சர்வதேச தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: உலக சாதனை படைத்தார் நீரஜ்!

போலந்தில் சர்வதேச தடகள சம்மேளனம் சார்பாக நடத்தப்பட்டு வரும் ஜுனியர் தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் பிரிவில் உலக சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.
 

போலந்தின் பிட்கோசெஸ்க் நகரில் நடந்து வரும் இந்த போட்டியில் 18 வயது நீரஜ், 86.48 மீட்டர் வீசினார். இதற்கு முன் லாத்வியா வீரர் சிஜிஸ்முன்ட்ஸ், 84.69 மீட்டர் துாரம் வீசியதே 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் உலக சாதனையாக இருந்தது.

முதல் முயற்சியில் 79.66 மீட்டர் வீசிய நீரஜ் 2வது முயற்சியில்தான் இந்த உலக சாதனையை படைத்தார். லண்டன் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ள டிரினிடாட் டொபாக்கோ வீரர் கெசோன் வால்காட், இந்த ஆண்டில் அதிகபட்சமாக 86.35 மீட்டர்தான் வீசியது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் ஜுனியர் தடகளப் போட்டியில் இந்தியா 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு சீமா அன்டில் , நவ்ஜீத் கவுர் ஆகியோர் வட்டு எறிதலில் வெண்கலம் வென்றுள்ளனர். 2003ம் ஆண்டு சீனியர் பிரிவில் அஞ்சு ஜார்ஜ், நீளம் தாண்டுதலில் வெண்கலம் வென்றிருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!