வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (01/06/2016)

கடைசி தொடர்பு:15:51 (01/06/2016)

'பீனிக்ஸ் பறவையாக மீண்டு வருவேன்...!'- தன்னம்பிக்கை தளராத தடகள நாயகி சாந்தி!

2006- ம் ஆண்டு, தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் பிரிவில், வெள்ளிப் பதக்கம் வாங்கியவர் சாந்தி. ஒரு பதக்கம் ஒருவரின் வாழ்க்கையை மாற்றிவிடும் என்பது அனைவரின் நம்பிக்கை. ஆனால் சாந்தி வாங்கிய பதக்கம், அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையை தலைகீழாய் புரட்டிப்போட்டு சின்னபின்னாமாக்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும். சூறாவளியில் சிக்கிய சருகாக அதிகார வர்க்கங்களால் அலைக்கழிக்கப்பட்டு, மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கையை நடத்தி வருகிற சூழலிலும், சிறிதும் மனம் தளராமல் அடுத்த வாய்ப்புக்காக தன்னை மெருகேற்றி  வருகிறார் தடகள வீராங்கனை சாந்தி.

யார் இந்த சாந்தி?

புதுக்கோட்டை மாவட்டம், காதகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சவுந்திரராஜன் என்பவரின் மூத்தப்பெண். செங்கல்சூளையில் கூலிக்கு வேலை பார்க்கும் அப்பாவுக்கு உதவப் போனவர், அங்கேயே தானும் வேலை செய்ய ஆரம்பித்தார். செங்கல் சூளையில் இருந்தவர், வீட்டுக்குச் செல்வதாக இருந்தால், நடந்து செல்லமாட்டார்; ஓட்டம்தான்! இவரின் ஓட்டம் வேகமாக இருப்பதைப் பார்த்த உள்ளூர் பிரமுகர்கள், சாந்தியைப் பற்றி பேச ஆரம்பித்தனர். உள்ளூர் கோச் ஒருவர், சாந்தியை முறைப்படி ஓட்டம் பழக அழைத்தார். அந்த தருணத்தில், வறுமையின் காரணமாக பள்ளியில் இருந்து இடை நிறுத்தம் செய்யும் அளவில் இருந்தார் சாந்தி. எனினும் ஓட்டத்தில் விடாப்பிடியாக இருந்த சாந்தியை, பள்ளிக்கு அழைத்து சென்று முறைப்படியான பயிற்சியும் கொடுத்தார்கள். புதுக்கோட்டையில் ஓடுவதற்கு சரியான இடம் இல்லை என்பதால், சாலையின் ஓரமாக ஓட ஆரம்பித்தார். விளைவு... நாளைடைவில் நாட்டின் புகழ்பெற்ற விளையாட்டு மைதானங்களில் எல்லாம் சாந்தியின் கால்கள் ஓடின.   ,

சாந்தியின் ஓட்டம் நிற்கவில்லை. ஒருபுறம் வறுமையும் வெறுமையும் சாந்தியை துரத்தினாலும் அவரோ அதைப் பொருட்படுத்தாமல், பதக்கங்களைக் குறிவைத்து ஓடிக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் தேசிய அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களும், சர்வதேச அளவில் பதினோரு  பதக்கங்களும் வாங்கி, தமிழகத்தின் தங்க மங்கையாக மிளிர்ந்தார். அவரது கல்லூரி காலத்தில், இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கிடையே நடந்த தடகளப் போட்டிகளில் சாந்தி ஏற்படுத்திய ரெக்கார்டை இன்றளவும் யாரும் ப்ரேக் செய்யவில்லை.


இப்படி எல்லாமே நன்றாக இருந்தும், சாந்தி எனும் கருப்பு தங்கமங்கையின் வாழ்வில் புயல் வீசத் துவங்கியது ஏன்?

