Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹிட்லர் அணிந்த ஒலிம்பிக் முகமூடி! ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம் எண்- 1)

1. ஹிட்லரின் ஒலிம்பிக்ஸ்!

முதல் உலகப் போர் நடக்கக் காரணம் யார்?... அதனால் உலகமே சீரழிந்து கிடக்கிறதே, அனைத்துக்கும் காரணம் யார்? அந்தக் கொடூரக் குற்றவாளி யார்?... முதல் உலகப் போருக்கு ‘நன்றி’ கார்டு போட்ட சமயத்தில், இந்தக் கேள்விகள் எழுந்தபோது இதற்கான ஒற்றை பதிலாக சகல திசைகளிலிருந்தும் ஆள்காட்டி விரல்கள் ‘ஜெர்மனி’யை நோக்கித்தான் நீண்டன. ஜெர்மனி, முதல் உலகப்போரில் சந்தித்த இழப்புகளைவிட, அடுத்த 10 ஆண்டுகளில் போர்க் குற்றவாளியாக ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு சந்தித்த பேரிழப்புகளே மிக அதிகம்.
 

'ப்ச்... என்னதான் இருந்தாலும் ஜெர்மனி பாவம். பொருளாதார ரீதியாக சோம்பிப் போய்க் கிடக்கிறது. அதைக் கொஞ்சம் உற்சாகப்படுத்துவோமே.' சர்வதேச நாடுகளுக்கு 1931ல் ஜெர்மனி மீது கருணை சுரந்தது. ஆகவே 1936 சர்வதேச கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகளை ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடத்துவதற்கு ஓர் வாய்ப்பு கொடுத்தனர்.

சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தினர் நடத்திய வாக்கெடுப்பில் பெர்லின் வென்றது.
ஆனால், 1933ல் ஜெர்மனியில் நாஜி கிரகணம் படர ஆரம்பித்து விட்டது. ஆல் இன் ஆல் ஆரிய வீரியர் அடால்ஃப் ஹிட்லர், ஜெர்மனியைத் தன் வசப்படுத்தியிருந்தார். அவரது அரசியல் காய் நகர்த்தல்கள் ஒவ்வொன்றும் சர்வதேச அளவில் அதிர்வுகளை, அதிர்ச்சிகளை உருவாக்கின. குறிப்பாக, யூத எதிர்ப்பு நடவடிக்கைகள்!

ஒலிம்பிக்கில் யூத விளையாட்டு வீரர்கள் யாரையும் ஹிட்லர் பங்குபெற அனுமதிக்கமாட்டார் என்ற கருத்து அழுத்தமாகப் பரவியது. ஏற்கெனவே ஜெர்மனியில் பல்வேறு விளையாட்டுக்களில் புகழ் பெற்றிருந்த வீரர்கள், தாங்கள் யூதர் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகக் குமுற ஆரம்பித்திருந்தனர். ஜிப்ஸி வீரர்களுக்கும் இதே நிலைமைதான்.
 

‘இப்படிப்பட்ட இனவெறி ஆட்சி நடக்கும் ஒரு நாட்டுக்கு யூத வீரர்களை அனுப்ப முடியாது. ஆகவே, ஒலிம்பிக் நடக்கும் இடத்தை மாற்ற வேண்டும்’ என்று எதிர்ப்புக் குரல்கள் 1934ல் எழ ஆரம்பித்தன. சர்வதேச யூதர்களின் அழுத்தத்தால் அதை அமெரிக்காவும் பிரிட்டனும் ஆதரித்தன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியினர் இடத்தை மாற்றிவிடலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். பெர்லினுக்கான வாய்ப்பு கை நழுவிப் போகும் நிலை.

‘யூதக் கொசு ஒழிப்புத் திட்டத்துக்கே நேரம் போதவில்லை. இதில் பெர்லினுக்கு ஒலிம்பிக்ஸ் எல்லாம் அநாவசியமே!’ என்ற மனநிலையில்தான் ஹிட்லரும் இருந்தார். ஆனால், கொள்கைப் பரப்பு அமைச்சரான ஜோசப் கோயபெல்ஸ், ஹிட்லரிடம் கிசுகிசுத்தார். ‘ஐயன்மீர்! ஜெர்மனியின் மீதான களங்கங்களைத் துடைத்தெறிய, அதற்கு சர்வதேச அளவில் நன்மதிப்பு பெற்றுத்தர இந்த ஒலிம்பிக்ஸ் உதவும். அதைக் கொண்டு நாம் வருங்காலத்தில் பல விஷயங்களைச் சாதிக்கலாம். விஷமங்களை அரங்கேற்றலாம்.’ ஆகவே, ஹிட்லர் ‘நல்லவன்’ முகமூடியை எடுத்து அணிந்துகொண்டார். சர்க்கரைப் பொங்கல் வார்த்தைகள் பேச ஆரம்பித்தார்.

