பிகார் துணை முதல்வரான ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்! | IPL Cricketer become Bihar Debuty CM

வெளியிடப்பட்ட நேரம்: 11:43 (21/11/2015)

கடைசி தொடர்பு:11:54 (21/11/2015)

பிகார் துணை முதல்வரான ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்!

பிகாரின் துணை முதல்வராக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றுள்ளார். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், தேஜஸ்வி ஒரு  ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர் என்பதுதான். டெல்லி அணியில் இடம் பெற்றுள்ள அவர், ஒரு ஐ.பி.எல். போட்டியில் கூட களமிறங்கியது இல்லை என்பது வேறு விஷயம்.

பிகார் முதல்வராக நேற்று நிதிஷ் குமார் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி சார்பில், லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றார். தற்போது 26 வயதே நிரம்பிய தேஜஸ்வி யாதவ், லாலுவின் 9 பிள்ளைகளில் கடைக்குட்டி

இதனால் லாலுவுக்கு இவர் மீது தனிபாசம். டெல்லி பப்ளிக் பள்ளியில் படிக்க வைத்தார். 9-ம் வகுப்பு வரை தேஜஸ்வி யாதவ் படித்தார். அதற்கு பின் படிப்பு மண்டையில் ஏறவில்லை. படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு, கிரிக்கெட் விளையாட கிளம்பி விட்டார்.

ஐ.பி.எல். போட்டியை பொறுத்தவரை, கடந்த 4 சீசன்களாக டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ஆவார். எனினும் ஒரு போட்டியில் கூட அவருக்கு விளையாடும் வாய்ப்பை டெல்லி அணி வழங்கவில்லை.

டெல்லி அணிக்காக ஒரு ஐ.பி.எல். போட்டியில் கூட விளையாடவில்லையென்றாலும் அவருக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை சம்பளமாக டெல்லி அணி வழங்கியுள்ளது. இவரது மொத்த சொத்த மதிப்பு ஒரு கோடிக்கும் மேல்.

லாலுவே, '' எனது மகனுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும், வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வாய்ப்பாவது கிடைத்தே'' என்று காமெடியாக தேஜஸ்வி பற்றி குறிப்பிடுவார்.

 தேஜஸ்வி ஒரே ஒரு ரஞ்சி போட்டியில் விளையாடியுள்ளார்.  ஜார்க்கண்ட் மாநில அணிக்காக விதர்பா அணியை எதிர்த்து களமிறங்கிய அவர்,  இந்த போட்டியில் 19 ரன்களை அடித்துள்ளார். இதுதான் முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் தேஜஸ்வி யாதவ் அடித்த அதிகபட்ச ரன் ஆகும்.

ஐ.பி.எல். தொடரின் போது நீண்ட முடி வளர்த்து தாடியுடன் காணப்பட்ட தேஜஸ்வி, நேற்று பதவியேற்பு விழாவில் குர்தாவுக்கு மாறி அப்படியே அரசியல்வாதியாக காட்சியளித்தார்.  இளமையும் துடிப்பும் நிறைந்த  இந்த இளைஞர்,  இரண்டாவது இன்னிங்சிலாவது சாதிப்பாரா? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close