2006 ல் தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 45  நாடுகள் கலந்து கொண்டன. இந்தியாவின் சார்பில் தடகளப் போட்டிக்கு சென்ற சாந்தி, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வாங்கி, இந்திய தேசியக்கொடியுடன்  கம்பீரமாக மைதானத்தை வலம் வந்தார். அவர் உடம்பில் கொட்டிய வெற்றியின் வியர்வை காயும் முன்பே அவர் மனதில் நெருப்பாய் இடியை பாய்ச்சினார்கள். சாந்தி வாங்கிய பதக்கத்தோடு அவரது உழைப்பு, கனவுகளையும் சிதைத்தார்கள்.

அதற்கு சொல்லப்பட்ட காரணம், ''பதக்கம் வாங்கிய சாந்தி ஒரு பெண் இல்லை. அவரது உடம்பில் ஆண் தன்மை அதிகமாக இருக்கிறது. ஆண்களுக்கான சுரப்பிகள் சுரக்கின்றன..." என்பதுதான். பெயர் இல்லாமல் வந்த மொட்டைக் கடிதாசி போல மொட்டைப் புகாரை கணக்கில் வைத்துக்கொண்டு சாந்தியை பாலின பரிசோதனைக்கு ஆட்படுத்தினார்கள். விளையாட்டுத் துறையில் தன்னை ஆண் என்று ஒரு ஆண் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒரு பெண் மட்டும் இங்கு தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயச் சூழல் இருக்கிறது.

பாதை மாற்றிய பாலியல் பரிசோதனை

சாந்தியை பத்து மருத்துவர்கள் பாலின பரிசோதனை செய்தனர். அதில் ஒருவர் மட்டும் பெண் மருத்துவர். இந்தியா சார்பில் சாந்தியுடன் சென்ற மருத்துவர், பரிசோதனை செய்யும் கூடத்தின் வெளியே காத்திருக்க, மற்ற ஆண் மருத்துவர்களின் முன்பு சாந்தியின் உடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தினார்கள். பரிசோதனை என்ற பெயரில் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அளவுக்கு கொடுமைகள் அரங்கேறின.  . கூனிக் குறுகி மிகுந்த அவமான உணர்வோடு வெளியே வந்தார் சாந்தி. இந்தியாவின் சார்பில் சென்ற அலுவலர்கள் எவரும் இதுகுறித்து வாய்திறக்கவில்லை.

2006- ல் இந்தியா பத்து தங்கங்கள், 17 வெள்ளி, 26 வெண்கலம் என்று மொத்தம் 53 பதக்கங்களை வாங்கி, எட்டாவது இடத்தில் இருந்தது. ஆனால் அதைப்பற்றிய பேச்சுகள் இல்லை; சாந்தியின் விஷயமே பெரிதும் பேசப்பட்டது. 2007- ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக சாந்தி வலம் வந்தார். 200- க்கும் மேற்பட்ட ஊடகங்களில், 300 மொழிகளில் சாந்தியின் நிலைமை குறித்து கட்டுரை எழுதினார்கள். முதல் முறையாக ஊடக அறிவியல் முறையில், பாலியல் பரிசோதனைகள் குறித்த அறிவியல் பூர்வமான செய்திகளை அலசத் தொடங்கினார்கள். ஆனாலும் சாந்தியின் நிலைமை மாறவில்லை.

முன்பெல்லாம் சாந்தி ஓடுவதைப் பார்க்க விளையாட்டு திடலில் கூடியக் கூட்டம், இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, அவரை வேறு கண்ணோட்டத்துடன் பார்க்கத் துவங்கியது. அவரின் காதுக்கு கேட்கும் படியாக  மோசமான வார்த்தைகளால் சுட்டுப் பொசுக்கினார்கள். சாந்திக்கு  ஆறுதலாக இருந்தது வெகுசிலரே. ஒருகட்டத்தில் தற்கொலைக்கும் முயற்சி செய்ய... பிறகு, காப்பாற்றப்பட்டார்.

சாந்தியின்  சான்றிதழ்கள், வளர்ந்த சூழல், பிறப்பு சான்றிதழ் என்று அனைத்திலும் அவர் ஒரு பெண்ணாகவே திகழ, விளையாட்டு உலகமோ அவரை  ஆண்தன்மை கொண்டவர் என்றது. தன்னை நிரூபிக்க அவர் ஏறாத படிகள் இல்லை சந்திக்காத பிரபலங்களும் இல்லை.