சர்வதேசப் பெரியோர்களே! தாய்மார்களே! தாங்கள் எங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள் என்று நினைக்கிறோம். ஜெர்மனியில் யூதர்களுக்கு எந்தவிதத் தடையுமில்லை. அவர்கள் தாராளமாக ஓடலாம், எம்பிக் குதிக்கலாம், மல்லாக்க நீந்தலாம், ஈட்டி எறியலாம், துப்பாக்கிக்கூட சுடலாம். எது வேண்டுமானாலும் செய்யலாம். ஒலிம்பிக்கை மிகச் சிறந்த முறையில் நடத்திக் காட்ட பெர்லின் தயாராகிக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஜெர்மானியனும் இந்த ஒலிம்பிக்கை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். அனைவரும் வருக! நல்ஆதரவு நல்குக!

சொன்னதோடு மட்டுமல்லாமல், ஹெலன் மேயர் என்ற யூதப் பெண்ணை ஜெர்மனி சார்பில் போட்டியிடும் வாள் சண்டை வீராங்கனையாகவும் அறிவித்தார். அதுவரை யோசித்து வந்த அமெரிக்கா, பெர்லின் ஒலிம்பிக்கில் பங்கேற்கவிருப்பதாக அறிவித்தது. இதனால், யூத எதிர்ப்புக் குரல்கள் அமுங்கிப் போயின. பிற நாடுகளும் தங்கள் நாட்டின் சார்பில் யூத வீரர்களை அனுப்பத் தயாராகின.

ஒலிம்பிக்கை நல்லவிதமாக நடத்திக் காட்ட வேண்டிய முழுப்பொறுப்பும் கோயபெல்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. பெர்லினில் நடந்த ஒலிம்பிக்ஸ் போல் வேறெங்கும் கண்டதே இல்லை என அனைவரும் பிளந்த வாயை மூடாமல் ஊர் திரும்ப வேண்டுமென்றும் ஹிட்லர், கோயபெல்ஸுக்கு அன்புக் கட்டளை இட்டிருந்தார்.

கோயபெல்ஸ், பரபரவெனத் தயாரானார். அதுவரை ஜெர்மனியெங்கும் மிளிர்ந்து கொண்டிருந்த யூத எதிர்ப்புப் பிரசார சுவரொட்டிகள், அறிவிப்புகள், இன்னபிற அடையாளங்கள் எல்லாம் ஒரே இரவில் காணாமல் போயின. யூத எதிர்ப்பு விதிகள், சட்டங்கள் அனைத்தும் (தற்காலிகமாக) நீக்கப்பட்டன. செய்தித்தாள்கள் யூத எதிர்ப்புப் பிரசாரமின்றி இயல்பாக வெளிவந்தன. ஜெர்மன் ஒலிம்பிக் கமிட்டி, ஒலிம்பிக் குறித்த செய்திகளை, விளம்பரங்களை, தகவல்களை, வழிகாட்டிகளை ஜெர்மன், ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் அசத்தலாக அச்சிட்டு வழங்கியது.

ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி, விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கும் வழக்கம் பண்டைய ஒலிம்பிக்ஸில் உண்டு. அது 1928 ஒலிம்பிக் போட்டிகளில் மறு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு மேலும் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டுமென கோயபெல்ஸ் யோசித்தார். ஜெர்மனியின் விளையாட்டுத் துறை செயலாளரான கார்ல் டயெம் ஒரு யோசனை சொன்னார். ‘ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸில் இருந்து ஒலிம்பிக் தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வோம். பின் அதை ஜெர்மனிக்கு கொண்டு வந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றுவோம்.’
 
அந்த அருமையான யோசனை அழகாகச் செயல்படுத்தப்பட்டது. வெயில், சூறாவளி, பனி, மழை என எதிலும் அணைந்துவிடாத விசேஷமான ஒலிம்பிக் தீப்பந்தத்தை ஜெர்மானிய நிறுவனம் ஒன்று தயாரித்தது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாரத்தான் வீரர்கள், ஆளுக்கு ஒரு கிலோ மீட்டர் வீதம், கிரீஸின் ஒலிம்பியாவிலிருந்து, பெர்லினுக்கு ஒலிம்பிக் தீப்பந்தத்துடன் ஓடி வந்தார்கள். அது பெர்லின் ஒலிம்பிக்ஸுக்கு மிக நல்ல விளம்பரத்தையும் நன்மதிப்பையும் தேடிக் கொடுத்தது. அதிலிருந்து ஒலிம்பிக் தீப்பந்தம் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்யும் வழக்கம் ஆரம்பமானது.

'1932ல அமெரிக்காக்காரன் லாஸ் ஏஞ்சல்ஸுல ஒலிம்பிக்னு ஒண்ணு நடத்துனானே... அதெல்லாம் சப்பை. 1936ல தலைவர் ஹிட்லர் பெர்லின்ல ஒலிம்பிக் நடத்துனாரு பாரு... ஆயுசுக்கும் மறக்க முடியாது. ஆஹா ஓஹோன்னு அசத்திட்டாரு!' - இப்படி உலகமே வாய்பிளக்கும் அளவுக்கு அப்படி என்னதான் செய்தார் ஹிட்லர்?

(டைரி புரளும்)

அடுத்த அத்தியாயம் : ‘அமைதியின் கடவுள்’ ஹிட்லர்!

- முகில்
 

Save

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement