விளையாட்டுத்துறை பெண்களுக்கு வெற்றி வித்தையை சொல்கிறார்கள் இவர்கள்! #மனிதிவெளியேவா #ManithiVeliyeVaa | Hurdles for Women in Sports

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (03/06/2016)

கடைசி தொடர்பு:12:11 (28/06/2016)

விளையாட்டுத்துறை பெண்களுக்கு வெற்றி வித்தையை சொல்கிறார்கள் இவர்கள்! #மனிதிவெளியேவா #ManithiVeliyeVaa

ந்த உலகம் எப்போதும் பெண்களின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டே இருக்கும். குறிப்பாக விளையாட்டில் உள்ள பெண்கள் பல்வேறு பிரச்னைகளை ஒருசேர சந்திக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்களை சமாளிக்க வேண்டி வரும். பெற்றோர்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டியது வரும். பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் தொடங்கி, 'ஹார்மோன் பிரச்னை என்று கூறி வெளியேற்றுவோம்' என்ற மிரட்டல்கள் வரை, யோசிக்க முடியாத அளவிலான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். மேலும் பொருளாதார சிக்கல்களும் வரும். ஆனால், அந்த தடைகளை நாம் தாண்டி வந்தாக வேண்டும்.

அப்படி தடைகள் யாவற்றையும் தாண்டி, பெண்கள் விளையாட்டுத்துறையில் எத்தனை சாதித்தாலும் இன்னும் சரியாக அங்கீகரிக்கப்படாமல்தான் இருக்கிறார்கள் என்பது நிதர்சனத்தை தாண்டிய உண்மை.

அதற்கான காரணங்கள் என்ன...மாற்றத்திற்கான வழிகள்... பெண்கள் விளையாட்டுத்துறையில் சந்திக்கும் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து  பிரபல தடகள பயிற்சியாளர் நாகராஜனிடம் பேசினேன்.


 

" விளையாட்டில் சாதிக்க வருபவர்கள்,  பெரும்பாலும் நாட்டின் கடைக்கோடியில் இருந்துதான் வருகிறார்கள். எந்த விளையாட்டில் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு நிச்சயம் சென்னை, மும்பை போன்ற இடங்களுக்கு பயிற்சிக்கு செல்வது அவசியமாகிறது. அங்கு சென்றால்,  ஆடையில் இருந்து எல்லா விஷயங்களும் அவர்களை பின்தங்க வைக்கிறது.

பெண் குழந்தைகளைப் பெற்று எடுப்பவர்களில் பெரும்பாலானோர், அவர்களை படிக்க வைத்து திருமணம் செய்து கொடுப்பதையே லட்சியமாக கொண்டு உள்ளனர். அதைத் தாண்டி அவர்களுக்கு திறமை இருந்தாலும் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வது இல்லை. அதற்கு பணமும் ஒரு முக்கிய காரணம். விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டுமானால், பயிற்சியாளரில் இருந்து சரியான உணவு எடுத்துக்கொள்வது வரை எல்லாவற்றிற்கும் பணம் அவசியம். ஆண் பிள்ளைகளின் கனவை நிவர்த்தி செய்வதில் காட்டும் அக்கறையை நூற்றில் ஒரு சதவீதத்தையே பெண் பிள்ளைகளின் கனவை நிவர்த்தி செய்வதில் காட்டுகின்றனர் பெற்றோர்கள். இதனால் நிறைய  வீராங்கனைகளின் திறமை மண்ணில் புதைக்கப்படுவதை கண்கூட பார்க்கிறோம்.

கிராமத்துப் பெண்கள் பல்வேறு விளையாட்டுத் துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களாக இருந்தாலும்,    சரியான பயிற்சியாளர்கள் கிடைப்பது இல்லை. அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பும் பெரிய அளவில் இருப்பது இல்லை. ஒரு வேளை வாய்ப்பு கிடைத்தாலும் இதுபோன்ற  போட்டிகளுக்கு செல்வதற்கான பயணச்செலவு  கட்டணங்களை கூட அரசாங்கம் ஏற்றுக்கொள்வது இல்லை. கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, மற்ற எல்லா விளையாட்டுகளுக்கும் கிடைத்தால் நிச்சயம் நிறைய வீரமங்கைகளை நாம் வெளிக்கொண்டு வர முடியும்.