சர்வதேச அளவில் சாந்தியின் பெயர் பேசப்பட்டது. பல்வேறு நாடுகள் சாந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. ஆனால், இந்தியா சார்பில் யாரும் வாய் திறக்க முன் வரவில்லை. இந்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், விளையாட்டு ஆணையம், அதிகாரிகள் எவரும் சாந்தியின் நிலை குறித்து, சர்வதேச விளையாட்டு நீதிமன்றங்களில் முறையிட முன்வரவில்லை. தோகாவில் விளையாடிக்கொண்டிருந்த சாந்தியை, பாதியிலேயே இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியவர்கள்,  இங்கு வந்த பிறகு, அவர் வாங்கிய பதக்கங்களையும் பறித்துக் கொண்டனர்.

சாந்தியின் குடும்பத்தவர்கள் இலங்கையில் இருந்து வந்தவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகம். பொருளாதாரத்திலும்  பின்னடைந்தவர்கள். பெரிதாக எவரும் கைகொடுக்காத நிலையில், நண்பர்கள் சிலரது வழிகாட்டுதலின்படி, அப்போதைய சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான திருமாவளவனைச் சந்தித்து உதவி கோரினார். தனது பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப கேட்டுக்கொண்டார். மேலும் கனிமொழி, காமன்வெல்த் தலைவர் லலித் பினோத் ஆகியோரும் சாந்திக்காக்க பேசினார்கள். எனினும் பயன் இல்லை. நாட்டுக்காக ஓடியவரின் வாழ்க்கை பத்து ஆண்டுகளாகப் படுத்தே கிடக்கிறது.

சாந்தியை விளையாட தடை செய்த காரணம், அதற்கானச்  சான்றுகளைக் கேட்டால், அவை ரகசியமான ஆவணம் என்று வெளியிட தயங்குகிறது சர்வதேச ஒலிம்பிக் கழகம். ஆனால்,   'சாந்தி  பெண் இல்லை ஆண்' என்ற தகவல்களை ஊடகங்களில் கசியவிடும் வேலையை கனகச்சிதமாக செய்தது. இன்னமும்கூட, 'சாந்தியை இன்னும் அதிகாரப் பூர்வமாக தடை செய்யவில்லை' என்றே சொல்லி வருகிறது. ஆனால் சாந்தியின் ஃபைல்களை மட்டும் அப்படியே பத்து ஆண்டுகளாக கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது ஒரு குப்பையைப் போல.

சாந்தி மட்டுமல்ல,  உலக விளையாட்டுத் துறையில் இன்னும் பலரும்  இதுபோன்ற சர்ச்சைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டு வீரர்கள் சர்ச்சையில் சிக்கி மீண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் சாந்தி மட்டுமே இன்னும் மீளாமல் இருக்கிறார். இந்திய விளையாட்டு ஆணையம், அவரை  மயிலாடுதுறையில் தற்காலிக விளையாட்டு பயிற்சியாளராக நியமித்துள்ளது. ஆனால், 'இதுவும் பிரச்னைக்கான பரிகாரமாகாது; பிரச்னையில் இருந்து மீளும் முயற்சிக்கான தடையே...' என்கிறார்கள், சாந்தியின் நலனில் அக்கறை கொண்ட நடுநிலையாளர்கள்.

நான் மீண்டும் வருவேன்

  'ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் வருவேன்' என்கிற நம்பிக்கையில், மயிலாடுதுறையில் 60 க்கும் மேற்பட்ட தடகள வீரர்களை தயார்படுத்திக்கொண்டு,  தினசரி எட்டு கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி பயிற்சி எடுத்து வருகிறார் சாந்தி. அவர் மீது சுமத்தப்பட்ட களங்கம் இந்தியாவின் மீது சுமத்தப்பட்டது போன்றுதான்.  யார் நம் மீது  தெளிக்கப்பட்ட கறையை சுத்தம் செய்வது?தென்னாப்பிரிக்காவிலும் ஒரு சாந்தி!

