வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (04/06/2016)

கடைசி தொடர்பு:15:17 (04/06/2016)

சென்னையில் இப்படி ஒரு குளம் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

காலை 6 மணி... பொழுது புலரும் நேரம். பெரிய... குளம் போன்ற நீர்த்தேக்கத்தில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். 'குளங்கள், நீர்த்தேக்கங்கலையே பார்க்க முடியாத பகுதியில் இப்படி ஒரு நீர்த்தேக்கமா...?' என்று யோசிக்கவும் வியக்கவும் வைத்தன அந்தக் குளமும் அதன் சூழலும்!

'இப்படியொரு பெரியளவிலான ஓப்பன் நீச்சல் குளம் எந்த கிராமத்துல இருக்கு...?' என்று நீங்கள் யோசிக்க ஆரம்பித்தீர்கள் என்றால்... சாரி பாஸ், உங்கள் யூகம் தவறு. இந்தக் குளம் இருப்பது சாட்சாத் சென்னையில்தான்

 

சென்னை, மேடவாக்கத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள ஒட்டியப்பாக்கத்தில்தான் இருக்கிறது இந்த நீச்சல் குளம்.  குளத்தின் நீளம் சுமார் 150 அடி , அகலம் சுமார் 80 அடி. ஆழம் எவ்வளவு என்பதை துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. குளத்தில் பகுதிக்குப் பகுதி மாறுபடுகிறது ஆழத்தின் அளவு.

கார்களிலும், பைக்குகளிலும் சர் சர்..ரென வந்து தங்களது வாகனங்களை விட்டுவிட்டு மின்னல் வேகத்தில் நீச்சல் உடைகளில் மாறி நீச்ச்சலுக்குத் தயாராகிறார்கள் நீச்சல் வீரர், வீராங்கனைகள். இவர்களில் தொழில் முனைவோர்கள், ஐ.டி கம்பெனியிலும் பிற கம்பெனிகளிலும் பணிபுரிபவர்கள், கல்லூரி மாணவர்கள் என சகலதரப்பினரும் உண்டு.


 

இன்றைக்கு சுமார் அறுபது, எழுபதுபேர் இங்கு வருகிறார்கள் என்றால், அவர்களுக்கு இந்த குளத்தை அறிமுகப்படுத்தியது, வெளிநாட்டைச்சேர்ந்த  ஒருவர் என்பது இன்னும் சுவாரஸ்யம். சி.டி.சி எனப்படும் சென்னை ட்ரக்கிங்க் கிளப்பின்  ஒருங்கிணைப்பாளரான, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர்தான் இந்தக் குளத்தைக் கண்டறிந்து, நீச்சல் வீரர்களின் துணையோடு இக் குளத்தை சுத்தப்படுத்தி,  தூய்மையான தண்ணீராக மாற்றியதோடு, நீச்சலில் ஆர்வமுள்ளவர்களுக்கு நீச்சல் பயிற்சியும் கற்றுக் கொடுத்து வருகிறார். வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை நீச்சல் அடித்துப் பழகுகின்றனர் நீச்சல் வீரர், வீராங்கனைகள்.


சி.டி.சி சார்பாக ஒவ்வொரு வருடமும் ஜூலை மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் நீச்சல் போட்டி நடைபெறும். இதே நீச்சல் குளத்தில்தான் போட்டியும் நடைபெறும். கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து இதே நீச்சல் குளத்தில் நடந்து வருகிறது நீச்சல் போட்டி. அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நீச்சல் போட்டிக்காகத்தான் இந்த பயிற்சி.


நீச்சல் பயிற்சியில் தீவிரமாக இருந்த ஈக்காட்டுத்தாங்கலைச்  சேர்ந்த அகமதுவிடம் பேசினோம்.

''நான் ஒரு தனியார் கம்பெனியில எச்.ஆர் ரெக்ரூட்டரா வேலை பார்த்துட்டு இருக்கேன். கடந்த ரெண்டு வருஷமா இந்த நீச்சல் குளத்துல நீச்சல் பழகிட்டு இருக்கேன். சென்னை சி.டி.சி கிளப் மூலமா பல விளையாட்டுக்கள்  நடக்கும். அதுல ஒண்ணுதான் நீச்சல் போட்டி.  நீச்சல் கத்துக்குறதுக்காக வாரத்துல ரெண்டு நாள் இங்க வருவேன்.  காலையில 6 மணியில இருந்து 7.30 மணி வரைக்கும் ஒன்றரை மணி நேரம் நீச்சலடிப்போம். அதுக்கப்புறம் அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பிடுவோம். ஆனா நானும் என்னோட நண்பரும் 5 மணிக்கெல்லாம் வந்து இந்தக் குளத்தோட ஒரு முனைக்கும் அடுத்த முனைக்கும் கயிறு கட்டுவோம். புதுசா நீச்சல் கத்துக்குறவங்களுக்கும்,  நீந்திக்கிட்டிருக்கும் போது இளைப்பாறதுக்கும் இந்தக் கயிறு உதவியா இருக்கும்.  '' என்றார். 

