தாய்நாட்டுக்காக மெஸ்சி விளையாடிய 100வது போட்டியில் அர்ஜென்டினா வெற்றி | Argentina won the Match

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (21/06/2015)

கடைசி தொடர்பு:18:00 (22/06/2015)

தாய்நாட்டுக்காக மெஸ்சி விளையாடிய 100வது போட்டியில் அர்ஜென்டினா வெற்றி

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் ஜமைக்கா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வீழ்த்தியது. அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயனல் மெஸ்சி அந்த அணிக்காக விளையாடிய 100வது சர்வதேச போட்டி இது. பாரகுவே அணிக்கு எதிரான ஆட்டம் சமனில் முடிந்ததால் 4 புள்ளிகளுடன் உருகுவே அணியும் காலிறுதிக்கு வாய்ப்பை பலப்படுத்தியுள்ளது.

வினா டெர் மார் நகரில் நடந்த இந்த 'பி' பிரிவு ஆட்டத்தில், முதல் பாதியில் 11வது நிமிடத்தில் அர்ஜென்டினா முன்கள வீரர் ஹீகுவென் கோல் அடித்தார். ஏஞ்சல் டி மரியா தந்த பாஸ் ஹீகுவென் கோல் அடிக்க உதவியாக இருந்தது. இந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட ஒரே கோல் இதுதான். இதையடுத்து வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி தற்போது 7 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடித்தது. காலிறுதியில் அர்ஜென்டினா அணி ஈகுவடார், பெரு அல்லது வெனிசூலா அணியை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். இதற்கு முன் கடந்த 1998ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணி ஜமைக்கா அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் இந்த அணிகள் மீண்டும் சந்தித்துள்ளன.

முன்னதாக உருகுவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிவப்பு அட்டை பெற்ற அர்ஜென்டினா பயிற்சியாளர் ஜெரார்டோ மார்ட்டினோ மைதானத்திற்குள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் கேலரியில் இருந்து போட்டியை பார்த்தார். அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் செர்ஜியோ அகுராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹீகுவென் களமிறக்கப்பட்டார். அதுபோல் நிகோலஸ் ஓட்டமென்டிக்கு பதிலாக மற்றொரு நடுகள ஆட்டக்காரர் மார்ட்டின் டெம்ச்சிலிஸ் நேற்றைய ஆட்டத்தில் விளையாடினார். ஆட்டம் முடியும் தருவாயில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் சபலாட்டா மஞ்சள் அட்டை பெற்றார். இந்த தொடரில் 2 மஞ்சள் அட்டைகள் பெற்றதால் அடுத்த ஆட்டத்தில் சபலாட்டா விளையாட முடியாது.

லா செரானா நகரில் நடந்த இதே பிரிவுக்கான மற்றொரு ஆட்டத்தில் உருகுவே அணி பாரகுவே அணியை சந்தித்தது. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. உருகுவே அணிக்காக கோலை 29வது நிமிடத்தில் ஜிம்னெசும் பாரகுவே அணிக்கான கோலை 44வது நிமிடத்தில் பரியாசும் அடித்தனர். இதனால் பாரகுவே அணி 5 புள்ளிகளுடனும் காலிறுதிக்குள் நுழைந்தது. கோபா அமெரிக்கா தொடரில் 3 பிரிவுகளில் இருந்து மூன்றாவது இடத்தை பெறும் சிறந்த இரு அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். அந்த வகையில் உருகுவே அணி 4 புள்ளிகளுடம் காலிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்