பதவிக்கு அலைபவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு மனிதர்!

டந்த உலகக் கோப்பைத் தொடர் முடிந்ததில் இருந்தே இந்திய கிரிக்கெட் அணி, பயிற்சியாளர் இல்லாமல்தான் விளையாடி வருகிறது. ரவி சாஸ்திரி தற்காலிக பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இந்திய அணிக்கு சரியான, திறமையான பயிற்சியாளரைத் தேர்வு செய்ய, பிசிசிஐ  முன்னாள் வீரர்கள் கங்குலி, சச்சின் , வி.வி.எஸ். லக்ஷ்மண் அடங்கிய குழுவை அறிவுரையாளர்களாக நியமித்திருந்தது.

ஒரு ஆண்டு காலமாக காலியாகவுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பத்திருந்தனர். இதில் ஒரு கேலிக் கூத்தும் நடந்தது. இதுவரை இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்து வந்த சந்தீப் பாட்டீலின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், அவரும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்.

முன்னாள் இந்திய வீரர்களும், வெளிநாட்டுப் பயிற்சியாளர்களும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், பந்துவீச்சில் மட்டுமே அசத்தும் அனில் கும்ப்ளே, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கும்ப்ளே சரியானத் தேர்வா என்ற கேள்வி ஒருபுறம் எழுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க  ராகுல் டிராவிட் மறுத்து விட்டதாக பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் '' பிசிசிஐயின் முதல் தேர்வாக ராகுல் டிராவிட்தான் இருந்தார்.
ராகுல் டிராவிட் மீது எனக்கு அளவற்ற மதிப்பு உண்டு. இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க வேண்டுமென்று அவரிடம் நான் கேட்டுக் கொண்டேன். ராகுல் டிராவிட் மறுக்கவில்லை. ஆனால் இளம் வீரர்களிடத்திலேயே பணி புரிவதில் அவர் ஆர்வம் காட்டினார், பணம் , பதவி பற்றி அவர் கவலைப்படவில்லை. 

தனது குடும்பத்தினரை பற்றியும் ராகுல் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். 'என்னால் நீண்ட நாட்களுக்கு குடும்பத்தினரை விட்டு பிரிந்திருக்க முடியாது. குறுகிய காலத்திற்கு வேண்டுமானால், இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கிறேன்' என்று ராகுல் பின்னர் கூறினார் என தெரிவித்தார்.

இதுவரை இந்திய கிரிக்கெட் அணியை நான்கு  முன்னாள் வீரர்கள் இயக்கி வந்தனர். இந்த நிலையில் அணில் கும்ப்ளேவும் சீனியர் அணிக்கு  பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பதால், தற்போது இது 'பஞ்சபாண்டவர்கள்' அணியாக கருதப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!