இதுமட்டுமல்ல,  விளையாட்டுத்துறையில் இருக்கும் பெண்களை திருமணம் செய்து கொள்ளவே நிறைய ஆண்கள் மறுக்கிறார்கள். விளையாட்டு என்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்யமான ஒரு விஷயம். விளையாட்டில் இருக்கும் ஆண்களை எந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ள மறுப்பது இல்லை. விளையாட்டுத்துறையில் இருக்கும் பெண்கள், திருமணம் செய்து குழந்தைபெற்ற பின்னும் விளையாட்டில் நீடிக்கும் மேரிகோம் போன்ற பெண்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்.இதை முதலில் பெற்றோர்களும் உணர வேண்டும். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மற்றவர்களின் விமர்சனத்திற்கு பெண் பிள்ளைகளின் கனவை ஊனமாக்காதீர்கள் " என பொரிந்து தள்ளினார் நாகராஜன் .

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் மைதிலி:

" விளையாட்டில் இருக்கும் பெண்கள்,  உடல் ரீதியாக நிறைய பிரச்னைகளை எதிர்கொள்வதாக மருத்துவமனைக்கு வருகின்றனர். சில பெண்களின் வீட்டில், அவள் பெண் தன்மையை இழந்து விட்டாள்  என்றும் அழைத்துவருகிறார்கள். விளையாட்டு என்பது, சற்று உடல் உழைப்பு சார்ந்த கடினமான  ஒரு துறை. அதில் ஒரு பெண் ஈடுபட்டு பயிற்சி செய்யும்போது அவளுடைய தோல் எலும்புகள் உறுதி அடைந்து,  மிருதுத்தன்மையை இழக்க வாய்ப்பு உள்ளது என்பது மட்டும்தான் உண்மை. மற்றபடி அனைத்து பிரச்னைகளும் ஆண்கள், பெண்கள் எல்லோருக்கும் இயல்பான ஒன்று என்பதை  புரிந்து கொள்வது அவசியம்.

மேலும் குழந்தை பெற்றுக்கொள்வதில் பிரச்னைகள் ஏற்படும் போன்ற தவறான வதந்திகளும் நம் சமூகத்தில் உள்ளன. இவையெல்லாம் உடைத்து எறியக்கூடிய பிரச்னைகளே. எனினும் விளையாட்டில் இருக்கும் பெண்கள், சிறிது கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம். சரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய் காலத்தை தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை அடிக்கடி உபயோகப்படுத்தாதீர்கள். பயிற்சிகளை ஒரே நாளில் செய்வதை தவிர்க்கவும். அதிக பயிற்சி, உடலில் இருக்கும் ஆற்றலை குறைக்க வாய்ப்பு உண்டு. எனவே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தால் அதற்கு உடல் பழக்கப்பட்டுவிடும். பாதிப்புகளும் இருக்காது. மற்றபடி மற்ற துறைகள் போன்று விளையாட்டும் ஒரு துறையே என்பதை மனதில் கொண்டு தடைகளை ஆற்றலுடன் தாண்டிச் செல்லுங்கள்."

நியூட்ரிஷியன் ஷைனி சந்திரன்:


"விளையாட்டில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் நிறைய பிரச்னைகளுக்கு அவர்கள் சரியாக உணவுகளை எடுத்துக்கொள்ளாததே காரணம். ஒவ்வொருவரும், அவர்கள் விளையாடும் நேரம் மற்றும் சீதோஷ்ண  நிலையை பொறுத்து உணவும் தண்ணீரும் கண்டிப்பாக எடுத்துக்கொள்ளவேண்டும். பால், தயிர், நெத்திலி, முட்டை, சுண்டல் வகைகள், கீரைகள்,  கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது .

தினமும் 5 முதல் 10 பாதாம் பருப்புகள் சாப்பிடுவது நல்லது. விளையாட்டுக்காக அதிகப்படியான டயட் இருந்து உடலைக் கெடுத்துக்கொள்ளாமல், ஏதேனும் ஒரு டயட்டீசியனின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. அதேபோன்று விளையாடி முடித்ததும், எலுமிச்சை சாறுடன் உப்பு, சர்க்கரை கலந்து ஜூஸாக குடிக்கலாம். ரத்ததை சுத்திகரிக்கும் பழங்களான மாதுளை, ஆரஞ்சு போன்ற பழங்களை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். விளையாடப்போகும் 2 மணிநேரத்திற்கு முன் அரை லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். சூப் வகைகளும் அடிக்கடி எடுத்துகொள்ளலாம். இதனை பின்பற்றுவது  மூலம்  உடலின் ஆரோக்யத்தில் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம் என்பதைத் தாண்டி உங்கள் இலக்கை நோக்கியும் பயனிக்க முடியும்."