ஐ.டி கம்பெனி ஊழியரான வானதி, ''நான் ரெண்டு மாசமாத்தான் இந்த நீச்சல் குளத்துக்கு நீச்சல் கத்துக்க வர்றேன். நான் இன்னும் கத்துக்குட்டிதான். ஆரம்பத்துல பயந்தேன். ஆனா போகப் போக பழகிடுச்சு. நீந்தும் போது மூச்சு முட்டினாலோ, நீச்சல் அடிக்க முடியாட்டாலோ 'ஹெல்ப்'னு சத்தமாச் சொன்னாலே போதும். யாராவது வந்து உடனே நம்மளை கரைக்கு கொண்டு வந்துடுவாங்க. சீனியர்ஸ் நிறைய பேரு இருக்குறதுனால ஈஸியா நீச்சல் கத்துக்க முடியுது. கை, காலை எப்படி அசைக்கணும்கறதுல தொடங்கி நீச்சல் டிப்ஸ் வரை எல்லாமே  ரொம்பத் தெளிவா சொல்லிக் கொடுப்பாங்க.'' என்றவர், ‘‘டிரையத்தலான் போட்டியில் 'அயர்ன் மென்' பட்டம் வாங்கினவங்க இவங்க’’ என்று ஈஸ்வரி என்ற பெண்ணை நம்மிடம் அறிமுகப்படுத்தினார்.


நீச்சல் கண்ணாடியை கழட்டி விட்டு நம்மிடம் பேசத் தொடங்கினார் ஈஸ்வரி. '' நான் ஐ.டி கம்பெனியில புராஜக்ட் மேனேஜரா வொர்க் பண்ணிக்கிட்டிருக்கேன். எனக்கும் நீச்சலுக்கும் சம்மந்தமே இல்லை. ஆறு, குளத்தைப் பார்த்தாலே பயம். எனக்கு ரெண்டு குழந்தைகள் இருக்காங்க. என் பையன், இரண்டு வருசத்துக்கு முன்னால சுவாசப் பிரச்னையால மூச்சு விட முடியாம ரொம்ப கஷ்டப்பட்டான். டாக்டர்கிட்ட காட்டி கேட்டதுக்கு, 'சுவாசப்பைகள் சரியா சுருங்கி விரியல.  ஏதாவது ஒரு வகை உடற்பயிற்சியை  தொடர்ந்து செய்யணும்' னு சொன்னார். முதலில் நீச்சல் பயிற்சி வகுப்புல அவனை சேர்த்துவிட்டேன். 'நீயும் கூட வந்தாத்தான் நான் நீச்சல் கிளாஸுக்கு போவேன்'னு ரொம்ப அடம் பிடிச்சான். என் பையனுக்காக நானும் நீச்சல் கத்துக்க ஆரம்பிச்சேன். நீச்சல் பயிற்சி செய்யத் தொடங்கிய ஆறு மாசத்துலயே சுவாசப் பிரச்னையும் சரியானது. அதுக்குப் பிறகும் தொடர்ந்து நீச்சல் பயிற்சிக்கு போனோம்.’’ என்றவர் சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தார்.


நீச்சலோட மட்டும் இல்லாம வேளச்சேரியில் உள்ள 'வைப் ரன்ட்' என்ற விளையாட்டுக் குழுவில் இணைந்து  ஸ்கேட்டிங், சைக்கிளிங்னு எல்லா விளையாட்டுக்களையும் விளையாட ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில் என்னோட எடை 78 கிலோ இருந்துச்சு. நீச்சல் விளையாட விளையாட உடல் எடையும் குறைய ஆரம்பிச்சுடுச்சு. இப்போ 60 கிலோதான் இருக்கேன். உடல் எடையைக் குறைக்க நீச்சல் சிறந்த பயிற்சி. என்னோட ப்ரெண்ட்ஸ் மூலமாத்தான் சி.டி.சி யோட அறிமுகம் கிடைச்சுது. ஒன்றரை வருசமா இந்த குளத்துக்கு நீச்சலடிக்க வர்றேன். போன வருசம் நடந்த டிரையத்தலான் போட்டியில நீச்சல், ரன்னிங், சைக்கிளிங் ஆகிய மூன்று போட்டிகளிலயும் குறிப்பிட்ட நேரத்துக்குள்ள வந்து ''அயர்ன் மென்'' (இரும்பு மனிதன்) பட்டத்தை வாங்கியிருக்கேன். அயர்ன் மென் பட்டம் வாங்கிய முதல் பெண் நான்தான். இதுக்குக் காரணம் என்னோட முயற்சிதான். முதலில் 3.9 கி.மீ தூரம் நீச்சல் அடித்துவிட்டு, தொடர்ந்து 180 கி.மீ தூரம் சைக்கிளிங் போயிட்டு, இடைவெளி இல்லாம 42.2 கி.மீ தூரம் ஓட்டம் ஓடி வரணும். இந்த மூன்று போட்டியையும் 22 மணி  நேரத்துல முடிக்கணும்கிறதுதான் போட்டியோட விதி. ஆனா நான்,  20 மணி 30 நிமிடங்களில் முடிச்சேன்'' என்றார்.

நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே அருகில் வந்து நட்புடன் தோளில் கைபோட்ட படி ‘’ நீச்சலில் உங்களுக்கு இன்ட்ரஸ்ட் உண்டா’’ எனக் கேட்டார் பீட்டர்

‘’நிறைய உண்டு’’ என்று பதில் கூறியதோடு,  "நீங்கள் சொல்லுங்கள்... உங்களைப் பற்றி,  இந்தக் குளத்தைப் பற்றி" என்ற கேள்வியை  முன்வைத்தோம்.


''பெல்ஜியம்தான் என்னோட தாய்நாடு. சவுத் இந்தியாவுல சென்னை எனக்கு ரொம்ப பிடிச்ச இடம். பெல்ஜியத்துல இருந்து இந்தியாவுக்கு வந்து 20 வருசம் ஆகுது. ஐ.டி கம்பெனிகளில் வேலை பார்த்தேன். 8 வருசத்துக்கு முன்னால் சென்னையில ஒரு டிரக்கிங் கிளப் உருவாக்கினோம். நான் அதோட ஒருங்கிணைப்பாளரா இருக்கேன். ஒவ்வொரு இடமா பைக்குல சுத்துறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படி இரண்டு வருசத்துக்கு முன்னால சென்னையில சுத்தி வரும் போதுதான் இப்படி ஒரு குளம் இருக்குறதே எனக்குத் தெரியும். நான் பார்க்கும்போது பிளாஸ்டிக், பாட்டில்கள், தெர்மாக்கோல்கள்னு குப்பைகள் சூழ்ந்து இருந்துச்சு இந்தக் குளம். அதை சி.டி.சி யில் உள்ள நீச்சல் வீரர்களை வச்சே சுத்தப்படுத்தினேன். அதுல இருந்து இங்கே நீச்சலுக்காக வர்றோம். ஆரம்பத்துல வாரத்துக்கு மூணு நாள், நாலு நாள் வந்தோம். வேலைகள், கமிட்மென்ட் இருந்ததுனால வாரத்துக்கு ரெண்டு நாள் மட்டும் வர்றோம்.’’ என்றவர்,  சிடிசியில் நடக்கும் விளையாட்டுகள் பற்றியும் விவரித்தார்.


‘’ சி.டி.சியில் நீச்சல் மட்டும் இல்லாம எல்லா வகையான விளையாட்டுகளும் உண்டு. ஆனா, நீச்சல் பயிற்சி அதிகமா நடக்கும். நீச்சல் தெரிஞ்ச யாரு வேண்டுமானாலும் இங்கே நீச்சலடிக்கலாம். நீச்சல் பழகுறது ஈஸியான விஷயம்தான். அதற்கு  ஆர்வமும், தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும். வழக்கமான நீச்சல் குளங்களில் நீளம், அகலம், ஆழம் எல்லாமே குறிப்பிட்ட அளவுதான் இருக்கும். ஆனா, இந்தக் குளத்தின் நீளம், அகலம், ஆழம் சற்று அதிகமாக இருப்பதால் பெரிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பயிற்சி எடுப்பது சுலபம்.சி.டி.சி சார்பாக நடக்கும் டிரையத்தலான் போட்டிகள்  ஒவ்வொரு வருடமும் ஜூலை, டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் நடக்கும். அடுத்த மாதம் (ஜூலை) 9ம் தேதிக்கான போட்டிகளில் கலந்து கொள்ளத்தான் இப்போ எல்லாருமே தீவிர பயிற்சி எடுத்துட்டு இருக்காங்க. டிரையத்தலான் போட்டிகள் வெளிநாடுகளில்தான் பிரபலம். இந்தியாவின் வெப்பநிலை, காலநிலை சரியாக இல்லாததுனால கோவா, பெங்களூர், ஐதராபாத்னு சில இடங்களில் மட்டும்தான் நடத்திக்கிட்டிருக்காங்க. ஆரம்பத்தில் 10 பேர் மட்டும் வரத் தொடங்கினார்கள். ஆனா,  இன்று வாரம் இரு தினங்களில் நீந்த வருபவர்கள் எண்ணிக்கை 60.  நீச்சல் மட்டும் இல்லாம சமுதாயத்துக்கும் நம்மாள முடிஞ்ச ஏதாவது செய்யணும். அதனால சி.டி.சி மெம்பர்ஸ், கல்லூரி, பள்ளி மாணவர்கள் எல்லாம் மொத்தம் 8000 பேர் சேர்ந்து, வர்ற ஜூன்  9-ம் தேதி மெரீனா கடற்கரை முதல் ஈஞ்சம்பாக்கம் வரை ரோடு பகுதியில் சுத்தம் செய்யப் போறோம். '' என்றவர்,  அதே உற்சாகத்துடன், நீச்சலுக்குத் தயாரான சிறுவனுக்குப் பயிற்சியளிக்கப் புறப்பட்டார்.

 அவரது உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ள, நாமும் தயாரானோம் நீச்சலுக்கு!

- இ.கார்த்திகேயன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், பா.காளிமுத்து

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்