வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (09/06/2015)

கடைசி தொடர்பு:13:02 (09/06/2015)

'ஏ... குழந்தை பையா...!'- ரொனால்டோவை கலாய்க்கும் மெஸ்சி ரசிகர்கள்

கிரிக்கெட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் எப்படி பரம விரோதிகள் போல அடித்து கொள்கின்றனவோ அது போல கால்பந்து விளையாட்டில் ரியல்மாட்ரிட், பார்சிலோனா அணிகள் பரம எதிரிகள்தான்.

                 
ஸ்பெயின் தலைநகரான மாட்ரிட் நகரை சேர்ந்தது ரியல்மாட்ரிட் அணி. ஸ்பெயினின்  கட்டலான் மாகாணத்தின் தலைநகரான பார்சிலோனாவில் செயல்படுகிறது எப்.சி பார்சிலோனா அணி. இந்த இரு அணிகளும் விளையாடும் 'எல்கிளாசிகோ' மோதல்,  உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்துக்கு நிகரானதாக கருதப்படுகிறது. ரியல்மாட்ரிட்டுக்கு 'கேபிடல் கிளப்' என்றும்,  பார்சிலோனாவுக்கு 'கட்டலான் ஜையன்ஸ் 'என்ற வேறு செல்லப் பெயர்களும் உண்டு.உண்மையை சொல்லப் போனால் தற்போது ஐரோப்பிய சாம்பியனாகியிருக்கும் பார்சிலோனா அணிக்கு ட்விட்டரில் வாழ்த்து சொல்ல கூட ரியல்மாட்ரிட் அணியின் செய்தி தொடர்பாளருக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தற்போதைய கால்பந்து உலகில் போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோவும், அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சியும் முன்னணி நட்சத்திர வீரர்கள். இதில் ரொனால்டோ,  ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக விளையாடுகிறார்.. கால்பந்து உலகின் உயரிய விருதான 'பல்லான் டி ஆர்' (தங்கபந்து) விருதை பெறுவதில் இருந்து ஒவ்வொரு விருதையும் தட்டி செல்ல ரொனால்டோ மற்றும் மெஸ்சிக்கிடையே போட்டி எழுவது உண்டு. இந்த போட்டி இந்த இரு வீரர்களின் ரசிகர்களுக்கிடையே அடிக்கடி மோதலையும் ஏற்படுத்தும்.

ரியல்மாட்ரிட் அணியின் ரசிகர்கள் ரொனால்டோவுக்கு ஆதரவாக இணையங்களில் செயல்படுகின்றனர். பார்சிலோனா மற்றும் மெஸ்சி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் செயல்படுகின்றனர். இரு பக்க ரசிகர்களும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பார்கள். மெஸ்சியை பற்றி ரொனால்டோ தரப்பும்,  ரொனால்டோ பற்றி மெஸ்சி தரப்பும் அவதூறுகளை பரப்புவது, கெட்ட பெயரை ஏற்படுத்துவது போன்ற படங்களை பகிர்வதுதான் முக்கிய பணி.

இந்நிலையில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான ரியல்மாட்ரிட் அணி,  அரையிறுதியில் ஜுவான்டஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. அதோடு கோபா டெல்ரே, ஸ்பானீஷ் லீக் தொடர்களிலும் ரியல்மாட்ரிட் அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. மிக முக்கியமான இந்த 3 போட்டிகளிலும் பார்சிலோனா அணிதான் தற்போது சாம்பியனாகியுள்ளது. இதனால் உலகின் விலை உயர்ந்த கால்பந்து வீரரான ரொனால்டோ, நடப்பு சீசனில் வெறுங்கையுடன் வெளியேற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார்.

தொடர் தோல்விகளையடுத்து இணைய தளங்களில் மெஸ்சி தரப்பு, ரொனால்டோவை கடுமையாக கிண்டலடித்து வருகிறது. . சாம்பியன்ஸ் லீக் கோப்பையுடன் மெஸ்சி தனது மகனுடன் இருப்பது போன்ற படங்கள் அண்மையில் வெளி வந்தன. தற்போது அந்த படத்தில் மெஸ்சி குழந்தையை நீக்கி விட்டு அதில் ரொனால்டோவின் படத்தை ஒட்டி 'குழந்தை பையா...!' என்பது போல சித்தரித்து மெஸ்சி தரப்பு இணைய தளங்களில் வெளியிட்டு திருப்திபட்டு வருகிறது. இது ஒரு சாம்பிள்தான்... இது போன்று ஏராளமான படங்களை வெளியிட்டு, மெஸ்சி ரசிகர்கள் ரொனால்டோவை கலாய்த்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை ரியல்மாட்ரிட் அணி வென்ற போது, ரொனால்டோ ரசிகர்கள் மெஸ்சியை கலாய்த்து பல்வேறு படங்களை வெளியிட்டு வந்தனர். தற்போது அதற்கு மெஸ்சி தரப்பு பதிலடி கொடுத்து சந்தோஷப்பட்டு வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்