ஜூலை 13, 2002 இரவும், லார்ட்ஸ் மைதானமும் #LordsBalconyMemories

ஒரே ஒரு 50 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்திய கிரிக்கெட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் என்றால் நம்புவீர்களா? ஆனால் நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும். ஜூலை13,2002 அன்று இரவு 12 மணிக்கு இந்தியாவில் விழித்திருந்த அனைவருமே பாக்கியசாலிகள், ஆம் ஜூலை 13ம் தேதி வழக்கமான மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டிதான் அன்றும் நடந்தது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து பங்கேற்ற நாட்வெஸ்ட் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் கிரிக்கெட்டின் மெக்கா என புகழப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் மோதின.

முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது ஆட்டம் ஆரம்பித்த ஏழாவது ஓவரில் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார் நிக் நைட். இந்திய அணி தன் வெற்றியை துவங்கிவிட்டது. கோப்பை நமக்கு தான் என ஆர்பரித்த ரசிகர்களுக்கு கவலை அளித்தனர். அப்போதைய கேப்டன் நாசர் ஹுசைனும், மார்க்கஸ் ட்ரஸ்கோத்திக்கும் 30 ஓவர்கள் ஆடிய அவர்கள் 180 ரன்களுக்கு மேல் பட்னர்ஷிப்பை ஏர்படுத்தினர், இருவரும் சதமடிக்க பிளின்ட்டாப் அதிரடி 40 ரன்னில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 325 ரன்களை குவித்தது.

அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் ஆட்டத்தை துவக்கிய சேவாக், கங்குலி இணை 14.3 ஓவரில் 106 ரன்கள் குவித்தது. முதலாவது விக்கெட்டாக கங்குலி ஆட்டமிழக்க அடுத்த 40 ரன்களை குவிப்பதற்குள் இந்திய அணி சேவாக், டிராவிட்,சச்சினை இழந்தது இந்தியா. இந்தியர்களிடம் உள்ள வழக்கமான அணுகுமுறை தான் அன்றும் நடந்தது. சச்சின் ஆட்டமிழந்தவுடன் டிவியை அணைத்துவிட்டு தூங்க சென்றவர்கள் தான்  அதிகம். ஆனால் அவர்களுக்குத்தான் நிஜத்தில் அதிர்ஷ்டமில்லை.

இந்திய அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்தாலும் இந்திய ரசிகர்களில் சிலர், "இந்தியா ஜெயிக்கும்.. ஏன்? எப்படி என்றெல்லாம் தெரியாது.. ஆனால் ஜெயிக்கும்!" என்றனர். அவர்களை பார்த்து சிரித்துவிட்டு தூங்க சென்றனர்.அதன் பின் நடந்ததுதான் வரலாறு. மறுநாள் காலை செய்திகளை படித்த பின்னர்,  ரீடெலிகாஸ்ட்டையும், ஹைலைட்ஸையும் பார்த்தவர்கள் அதிகம்.

யுவராஜ் சிங், முகமது கைப் இந்த இரண்டு வீரர்கள் அவ்வளவாக இந்திய அணியில் பெரிதும் பேசப்படாத வீரர்கள். களமிறங்கியபோது இந்தியா 25 ஓவர்களில் கிட்டத்தட்ட 180 ரன்கள் குவிக்க வேண்டும். கடைசியாக கையில் இருப்பது 5 விக்கெட்டுகள். இந்தியாவின் இறுதிப்போட்டி தோல்வி தொடரப்போகிறது என்று பார்த்தால் இவர்கள் இருவரும் இணைந்து 121 ரன்கள் பாட்னர்ஷிப். யுவராஜ் அவுட் ஆக மீண்டும் ஆட்டம் இங்கிலாந்து வசம் திரும்பியது.

கடைசி ஓவரில் த்ரில் அதிகரித்தது. எதிர் முனையில்  கைப் பந்தை எதிர் கொள்ளும் ஜாகிர் கான், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வாரா என்ற பயம்.இங்கிலாந்து வீரர்கள் ரன் அவுட் வாய்ப்பை தவற விட்டதும் இன்றி ஓவர் த்ரோ ஆக இந்திய வீரர்கள் ஓடியே வெற்றி ரன்களை 3 பந்துகள் மீதமிருக்கையில் சுவைத்தனர். 

அடுத்த நொடி அனைவரது பார்வையும் வீரர்களையும் ஆடுகளத்தையும் தாண்டி லார்ட்ஸ் பால்கனிக்கு திரும்பியது. அனைவரது கண்களிலும் ஆச்சர்யம் .ஆம் இந்திய கேப்டன் கங்குலி தன் டி ஷர்ட்டை கழட்டி சுற்றியபடி வெற்றியை கொண்டாடினார். இதுவரை லார்ட்ஸ் மைதான பால்கனியின் அழிக்க முடியாத அடையாளமாக இந்த நிகழ்வு உள்ளது. அந்த நிகழ்வுக்கு பின்னர்தான் இந்திய அணி புத்துயிர் பெற்றது. இதற்கு முன்பு 1983ம் ஆண்டு இதே லார்ட்ஸ் பால்கனியில் இந்தியா உலக சாம்பியனாக கபில்தேவ் கையில் கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தது. அதற்கு இணையான நிகழ்வாக இது அமைந்தது.

இங்கிலாந்து லெஜெண்ட் பாய்காட், “ என்ன தான் இருந்தாலும் லார்ட்ஸ் கிரிக்கெட்டின் மெக்கா. அங்கு இப்படி சட்டையை சுழற்றலாமா?” என்று கங்குலியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு “லார்ட்ஸ் உங்களுக்கு மெக்கா என்றால், வான்கடே தான் எங்களுக்கு மெக்கா என்று ஃப்ளின்டாப்பை நினைவு கூர்ந்து அளித்த  கவுன்டர் தாதாவின் எவர்கிரீன் ஸ்பெஷல். இந்த போட்டி தான் இந்தியாவை இளம் அணியாகவும், சச்சின், கங்குலி, ட்ராவிட் இல்லையென்றாலும் போட்டிகளை வெல்லும் வீரர்கள் அணியில் உள்ளனர் என அடையாளம் காட்டியது. அடுத்த வருடம் சட்டையை சுழற்ற இந்திய கேப்டன்கள் கோலி, தோனி இருவருக்குமே வாய்ப்புள்ளது...வரலாற்று நிகழ்வுக்காக காத்திருப்போம்.

ச.ஸ்ரீராம்

ஜூலை 13,2002 அன்று இரவு கண்விழித்து இந்த போட்டியை பார்த்தவர்கள் உங்கள் அனுபவத்தை கமெண்ட்டில் பகிருங்கள்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!