ஃபிஃபாவில் ஒரு மன்மோகன் சிங்... மதம்,மொழி, இனம் செய்யாததை பணம் செய்தது! | FIFA Officials arrested on corruption charges!

வெளியிடப்பட்ட நேரம்: 11:18 (28/05/2015)

கடைசி தொடர்பு:14:49 (28/05/2015)

ஃபிஃபாவில் ஒரு மன்மோகன் சிங்... மதம்,மொழி, இனம் செய்யாததை பணம் செய்தது!

லிம்பிக் அமைப்பைட விட அதிக உறுப்பினர் நாடுகளுடன் உலகின் சக்தி வாய்ந்த விளையாட்டு அமைப்பாக செயல்பட்டு வருவது ஃபிஃபா என்று அழைக்கப்படும் உலக கால்பந்து சம்மேளனம்.இந்த அமைப்பில் 209 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் கீழ் ஐரோப்பிய, ஆசிய,ஆப்ரிக்க, தென்அமெரிக்க, வட, மத்திய அமெரிக்க கரீபியன் மற்றும் ஒசானியா ஆகிய 6 கால்பந்து கூட்டமைப்புகள் இயங்கி வருகின்றன.

ஃபிஃபா தலைவர் எந்த நாட்டுக்கு சென்றாலும் ஒரு நாட்டின் அதிபருக்குரிய மரியாதை வழங்கப்படும். ஃபிஃபாவை பொறுத்த வரை கால்பந்து விளையாட்டுதான் மதம். இங்கு மற்ற எதற்கும் இடம் இல்லை. இனம் , மொழி, மதங்கள் ஃபிஃபாவில் எந்த பாகுபாடும் ஏற்படுத்தியதில்லை. கால்பந்து விளையாட்டில் எந்த உருவத்தில் மத, இன துவேஷமோ புகுந்தால் அடுத்த நிமிடமே சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு உடனடியாக தடை விதிக்கப்படும். ஈரான் பெண்கள் அணியை, தலையில் 'ஹிஜாப்'  எனப்படும் முக்காடு அணிந்து விளையாட ஃபிஃபா அனுமதி மறுத்தது இதனை உதாரணத்திற்கு கூறலாம்.

அதுபோல் விளையாட்டில் அரசியல் புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அடுத்த நிமிடமே சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு தடை விதிக்கப்படும். ஊக்க மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டால் அவர் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் தயவுதாட்சண்யம் காட்டாமல் தண்டிக்கப்படுவார்கள். உதாரணத்திற்கு கடந்த 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் போது மரடோனா கோகையின் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 11 மாதங்கள் கால்பந்து விளையாட தடை விதிக்கப்பட்டது. இப்படி சட்டத்திட்டங்களை கடுமையாக அமல்படுத்தி வந்த ஃபிஃபாவில்தான் தற்போது பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1998ஆம் ஆண்டு ஃபிஃபா அமைப்பின் தலைவராக சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஜோசப் பிளேட்டர் தேர்வு செய்யப்பட்டார். அதற்கு பின் தொடர்ந்து 4 முறை அவரேதான் தலைவராக தேர்வு செய்யப்பட்டு வருகிறார். அதாவது சுமார் 17 ஆண்டு காலம் சர்வாதிகாரி போல ஃபிஃபாவை அவர் ஆட்சி செய்து வருகிறார். இவரை எதிர்த்து யார் தேர்தலில் நின்றாலும் ஜெயிக்க முடிவதில்லை. அவரே போட்டியில் இருந்து விலகினால்தான் அடுத்தவர் வெற்றி பெற முடியும் என்ற நிலை இன்று வரை இருக்கிறது.

ஜோசப் பிளேட்டர் தொடர்ந்து ஃபிஃபா தலைவராக தேர்வு செய்யப்பட,  ஏழ்மை நிலையில் உள்ள ஆப்ரிக்க மற்றும் கரீபியன் கால்பந்து சங்க நிர்வாகிகள்தான்காரணம். இவர்களை கைக்குள் போட்டுக் கொண்ட ஜோசப் பிளேட்டர், அவர்கள் செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் இருந்தார். இதனால் அந்த நாட்டு நிர்வாகிகள் கண்ணை முடிக் கொண்டு ஜோசப் பிளேட்டருக்கு தேர்தலின் போது ஓட்டை குத்தி வந்தனர். ஆப்ரிக்க மற்றும் வட , மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் ஊழலில் திளைத்து வந்தனர்.

இதில் வடஅமெரிக்க கரீபியன் கூட்டமைப்பில் மட்டும் கடந்த 24 ஆண்டுகளில் 640 கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு. தற்போது அது கைது நடவடிக்கை வரை சென்றுள்ளது. உண்மையில் இந்த சம்பவம் கால்பந்து ரசிகர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஃபிஃபாவில் ஊழல் வளர ஜோசப் பிளேட்டர் காரணமாக இருக்கிறார் என்று கால்பந்து ஜாம்பவான்கள் மரடோனா, லூயீஸ் பிகோ ஆகியோர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர். தனது பணபலத்தினால் அந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் ஜோசப் பிளேட்டர் தவிடுபொடியாக்கி வந்தார். ஆனால் தற்போது அமெரிக்காவின் எப்.பி.ஐ. விரித்த வலையில் ஜோசப் பிளேட்டரின் அடிவருடிகள் சிக்கிக் கொண்டது அவருக்கு பெரிய அதிர்ச்சியையை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் ஜெஃப்ரே வெப், ஃபிஃபாவின் 8 துணைத் தலைவர்களில் ஒருவர்.

இவர்தான் வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர். அதாவது ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட அமைப்பின் தலைவர். தற்போதைய ஃபிஃபா தலைவரான ஜோசப் பிளேட்டரின் முக்கிய ஆதரவாளர். ஹைதி, கவுதமாலா, நிகரகுவா, சூரிமான்,கெய்மேன் போன்ற ஏழ்மை நிலையில் உள்ள குட்டி நாடுகள் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளன. இதில் கெய்மேன் நாட்டு கால்பந்து சங்க தலைவர்தான் ஜெஃப்ரி வெப். குட்டி நாட்டு கால்பந்து சங்கத் தலைவர்களை பணத்தை கொண்டு வளைத்து ஓட்டு பெறுவது எளிதாக விஷயம். இந்த பணியை ஜெஃப்ரி வெப் இவ்வளவு காலமும் ஜோசப் பிளேட்டருக்காக சிறப்பாகவே செய்து வந்தார்.

இவரால் கிடைக்கும் ஆதரவுக்காக ஜெஃப்ரி வெப் செய்யும் தவறுகளை நம்ம ஊர் மன்மோகன் சிங் போலவே ஜோசப் பிளேட்டரும் கண்டும் காணாமல் இருந்து வந்தார். அதற்கான விலையை ஜோசப் பிளேட்டர் கொடுக்கும் நாள் நெருங்கி விட்டது. நாளை சூரிச்சில் 65வது ஃபிஃபா காங்கிரஸ் கூடுகிறது. இதில் 5வது முறையாக தலைவர் பதவிக்கு ஜோசப் பிளேட்டர் மீண்டும் போட்டியிடுகிறார். இவரே தனது பணம் மற்றும் ஆள் பலத்தினால் மீண்டும் ஃபிஃபா தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

பணம் பத்தும் செய்யும் என்பதற்கு ஃபிஃபாவும் உதாரணமாகி விட்டதுதான் வேதனை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்