வெளியிடப்பட்ட நேரம்: 17:07 (02/08/2016)

கடைசி தொடர்பு:17:30 (02/08/2016)

நேபாள நிலநடுக்கத்தில் உயிர்பிழைத்தவர் ரியோ ஒலிம்பிக்கில் சாதனை!

நேபாள நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த 13 வயது கௌரிகா சிங் என்ற நீச்சல் வீராங்கனை, ரியோ ஒலிம்பிக்கின் இள வயது போட்டியாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டி, வரும் 5ம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி, ரியோ நகரில் வீரர் வீராங்கனைகள் குவிந்து வருகின்றனர். ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களில் மிக இளவயது போட்டியாளர் என்ற பெருமையை, நேபாள நீச்சல் வீராங்கனை கௌரிகா சிங் பெறுகிறார்..

 நேபாளத் தலைநகர், காத்மண்டுவில் நடந்த நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர் இந்த கௌரிகா சிங். பதின்மூன்று வயது, 255 நாட்களே நிரம்பிய இவர், ஒலிம்பிக்கில் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் நீச்சலில் பங்கேற்கிறார்.

கௌரிகாவுக்கு இரண்டு வயது இருக்கும்போதே, பெற்றோர் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்து விட்டனர். கடந்த ஏப்ரல் மாதத்தில், காத்மண்டுவில் நடந்த தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்க கௌரிகா சிங் வந்திருந்தார். காத்மண்டுவில் 5 மாடிக் கட்டடத்தில் தாயுடன் தங்கியிருந்தார். அப்போதுதான் காத்மண்டுவை நிலநடுக்கம் தாக்கியது. பக்கத்து கட்டடங்கள் எல்லாம் சிதைந்துபோக,  கௌரிகா சிங் குடும்பத்தினர் தங்கியிருந்த கட்டடம் புதியது என்பதால் பாதிப்படையாமல் தப்பித்தது. இதனால் கௌரிகா சிங் உயிர் தப்பினார். அப்போது உயிர் தப்பியவர்தான் இப்போது ஒலிம்பிக்கில்  சாதனை படைத்துள்ளார்.

''ஒரு மாதத்திற்கு முன்தான், இந்த தகவல் எனக்கு தெரிய வந்தது. நான் ஷாக் ஆயிட்டேன் '' என்கிறார் கௌரிகாசிங். ஒலிம்பிக்கிலேயே இளம் வயது போட்டியாளர் என்பதால், கௌரிகா மீதுதான் அனைவரது கவனமும் இருக்கும்.

நிலநடுக்கத்தால் சிதைந்து கிடந்த காத்மண்டு நகரை நேரில் பார்த்த கௌரிகா சிங் ,நீச்சல் போட்டியில் மூலம் தனக்கு கிடைக்கும் வருவாயின் பெரும்பகுதியை தந்தையின் நண்பர் நடத்தும் அறக்கட்டளைக்கு வழங்கி வருகிறார் என்பது கூடுதல் தகவல். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்