மாரத்தானில் இரண்டாம் இடம் பிடித்த தோனி!

கொல்கத்தாவில் நடந்த மாரத்தான் தொடர் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார் தோனி.

‘ஆசிய கோப்பை விளையாட பங்களாதேஷ் சென்ற இந்திய கேப்டன் எப்படி மாரத்தான் ஜெயித்தார்?’ என்று குழம்ப வேண்டாம். இது எம்.எஸ்.தோனி அல்ல. பி.எஸ்.தோனி. ஆம், உத்தரகாண்டைச் சார்ந்த மாரத்தான் வீரர் பஹதுர் சிங் தோனி.

இந்திய தடகள சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட போட்டியான கொல்கத்தா மாரத்தான் நேற்று (6-ம் தேதி) நடைபெற்றது. எந்தவித டெக்னிக்கல் வசதிகளும் இன்றி, வீடியோ எடுக்கக்கூட யாருமின்றி, உயிரைக்கொடுத்து ஓடும் வீரர்களுக்கு தண்ணீர்கூட இல்லாமல்தான் நடைபெற்றது இந்தப் பந்தயம். இப்படி எந்தவித வசதிகளும் இல்லாத இப்போட்டியில், சர்வீசஸ் வீரர் முகம்மது யூனுஸ் 2 மணி, 30 நிமிடங்கள், 37 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார். அவரை விட வெறும் 10 நொடிகள் பின்தங்கிய பஹதுர் சிங் தோனி இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

இந்த தோனிக்கும், நமது கேப்டன் தோனிக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இந்த பஹதுர் சிங் தோனி உத்தரகாண்டைச் சார்ந்தவர். நமது தோனியின் பூர்வீகமும் உத்தரகாண்ட் தான். பி.எஸ்.தோனி புனே ஆர்மி ஸ்போர்ட்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் பயிற்சி பெறுபவர். நம் கேப்டன் தோனியும் தற்போது புனே ஐ.பி.எல் அணியை வழி நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

“நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். எல்லோரும் என்னிடம் அவரைப்பற்றிப் பேசுகையில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும். இந்தியாவின் தலைச்சிறந்த கேப்டனான அவர்,  என்னைக் காண ஒருநாள் வருவார் என்று எதிர்பார்க்கிறேன். அது ஒரு மாரத்தான் பந்தய பரிசளிப்பு விழாவில் நிகழ்ந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன்” என்று புன்னகைக்கிறார் பி.எஸ்.தோனி. தசை நாரில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறப்பாக ஓட முடியாத தோனி, ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பைத் தவறவிட்டார். தனது தாயையும் சமீபத்தில் இழந்து இரட்டைச் சோகத்தில் இருக்கும் தோனி, கூடிய விரைவில் மீண்டெழுந்து 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் களம் காணுவேன் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார். இவரது தனிப்பட்ட மாரத்தான் சாதனை 2 மணி நேரம், 19 நிமிடங்களில் பந்தயத்தை முடித்ததாகும்.

உயிரையும், உடலையும் சோதிக்கும் மாரத்தான் போட்டிகளில் இந்தியர்கள் பெரிய அளவில் சாதித்ததில்லை. இப்படி ஓடிக்கொண்டிருக்கும் பலருக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை. விளையாட்டு சங்கங்கள் அந்த வசதிகள் ஏற்படுத்தித் தருவதில் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் இதுபோன்ற வீரர்களை ரசிகர்களும் கவனிக்க வேண்டும். அப்போதுதான் ஒலிம்பிக்கிலும் ஒரு மாரத்தான் மெடல் கிடைக்கும்.

கவலைப்படாதீங்க பி.எஸ்.டி,  அந்த பேரே போதும் உங்கள உச்சிக்குக் கொண்டு போயிடும்!
   
மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவப் பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!