மாட்டிறைச்சி விவகாரத்தில் சிக்கித் திணறும் கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் குடும்பம்!

மாட்டிறைச்சி வெட்டப்பட்ட விவகாரத்தில் தனது குடும்பத்தினரை தேவையில்லாமல் சிக்கலில் இழுத்து விடுவதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோவில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் குடும்பம் வசித்து வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன், அந்த பகுதியில் மாட்டிறைச்சி வெட்டப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக திடோலி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் சகோதரர் முகமது ஹாசீஃப், போலீசாருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரதீப் பரத்வாஜை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் முகமது ஹாசீஃப்பை கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்தனர்.

இதற்கிடையே மாட்டிறைச்சி வெட்டப்பட்ட விவகாரத்தில் தனது மகன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதை,  முகமது ஷமியின் தந்தை தவுசீப் அகமது மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், '' எனது மகன் சம்பவ இடத்திற்கு வேடிக்கை பார்க்க மட்டுமே சென்றான். அதுவும் மிகவும் தாமதமாகவே சென்றான். முகமது ஷமி, இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கிய பின்னர்தான் இது போன்ற நெருக்கடிகளை எங்கள் குடும்பத்துக்கு ஏற்படுகின்றனர்.

இது குறித்து அம்ரோ மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே நான் புகார் அளித்திருந்தேன். அதற்கு பழிவாங்கவே எனது மகன் கைது செய்யப்பட்டுள்ளான்.  மாட்டிறைச்சி விவகாரத்தில் எங்கள் குடும்பத்தினரை சிக்க வைத்து அவப் பெயரை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்'' என்றார்.

இந்த சம்பவம் குறித்து அம்ரோ மாவட்ட ஆட்சியர், வெட் பிரகாஷ் கூறுகையில், ''முகமது ஷமியின் தந்தை என்னை சந்தித்து புகார் அளித்தார். தங்கள் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்ந்து மிரட்டுவதாக புகார் அளித்தார். ஆனால் மிரட்டியவர்களின் பெயர் விபரம் தெரிவிக்கவில்லை'' என கூறியுள்ளார்.

அதே வேளையில் திடோலி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார், '' மாட்டிறைச்சி வெட்டியதாக  ரிஷ்வான் என்பவரை கைது செய்து ஜீப்பில் கொண்டு சென்ற போது குறுக்கிட்ட முகமது ஹாசீஃப், குற்றவாளியை விடுவிக்க முயற்சித்தார்.போலீசார் தடுத்தால், ஆக்ரோஷமடைந்த அவர், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப் பரத்வாஜையும் தாக்கியுள்ளார். எனவே அவரை கைது செய்தோம். கலவரங்களை தூண்டுவது, அரசு பணியாளரை கடமையை செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஜாமீனில் விடுவித்துள்ளோம் '' என தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!