பேட்டால் பதிலளித்தார். அவர் மீண்டு வந்த முதல் ஆட்டமே சென்னையில் நடைபெற்ற ஆட்டம்தான். அதில் களமிறங்கும் போது. 'எனக்கு நம்பிக்கை தந்தது சென்னை ரசிகர்களின் விசில் சத்தம்தான்!' என்றார்.  அதில் சிக்ஸர் விளாசி மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்தார்.

நன்றாகவே விளையாடினாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடததால், 2015ம் ஆண்டு உத்தேச அணியிலிருந்தே கழட்டிவிடப்பட்டுள்ள நிலையில்,  யுவராஜ் ஓய்வு பெற வேண்டியதுதான் என நினைத்த போது, ரஞ்சி கோப்பையில் சதமடித்து நிராகரித்தவர்களை தர்மசங்கடத்திற்குள்ளாக்கினார்.

தன்னம்பிக்கையின்றி இருந்திருந்தால் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட், 2007ம் ஆண்டு T20  உலகக்கோப்பை, 2011ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் தொடர் நாயகன் பட்டம் வென்றிருக்க மாட்டார்.

கேன்சரிலிருந்து மீண்டு வந்த, வெற்றிக்காக போராடும் ஃபீனிக்ஸ் நாயகன் யுவராஜின் பிறந்தநாள் இன்று!

-ச.ஸ்ரீராம்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்