வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (25/11/2015)

கடைசி தொடர்பு:19:31 (25/11/2015)

சுழலுக்கு சாதகமான பிட்ச்: திக்கி திணறி 215 ரன்களை சேர்த்தது இந்தியா -கிரிக்கெட் அப்டேட்ஸ்!

ந்திய அணி - தென்னாப்பிரிக்க அணி இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் இன்று தொடங்கியது. இரண்டாவது டெஸ்ட் டிராவான நிலையில் ஏற்கனவே 1-0 என முன்னிலையில் இருப்பதால் இந்த டெஸ்ட் போட்டியை வென்றால் தொடரை வென்று விடலாம் என்பதால் உற்சாகமாக களமிறங்கியது இந்திய அணி. கடைசி 9 ஆண்டுகளாக அயல் மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காத அணி என்ற சாதனை முடிவுக்கு வர கூடாது எனில், இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய  இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கியது தென்னாப்பிரிக்க அணி.

டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி, பிட்ச் வறண்டு இருப்பதால் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு  முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியில் ரோகித் ஷர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் அணிக்கு திரும்பினர். தென்னாப்பிரிக்காவில் ஸ்டெய்ன் காயம் காரணமாக இந்த போட்டியிலும் இடம்பெறவில்லை. சைமன் ஹார்மர் அணிக்கு திரும்பினார்.

மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை. அதேசமயம் பந்து அட்டகாசமாக சுழன்று திரும்பியது. எனவே, எட்டாவது ஓவரிலேயே சுழற்பந்து வீச்சாளர் ஹார்மரை பந்து வீச அழைத்தார் கேப்டன் அம்லா. 13 ஓவர்களில் வெற்றிகரமாக ஐம்பது ரன்களை கடந்தது இந்திய அணி. இந்நிலையில், எல்கர் பந்து வீச்சில் முதல் ஆளாக அவுட் ஆனார் தவான். அதன் பின்னர் மோர்னே மொர்கல் அபராமாக பந்துவீச ஆரம்பிக்க முரளிவிஜய், விராட் கோலி, ரஹானே ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். பின்னர் இந்திய அணியின் ரன் வேகம் மந்தமானது. 78.2 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி.

இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி அஷ்வின் மற்றும் ஜடேஜா கூட்டணியின் சுழலை சமாளிக்க முடியாமல் திணறியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒன்பது ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து வெறும் 11 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது.

நறுக்குன்னு நாலு பாயிண்ட்ஸ்

1. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா சொதப்பி தள்ளினார். இந்திய அணி 116-5 என தத்தளித்த போது களமிறங்கிய ரோஹித், 28 பந்துகளை சந்தித்து வெறும் ரன்களை மட்டும் எடுத்து அவுட் ஆனார். ரோஹித் ஷர்மா ஒரு பந்தை கூட திறம்பட கையாளவில்லை. இதனால் ரசிகர்கள் அப்சட் ஆயினர்.

2. சச்சின் டெண்டுல்கரால் கடைசி வரை லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடிக்கவே முடியவில்லை. ஆனால், தான் விளையாடிய முதல் போட்டியிலேயே லார்ட்ஸில் சதமடித்தவர் ரஹானே. தென்னாப்பிரிக்க, நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா என அந்நிய மண்ணில் சிறப்பாக விளையாடி வரும் ரஹானே, இந்த  டெஸ்ட் தொடரில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. புஜாரா விக்கெட் விழுந்த பின்னர் களமிறங்கியவுடன் அட்டகாசமாக சைமன் ஹார்மர் பந்தில் ஒரு சிக்ஸ் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார் ரஹானே. ஆனால், அதன் பின்னர் மோர்களின் ரிவர்ஸ்விங் பந்து ஒன்றை தேவையின்றி அடித்தாட முயன்று போல்ட் ஆனார்.

3. விருத்திமான் சாஹாவும், ரவீந்திர ஜடேஜாவும் தான் இன்றைய போட்டியின் நாயகர்கள். 125-6 விக்கெட்டுகள் என இந்தியா தடுமாறிய போது இணைந்த இந்த ஜோடி, மெல்ல மெல்ல இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தது. குறிப்பாக ஜடேஜா அபாரமாக சில ஷாட்கள் விளையாடினார். 54 பந்துகளை சந்தித்து ஆறு பவுண்டரிகள் உதவியுடன் 34 ரன்கள் குவித்தார் ஜடேஜா. அவரது ஸ்ட்ரைக் ரேட் 62.96. இது தான் இன்றைய போட்டியில் அதிக ஸ்ட்ரைக் ரேட் ஆகும். விருத்திமான் சாஹா தென்னாப்பிரிக்க பந்துவீச்சில் ஆரம்பத்தில் தடுமாறினாலும், பின்னர் சுதாரித்து நன்றாக கையாண்டார் இந்திய அணி சார்பில் 106 பந்துகளை சந்தித்து 32 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 200 ரன்களை கடந்ததில் பெரும் பங்கு சாஹாவுக்கு உண்டு.

4. சுழலுக்கு சாதகமான மைதானமாக இருந்தாலும் ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சு மூலம் அணியில் ஸ்டெயின் இல்லாத குறையை போக்கினார் மோர்னே மொர்கல். குறிப்பாக, விராட் கோலி விக்கெட்டை அட்டகாசமாக பந்துவீசி வீழ்த்தினார். மோர்னே மொர்கல் காயம் காரணமாக போட்டியின் நடுவிலேயே வெளியேறிவிட்டார். இல்லையெனில், இந்தியா 200 ரன்களை கடப்பதே சிரமமாக இருந்திருக்கும்.

பிட்ச் ரிப்போர்ட்

பிட்ச் சுழலுக்கு சாதமாக இருக்கிறது. எனவே அஷ்வின், மிஸ்ரா ஆகியோர் நாளைய போட்டியில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பார்கள். ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் இஷாந்த் சிறப்பாக செயல்படுவார் என்பதால் நாளை கடும் நெருக்கடி கொடுத்து தென்னாப்பிரிக்க அணியை 150 ரன்களுக்குள் சுருட்ட முயற்சிக்கும் இந்திய அணி.

அதே சமயம் தென்னாப்பிரிக்க அணியில் எல்கர், அமலா, டு பிளசிஸ், டி வில்லியர்ஸ், டுமினி ஆகியோர் நன்றாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை முந்த வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுவார்கள். ஏனெனில், இந்த பிட்சில் நான்காவது இன்னிங்க்ஸில் இருநூறு ரன்களை அடிப்பதற்கே பிரம்ம பிரயத்தனம் செய்ய நேரிடலாம். மூன்று நாளில் டெஸ்ட் போட்டி முடிவடைய அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளதால், வெற்றியின் அருகில் யார் செல்வார்கள் என்பதை தீர்மானிக்கும் நாளாக நாளை இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

- பு.விவேக் ஆனந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்