ஃபிஃபா தலைவர் பதவிக்கு போட்டியிடும் மரடோனா நேர்மையானவரா? | Is Maradona Genuine to contest in FIFA Election ?

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (23/06/2015)

கடைசி தொடர்பு:17:55 (23/06/2015)

ஃபிஃபா தலைவர் பதவிக்கு போட்டியிடும் மரடோனா நேர்மையானவரா?

ஃபிஃபா தலைவர் பதவிக்கு மரடோனா போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கால்பந்து விளையாட்டை பொறுத்தவரை, மரடோனா ஒரு ஜாம்பவான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அவரது திறமையான ஆட்டம் காரணமாகவே 1986ஆம் ஆண்டு அர்ஜென்டினா உலகக் கோப்பையை வென்றது. ஆனால் ஃபிஃபா தலைவர் பதவிக்கு போட்டியிட அது மட்டுமே தகுதியானதா?

தற்போது 55 வயது நிரம்பிய மரடோனாவின் வாழ்க்கையே சர்ச்சைகளால் நிறைந்தது. இவரால் எப்படி ஊழலை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று எதிர்ப்பாளர்கள் கேள்வியை எழுப்புகின்றனர். இத்தாலியின் நேபோலி அணிக்காக மரடோனா, கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை விளையாடி வந்தார். இவர் விளையாடிய காலக்கட்டத்தில்தான் நேபோலி அணி இரு முறை இத்தாலி சீரி 'ஏ' கோப்பையை வென்றது.

நேபோலி அணிக்காக மரடோனா விளையாடுவதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி அந்த அணி சீரி 'ஏ' கோப்பையை வென்றது இல்லை. இந்த காலக்கட்டத்தில் மரடோனா 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக இத்தாலியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2005ஆம் ஆண்டு 48 மில்லியன் டாலர்களை மரடோனா வரியாக செலுத்த வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. ஆனால் இன்று வரை அதனை மரடோனா செலுத்தவில்லை. மாறாக, தான் வரி ஏய்ப்பில் ஈடுபடவில்லை என்ற ஒரே பல்லவியைதான் அவர் திரும்ப திரும்ப பாடி வருகிறார். இத்தாலிக்கு சென்றால் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தால் 8 ஆண்டுகள் அவர் இத்தாலிக்கு செல்லவில்லை. பின்னர் கடந்த 2013ஆம் ஆண்டுதான்  இத்தாலிக்கு அவர் வருகை தந்தார்.

கடந்த 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில், அர்ஜென்டினா அணிக்காக விளையாடிய மரடோனா கோகையின் போதை மருந்து உட்கொண்டு பிடிபட்டார். இது தொடர்பாக அவருக்கு 11 மாதங்கள், கால்பந்து தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. கோடிக்கணக்கான இளம் ரசிகர்களின் உதாரணப்புருஷர் மரடோனா. ஆனால் ஒரு காலத்திலும் அவர் இளைய தலைமுறையினருக்கு உதாரணமாக திகழ்ந்தது இல்லை என்று மரடோனாவின் எதிர்ப்பாளர்கள் மற்றொரு கருத்தை முன் வைக்கின்றனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக மரடோனா இருந்தார். லீக் சுற்றில் அபாரமாக விளையாடிய அர்ஜென்டினா அணி, நாக்அவுட் சுற்றில் ஜெர்மனியிடம் 4-0  என்ற கோல் கணக்கில் பரிதாபமாக தோற்றது. அத்துடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய மரடோனா, பின்னர் கடந்த 2011ஆம் ஆண்டு துபாயை சேர்ந்த அல்-வாஸ்ல் என்ற அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அப்போது கோடி கணக்கான டாலர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு மரடோனா என்ற பிம்பத்தை அல்-வாஸ்ல் அணிக்கு அவர் விற்று விட்டதாக பிரேசில் ஜாம்பவான் பீலே கூட குற்றம் சாட்டினார்.

மரடோனா ஊழலுக்கு எதிரானவராகவே இருந்தாலும் தன் மீது போடப்பட்ட வரி ஏய்ப்பு வழக்கின் உண்மை நிலவரத்தை வெளிப்படையாக  அறிவித்து, தான் குற்றமற்றவர் என்பதை  நிரூபித்து விட்டே ஃபிஃபா தலைவர் பதவிக்கு போட்டியிடுவது சரியானதாக இருக்கும்.

ஃபிஃபா விதிமுறைப்படி, தலைவர் போட்டிக்கு போட்டியிடும் வேட்பாளரை குறைந்தது 5 நாட்டு கால்பந்து சங்கங்களாவது ஆதரிக்க வேண்டும். தற்போது வெனிசூலா மட்டுமே மரடோனா போட்டியிட ஆதரவளித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்