கரப்பான் பூச்சி ரேஸ் தெரியுமா ? | Cockroach Race

வெளியிடப்பட்ட நேரம்: 11:14 (02/06/2016)

கடைசி தொடர்பு:14:51 (02/06/2016)

கரப்பான் பூச்சி ரேஸ் தெரியுமா ?

நாய் பந்தயம், குதிரைப் பந்தயம், ஒட்டகப் பந்தயம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். கரப்பான் பூச்சிப் பந்தயம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது இந்த விநோதப் பந்தயம். வருடம்தோறும் ஜனவரி 26-ம் தேதியன்று  ஆஸ்திரேலியாவின், ஸ்டோரி பிரிட்ஜ் என்ற ஹோட்டலில் ஆஸ்திரேலியா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது கரப்பான் பூச்சி பந்தயம். ஆதியில் இரண்டு குடிகாரர்களால் நடத்தப்பட்ட  கரப்பான் பூச்சி பந்தயம், இன்று பெரியளவில் ஒரு  ஜாலி கொண்டாட்டமாக வருடா வருடம் ஜனவரி 26 அன்று தவறாமல் நடைபெறுகிறது.சுமார் நான்கு மீட்டர் பரப்பளவுதான் கரப்பான் பூச்சிகளுக்கான பந்தயக் களம். போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு கரப்பான் பூச்சியின் முதுகிலும் அடையாள எண் குறிப்பிடப்படும். போட்டி நடத்துவதைவிடவும், கரப்பான் பூச்சியின் முதுகில் அடையாள எண்ணை குறிப்பிடுவதுதான் பெரிய வேலை என்கிறது இப்போட்டியை நடத்தும் நிறுவனம். அடையாள எண்ணிடப்பட்ட கரப்பான் பூச்சிகளை, ஒரு பெரிய கண்ணாடிக் குவளையில் போட்டு எடுத்து வந்து, களத்தின் மையத்தில் கவிழ்ப்பார்கள். கரப்பான் பூச்சிகள் எந்த திசையிலும் ஓடலாம். ஆனால் பறக்கக் கூடாது. பறக்காமல் ஊர்ந்து வந்து,  வட்டத்தின் சுற்றெல்லையை எது முதலில் தொடுகிறதோ, அதுவே வின்னராக அறிவிக்கப்படும்.

இப்போட்டிக்கான நடுவர்கள், முதல் மூன்று கரப்பான் பூச்சிகளைப் பிடித்து போட்டியின் வெற்றியை உறுதி செய்வார்கள். ஒரு கரப்பான் பூச்சி ஒரு முறை மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும். போட்டிகளில் பங்கேற்க, வீடுகளில் உள்ள கரப்பான் பூச்சிகளையும் கொண்டு வரலாம். போட்டி நடக்கும் வளாகத்தில் போட்டிக்கென வளர்க்கப்பட்ட கரப்பான் பூச்சிகளை விலைக்கும் வாங்கலாம். ஒரு கரப்பான் பூச்சியின் விலை, ஐந்து டாலர்கள். போட்டியில் கலந்து கொள்வதற்கும் கட்டணம் உண்டு.  இப்பந்தயம் மூலம் கிடைக்கும் வருமானத்தின் பெரும்பகுதி, சமூக நல மேம்பாட்டுக்காக செலவிடப்படுகிறது என்பதுதான் ஹைலைட்டான விஷயம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்