காஸ்டர் செமன்யா - தென் ஆப்பிரிக்காவின்  தடகள வீராங்கனை.  2009-ல் உலக மகளிர் சாம்பியன் போட்டியில்,  800 மீட்டரில் தங்கம் வென்றவர்.  2011 மற்றும் 2012-ல் அதே 800 மீட்டர் ஓட்டத்தில்  வெள்ளி வென்றவர்.


2009-ல் கிடைத்த வெற்றிக்குப்பின்,  'இவரது வெற்றி செல்லாது. இவர் ஆண் தன்மையுள்ள நபர்' என்று சர்ச்சை கிளம்பியது. இவரையும் சாந்தியைப் போலவே பாலின சோதனைக்கு உட்படுத்தினார்கள். ஆண் தன்மை அதிகம் என்று கூறி, 2010 ஜூலை 6 வரை இவர் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதித்தனர். அப்போது இவருக்கு ஆதரவாக  சாந்தி குரல் கொடுத்தார்.  ''இன்னும் எத்தனை நபர்களை பலி வாங்க காத்திருக்கிறது சர்வதேச விளையாட்டு கழகம்?'' என்று உலகளாவிய பத்திரிகைகளுக்கு பேட்டிக் கொடுத்தார். உலகம் முழுவதும் காஸ்டர் செமன்யாவுக்கு ஆதரவு குவிந்தது.நெல்சன் மண்டேலா இந்த தகவலை கேட்டு கொதித்துப் போய் ஓர் அறிக்கை வெளியிட்டார். அது பெரும் விவாதத்தை எழுப்பியது.

“ காஸ்டர் செமான்யா தனியொருவர் அல்ல. அவர் தென் ஆப்பிரிக்காவின் இதயம். எங்கள் நாட்டின் நம்பிக்கை. ஒரு பெண்ணை பாலின பரிசோதனையின் மூலம் மட்டுமே பெண் என்று நிரூபிக்க முடியாது. இனியும் சொல்லப்போனால், இதை உலகளவில் கறுப்பினத்தவருக்கு எதிரான நிறப் பிரிவினையாகவே பார்க்க வேண்டியுள்ளது. எங்கள் நாட்டின் கௌரவம் பல்வேறு நாடுகளின் முன்பு ஆடை அவிழ்த்து பார்க்கப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். காஸ்டர் செமானியா மீது சுமத்தப்பட்ட களங்கம் எங்கள் நாட்டின் மீது சுமத்தப்பட்டது போல இருக்கிறது. இந்த களங்கத்தை போக்கவில்லை என்றால், இனி தென் ஆப்ரிக்கா விளையாட்டுத் துறைகளில் இருந்து வெளியேறும். பல்வேறு நாடுகளின் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ளும். காஸ்டர் செமான்யா மீண்டும் ஓடவேண்டும்'' என்று அறிக்கைவிடுத்தார். அத்துடன்,  உலக மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் ஒன்றையும் அளித்தது தென்னாப்பிரிக்கா.

மேலும் உலக மனித உரிமைகள் ஆணையம், உலக விளையாட்டு நீதிமன்றத்தை கேள்விகளால் துளைத்து எடுத்தது. இதனையடுத்தே " இனி பாலினப் பாகுபாடுகள் இருக்கக் கூடாது. எவருக்கும் பாலின சோதனைகள் நடத்தக் கூடாது" என்று தடை விதித்து சர்வதேச தடகள அமைப்பு, காஸ்ட்சர் செமான்யாவை மீண்டும் 2010 ஜூலை 6-க்கு பிறகு கலந்துகொள்ள அழைத்தது. 2012  ல் லண்டனில்  நடந்த ஒலிம்பிக் போட்டியில், காஸ்டர் செமன்யா தென் ஆப்ரிக்கா நாட்டின் கொடியினை பிடித்துக் கொண்டு ஒலிம்பிக் அரங்கில் கம்பீரமாக வலம் வந்தார்.


இது கனடா பிரச்னை!