உதறித் தள்ளு பெண்ணே ! (கவிஞர் சல்மா)

"பெண்களை எப்பவும் முன்னேற விடாமல் தடுக்க இந்த சமுதாயம் உடை, கலாச்சாரம், உடல் வலிமை...ன்னு ஏதாவது ஒன்றை முன்வைத்துக்கொண்டேதான் இருக்கும். அதுவும் விளையாட்டுத்துறையில் இருக்கும் பெண்கள், இந்த அத்தனை பிரச்னைகளையும் ஒரு சேர எதி கொள்கின்றனர். சானியா மிர்சாவின் திறமையை பாராட்டத் தெரியாத இந்த சமுதாயத்திற்கு, அவரின் உடையை இகழத் தெரிந்தது. இன்னும் எத்தனை சானியா மிர்சாக்களை ஆணி வேரிலேயே  வெட்டி எறிந்ததோ இந்த சமுதாயம்..?

இவர்களின் ஏளனப்பேச்சுகளுக்கு பயந்தே,ம் நிறைய பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை விளையாட அனுப்புவதே இல்லை. உண்மையில் விளையாட்டு என்பது ஆரோக்யமான ஒரு விஷயமே. விளையாட்டுத்துறையை பொறுத்தவரை உடல் பலம் அதிகமாக இருக்கவேண்டும் என்பார்கள். ஆனால் மனவலிமைதான் நம் சமுதாயத்தில் அதிகமாக தேவைப்படுகிறது. மற்றவர்களின் கருத்துக்களை உதறித்தள்ளி விட்டு, கவனத்தை முழுவது, ஒரு நிலைப்படுத்தி வெற்றி பெறும்போது உங்களின் சாதனையை உயர்த்திப் பேசும் உள்ளங்கள் நிச்சயம் இருக்கும். உங்கள் உடலை பிஃட்டாகவும் ஆரோக்யமாகவும் வைத்துக்கொண்டு துணிந்து களத்தில் இறங்குங்கள்."

பொண்ணுனாலே போராட்டம்தான்!   -  ரித்திகா சிங்:


" என் பெற்றோர்கள்  எனக்கு சின்னச் சின்ன விஷயத்தில் கூட நிறைய ஊக்கம் கொடுத்தாங்க. அதுவே மிகப்பெரிய உந்து சக்தியா எனக்கு இருந்துச்சு. ஆனால் நிறைய பெண்கள் தங்களை நிரூபித்துக்கொள்ளவே போராட வேண்டியிருக்கும். ஏழையா இருந்தாலும், விளையாட்டில் சாதிக்கலாம் என்பதெல்லாம் படத்திற்கு மட்டும்தான் சாத்தியமாகும். ஆனால் உண்மையில் ஸ்போர்ட்ஸில் பெரிய அளவில் வரணும்னா நிறைய பணம் தேவை என்பதுதான் உண்மை. பணம் இருந்தால்தான் நல்ல பயிற்சியாளர் கிடைப்பாங்க. அப்போதான் நம்மை நாம் ஷார்ப் பண்ணிக்க முடியும். அதைத்தாண்டி நல்ல மைதானங்கள் இருப்பது இல்லை. ஒரு ஆணாக  இருந்தால் காலை 4 மணிக்கு கூட தெருக்களில் ஓடி பயிற்சி செய்ய முடியும். ஆனால் பெண்களுக்கு இது சாத்தியமே இல்லை. இதனை நம் சமுதாயத்திற்கும் புரிய வைக்க முடியாது. உடல் ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்னைகளைக் கூட தாங்கிக் கொள்ளலாம். ஆனால் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் தரும் ஏளனப்பேச்சுகள் தரும் மனஅளவிலான பாதிப்புகள் நம் முன்னேற்றத்தில் தேக்கத்தை ஏற்படுத்தும்.

விளையாட்டுத் துறையில் பெண்கள் சாதிக்கவே முடியாது என்ற நிலையும், அதுவும் ஏழைப் பெண்கள் கனவு மட்டுமே காண முடியும் என்ற நிலையும் இந்த சமூகத்தில் இருந்து அகல வேண்டும். அதற்கு அரசு  ஆவண செய்ய வேண்டும் . மனிதிகள் தலை நிமிரட்டும்!

- சு.சூர்யா கோமதி.
படங்கள் :
என்.ஜி மணிகண்டன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்