வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (05/01/2016)

கடைசி தொடர்பு:12:54 (05/01/2016)

50 ஆண்டுகளில் சிறந்த இன்னிங்ஸ் : வி.வி.எஸ். லட்சுமணனுக்கு கிடைத்த கெளரவம்!

கிரிக்கெட்டில் கடந்த 50 ஆண்டுகளில் சிறந்த ஆட்டமாக , இந்திய வீரர் லக் ஷ்மணன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கொல்கத்தாவில் 281 ரன்கள் எடுத்த இன்னிங்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘கிரிக்கெட் மன்த்லி’ பத்திரிக்கை வெளியிட்டுள்ள 50 ஆண்டுகளின் 50 சிறந்த இன்னிங்ஸ்களின்  பட்டியலில் லாரா, இயான் போத்தம், ஹோல்டிங் ஆகிய ஜாம்பவான்களைப் பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது லக் ஷ்மணனின் இந்த அபார ஆட்டம்.

கடந்த 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கவாஸ்கர்- ஆலன் பார்டர் தொடரின் இரண்டாவது போட்டி,  ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி 495 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்சில் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, வெறும் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி. தொடர்ந்து  274 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்சை இந்தியா தொடங்கியது.


உலகம் வியந்த ஆட்டம்

தொடக்க ஜோடி விரைவில் பிரிய, வழக்கமாக ஆறாவது வீரராக களமிறங்கும் லக் ஷ்மணனை மூன்றாவது வீரராக களமிறக்கினார் அப்போதைய கேப்டன் கங்குலி. முதல் இன்னிங்சிலும் லக் ஷ்மணன்  மட்டுமே பொறுப்போடு விளையாடி 59 ரன்கள் எடுத்திருந்தார். அதனால் அவரை ஓபனிங் இறங்கச் சொல்லியிருக்கிறார் கங்குலி. ஆனால் அதை மறுத்து மூன்றாவது வீரராக களமிறங்கிய லக் ஷ்மணன்,  ஒரு அரணாய் நின்று இந்திய அணியின் சரிவை தடுத்தார்.

இந்த இன்னிங்சில் லக் ஷ்மணனுக்கு கைகொடுத்தது 'இந்தியாவின் சுவர்' என்று வர்ணிக்கப்படும் டிராவிட். அபாரமாக விளையாடிய இந்த ஜோடி,  376 ரன்கள் குவித்தது. லக் ஷ்மணன்  432 பந்துகள் சந்தித்து 44 பவுண்டரிகளுடன் 281 ரன்கள் குவித்தார். அப்போது அதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.  டிராவிட்டும் தன் பங்குக்கு 180 ரன்கள் குவிக்க,  657 ரன்களுடன் இந்தியா டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்சில் ஹர்பஜன் ஹாட்ரிக் எடுத்ததும், சச்சினின் மாயவீச்சில் ஆஸ்திரேலியா சுருண்டதும் அனைவரும் அறிந்ததே.

ஃபாலோ ஆன் பெற்ற பிறகும், சற்றும் மனம் தளராமல் மன உறுதியுடன் இரண்டு நாட்கள் போராடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த அந்த ஆட்டத்தை எந்த ஒரு இந்திய கிரிக்கெட் ரசிகனாலும் மறக்க முடியாது. ரசிகர்கள் மட்டுமல்லாது,  எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்களாலும் அதனை நிச்சயம் மறந்திருக்க முடியாது.
 

லக் ஷ்மணின் இந்த ஆட்டத்தை பார்த்து ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் வார்னே வியந்தே  போனர். லக் ஷ்மணனின்  ஆட்டம் குறித்து அவர்,  '' லக் ஷ்மணனின் கால்களை குறிவைத்தே பந்துகளை வீசினேன். ஆனால் அவர் மிட்-விக்கெட் திசையிலும் கவர் திசையிலும் நேர்த்தியாக விளையாடத் தொடங்கி விட்டார்.  அந்த சமயத்தில் அவருக்கு  எப்படி பந்துவீசுவது என்றே எனக்கு தெரியவில்லை '' என்கிறார்.

இந்திய அணியில் சச்சின் இடத்தை கூட நிரப்பிவிடலாம் போலிருக்கிறது.  லக் ஷ்மணன் இடத்தை நிரப்புவதுதான் கடினம் போலும்!

-மு.பிரதீப் கிருஷ்ணா

(மாணவர் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்