கனடாவைச் சேர்ந்த  க்ரிஸ்டென் வொர்லி  என்பவரும் சர்வதேச  ஒலிம்பிக் சங்கத்தில்  சர்ச்சையில்  சிக்கியவர். இவர்  ஒரு  சைக்கிள் ஓட்டுநர். ஆணாக இருந்து அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறியவர். இந்த காரணத்தைக் காட்டி இவர் வாங்கிய  சர்வதேச மெடல்களை  பறித்துக்கொண்டனர்.  2004-க்கு பிறகு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சட்ட திட்டங்களால் இவரால் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. 2008-ல் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் சைக்ளிஸ்ட்டாக பங்கேற்பதற்கும் தடைவிதிக்கப்பட்டது.


இவர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மீது மனித உரிமை மீறல் நடவடிக்கையை கொண்டு வந்தார்.  தான் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பெண்ணாக கருதப்பட வேண்டும் என்று போராடி, இறுதியில் வெற்றியும் பெற்றார்.


மியான் பேகர்

டென்மார்க்கைச் சேர்ந்த இவரும் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர். கால்ஃப் விளையாட்டில் ஜொலித்தவர். 1966 டிசம்பர் 25-ல் பிறந்த இவர், 1979-ல் டென்மார்க்கிலிருந்து குடும்பத்துடன்  ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார். இவர் முதலில் அமெச்சூர் விளையாட்டு வீரராக இருந்து 2003-ல் ப்ரொஃபஷனலாக மாறி, 2004-ல் மகளிர் ஆஸ்திரேலிய ஓப்பனில் கலந்துகொண்டார்.  2004-ல் மகளிர் ஐரோப்பிய சுற்றுலா, மகளிர் கால்ஃப் விளையாட்டில் கலந்துகொண்ட முதல் திருநங்கையாவார். இன்று இவர் கால்ஃப் விளையாட்டில் சாம்பியனாக திகழ்கிறார்


 

சமீபத்திய உதாரணம் டியூடி ஷங். சாந்தியைப் போன்று  சர்ச்சையில் சிக்கி, மீண்டு வந்திருக்கிறார் ஒடிசாவை சேர்ந்த டியூடி ஷங். காமன்வெல்த் போட்டிகளில் 100  மீட்டர் தடகளத்தில் தங்கப்பதக்கம் வாங்கிய இவரையும் 'பெண் அல்ல' என்று கூறி பாலியல் பரிசோதனை செய்யச் சொல்லி வற்புறுத்தினர். ஒடிசா அரசு வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் இறங்கியது. இந்திய அரசை பெரிதும் நிர்பந்தப்படுத்தி அனைத்துலக நீதி மன்றத்தை நாடச்செய்தது.
 
விளையாட்டுக்கான மைய நீதிமன்றம்,   ஸ்விட்சர்லாந்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. சி.ஏ.எஸ். எனப்படும் இது, சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்து மற்றும் போதை மருந்துக்கான எதிர்ப்பு நாடுகள் அனைத்தும் இதில் கையெழுத்திட்டுள்ளன. இது,  1984 முதல் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் ஒரு அங்கமாக  செயல்படுகிறது. டியூடி ஷங்கின் வழக்கினை விசாரித்த நீதிமன்றம், அனைத்துல ஒலிம்பிக் சங்கத்தினை மிகவும் வன்மையாகக் கண்டித்தது. அத்துடன் நிற்காமல், 'ஒருவர் வெற்றி பெற்ற பிறகு அவர் பெண்தானா என்கிற கேள்வியை மையமாக வைத்து, இதுபோன்ற பிரச்சனைகள் இனியும் இங்கு வரக்கூடாது. நாகரீக காலத்தின் மிக மோசமான தண்டனையை ஒரு விளையாட்டு வீரருக்கு கொடுக்க கூடாது' என்று  கூறி, இனிமேல் இது போன்ற பாலியல் பரிசோதனைகளை தடை செய்வதாகவும் தீர்ப்பு வழங்கியது. இதனால் மீண்டும் களத்திற்கு வந்தார் ஷங். இப்பொழுது ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வில் மயிரிழையில் வாய்ப்பு இழந்தார்.

சண்.சரவணக்குமார்
படங்கள் : கே.ராஜசேகரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்