'இந்தியாவிடம் நிதியுதவி கேட்டது வெட்கக்கேடானது' -பாகிஸ்தான் ஹாக்கி அமைப்பில் வெடித்தது சர்ச்சை! | pakistan, india hockey

வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (07/04/2015)

கடைசி தொடர்பு:12:24 (07/04/2015)

'இந்தியாவிடம் நிதியுதவி கேட்டது வெட்கக்கேடானது' -பாகிஸ்தான் ஹாக்கி அமைப்பில் வெடித்தது சர்ச்சை!

லிம்பிக் பயிற்சி முகாம் நடத்துவதற்கு ஹாக்கி இந்தியா அமைப்பிடம், பாகிஸ்தான் ஹாக்கி வாரியம் நிதியுதவி கேட்டது வெட்கக்கேடான செயல் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் சலியுல்லா விமர்சித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் நெதர்லாந்தில் வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ளது. இதற்காகத்தான் ராவல்பிண்டியில் பாகிஸ்தான் ஹாக்கி வீரர்களுக்கு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடும் நிதிநெருக்கடி காரணமாக, பாகிஸ்தான் ஹாக்கி வாரியம் அந்த பயிற்சி முகாமை ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் ஹாக்கி வாரியம், ஹாக்கி இந்தியா அமைப்பிடம் நிதியுதவி கேட்டது அந்த நாட்டில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சலியுல்லா கூறுகையில், ''இது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். இது முழுக்க முழுக்க பாகிஸ்தான் ஹாக்கி வாரியத்துக்குள் நடக்கும் விஷயம். இதில் இந்தியா தலையிடுவதை அனுமதிக்க முடியாது.

பாகிஸ்தான் ஹாக்கி வாரியம் அதிக பணம் பெறும் நோக்கத்துடன் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. பாகிஸ்தான் ஹாக்கி வாரியத்தின் நாடகம் இது. பாகிஸ்தானுக்கு இந்தியா உதவி செய்வது வெட்கக் கேடான செயல்'' என்றார். கடந்த 1976ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் சலியுல்லா தலைமையிலான பாகிஸ்தான் அணி வெண்கலப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

கடும் நிதிநெருக்கடி காரணமாக மலேசியாவில் நடைபெற்று வரும் அஷ்லான் ஷா ஹாக்கிப் போட்டியில், பாகிஸ்தான் ஹாக்கி அணி பங்கேற்கவில்லை. அடுத்த மாதம் தென்கொரியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் பாகஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சுற்றுப்பயணங்களும் ரத்து செய்யப்படும் நிலையில் உள்ளது.

இதற்கிடையே ஹாக்கி இந்தியா அமைப்பிடம் இருந்து எங்களுக்கு எந்த உதவியும் வேண்டாம் என்று பாகிஸ்தான் ஹாக்கி வாரியம் தெரிவித்துள்ளது.
 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்