ஆங்கிலம் தெரியாத இந்தியாவின் விளிம்புநிலை வில்வித்தை வீரர்களுக்கு அமெரிக்க விசா மறுப்பு! | US denies visa to Indian youth archery team

வெளியிடப்பட்ட நேரம்: 17:19 (05/06/2015)

கடைசி தொடர்பு:17:48 (05/06/2015)

ஆங்கிலம் தெரியாத இந்தியாவின் விளிம்புநிலை வில்வித்தை வீரர்களுக்கு அமெரிக்க விசா மறுப்பு!

ங்கிலம் பேசத் தெரியாத காரணத்தினால், விளிம்பு நிலையில் உள்ள இந்திய வில்வித்தை வீரர்களுக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ள விவகாரத்தால் சர்ச்சை வெடித்துள்ளது.

அமெரிக்க வில்வித்தைக் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று,  உலக இளையோர் வில்வித்தைப் போட்டியில் பங்கு பெற 31 பேர் அடங்கிய குழுவை இந்திய வில்வித்தை கூட்டமைப்பு தேர்வு செய்திருந்தது. ஆனால் இதில் 20 பேருக்கு விசா தர, புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் மறுத்து விட்டது. இதனால் ஜூன் 8 முதல் 14-ஆம் தேதி வரை நடக்கவுள்ள உலக இளையோர் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்த 31 பேரில் 7 வில்வித்தை வீரர்கள், 2 பயிற்சியாளர்கள், இந்திய விளையாட்டுத்துறை ஆணைய அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டுள்ளது. மற்ற 20 பேருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

இந்திய வில்வித்தைக் கூட்டமைப்பின் பொருளாளர் விரேந்தர் சச்தேவா இது குறித்து கூறுகையில்,  "விசாவுக்கான நேர்காணலில் இந்த 20 பேர் நிலை குறித்து விசாரணை அதிகாரி சந்தேகம் அடைந்திருக்கலாம். வில்வித்தை போட்டி முடிந்து திரும்ப மாட்டார்கள், அமெரிக்காவிலேயே தங்கி விட வாய்ப்பிருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் விசா மறுக்கப்ட்டிருக்கலாம்.

பெரும்பாலான வில்வித்தை வீரர்கள் சமூகத்தின் கீழிருந்து வருபவர்கள். அசாம், ஜார்க்கண்ட், பஞ்சாப், உ.பி. ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஆங்கிலம் சரிவர தெரியாது. இதனால் மற்றவர்களை தொடர்புகொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. உங்கள் வாழ்வதாரத்துக்கு  என்ன செய்கிறீர்கள் என்று விசா அதிகாரி கேட்ட போது, வில்வித்தை விளையாடி அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் விசா அதிகாரி இவர்களுக்கு விசா மறுத்திருக்கலாம்.

அமெரிக்க வில்வித்தை கூட்டமைப்பு அழைத்தும், இந்திய அரசு அனுமதி அளித்த பிறகும் விசா மறுக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்