வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (03/08/2016)

கடைசி தொடர்பு:18:55 (03/08/2016)

ஒலிம்பிக் தொடங்கும் முன்னரே பதக்கத்தை இழந்த இந்தியா! - எப்படி?

போலந்தின் பிட்காசெஸ்க் மைதானத்தில், சாதனையாளர்களும் திறமையாளர்களும் குவிந்து கிடந்தனர். ஹரியானாவில் இருந்து சென்ற நீரஜ் சோப்ராவும் அதில் ஒருவர். ஈட்டி எறிதலில் பங்கேற்ற நீரஜ்,  உலக சாதனையுடன் தங்கம் வென்றார். சர்வதேச தடகளத்தில் சீனியர், ஜுனியர் என எந்த நிலையிலும் சரி... இந்தியா தங்கப் பதக்கம் வென்றதில்லை. அந்தக் குறையை நீரஜ் தீர்த்தார்.

வழக்கமாக சர்வதேச களத்தில், இந்திய தடகள வீரர்களுக்கு மரியாதை சற்றுக் குறைவுதான். 'வருவார்கள் போவார்கள் ' என்பது போலத்தான் பார்ப்பார்கள். ஈட்டி எறிதலில் சொல்லவே வேண்டாம். நீரஜையும் அப்படித்தான் பார்த்தார்கள். நீரஜ் ஈட்டியை கையில் எடுத்தார். முதல் அட்டெம்ப்ட்டில் 79.66 மீட்டர்தான் வீச முடிந்தது. வழக்கமான 'இந்திய வீச்சு' என பார்வையாளர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டனர். நீரஜ் நம்பிக்கையை  இழந்து விடவில்லை.

உலக சாதனை படைத்த நீரஜ்

இந்த முறை இரண்டாவது 'அட்டெம்ப்ட்'. பலம் அனைத்தையும் திரட்டிக் கொண்டார்.  நல்ல ஸ்டார்ட்டிங்கும் கிடைத்தது.  நீரஜின் கையில் இருந்து புறப்பட்ட ஈட்டி 'புல்லட்' வேகத்தில் சென்று தரையில் சொருகியது. அளந்து பார்த்தால் 86.48 மீட்டரை கடந்திருந்தது ஈட்டி. அவராலேயே நம்ப முடியவில்லை. தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டார். இது ஒரு புதிய சாதனை என மைதானத்தில் மைக்குகள் அலறின. சர்வதேச தடகள அரங்கில், முதன் முறையாக ஸ்கோர் போர்டு  'வோர்ல்டு ரிக்கார்டு' என இந்தியர் பெயரைக் குறிப்பிட்டது. பல இந்திய ஒலிம்பியன்களின் இந்தக் கனவு 19 வயது நீரஜால் நிறைவேறியது. இதுவரை, 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 84.69 தூரம் வீசியதே உலக சாதனையாக இருந்தது.

லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற டிரினிடாட் வீரர் கெசோர்ன் வால்காட் வீசியது கூட 84.58 மீட்டர்தான். அவரை விட 2 மீட்டருக்கு மேல் அதிமாக வீசியுள்ளார் நீரஜ். இங்கேதான் நீரஜை துரதிருஷ்டமும் துரத்தி வந்திருக்கிறது. இந்தப் பிரிவில் ஒலிம்பிக்கிற்கு தகுதிப் பெறுவதற்கான 'டெட் லைன் ' ஜூலை 18ம் தேதி. ரியோ ஒலிம்பிக்கில் தகுதிப் பெற, குறைந்தது 83 மீட்டர் தொலைவு வீசியிருக்க வேண்டும். இதற்கு முன் பல அட்டெம்ப்ட்களில் அந்த இலக்கை நீராஜால் எட்ட முடியவில்லை. போலந்தில்தான் எட்ட முடிந்தது. இப்போது 'டெட்லைன்' முடிந்து விட்டதால், உலக சாதனை படைத்தாலும் நீரஜால், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை.

ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத நிலை

சர்வதேச அளவில் பல சீனியர் வீரர்களுக்கு இணையான சாதனை இது. ஒலிம்பிக்கில் நீரஜ் பங்கேற்றிருந்தால், இந்தியாவுக்குப் பதக்கம் நிச்சயம். அது தங்கமாகக் கூட இருக்கலாம். ரியோ ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு டிரினிடாட் வீரர் கெசோர்ன் வால்காட் மீதுதான் இருக்கிறது. நீரஜுக்கு முன்னதாக இந்த ஆண்டில் வால்காட்தான் அதிகபட்சமாக 86.35 மீட்டர் தூரம் வீசியிருந்தார். போலந்தில் நீரஜ் வீசியதோ 86.48 மீட்டர் தொலைவு. நீரஜ் வீசியது இந்த ஆண்டின் 8வது சிறந்த வீச்சு.  அப்படியென்றால் இந்தியாவுக்கு பதக்கம் நிச்சயம்தானே. அதனால் ரியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவுக்கு 'வைல்டு கார்டு' தர வேண்டுமென இந்திய ஒலிம்பிக் கவுன்சில் கேட்டது. ஆனால் கடைசிக் கட்டத்தில் 'வைல்டு கார்டு 'கேட்டதால், சர்வதேச தடகள சம்மேளனம் மறுப்பு தெரிவித்து விட்டது.

போலந்தில் தனது சாதனை குறித்து நீரஜ் என்ன சொல்கிறார்?

தனது சாதனை குறித்து நீரஜ் ''சும்மா விளையாட்டுக்காகத்தான் ஈட்டியைக் கையில் எடுத்தேன். ஈட்டி எறிதலில் அப்படியெல்லாம் ஆர்வம் கிடையாது. எப்போதாவது ஃபிட்னெசுக்காக கிரவுண்ட் பக்கம் போவேன். எனது நண்பர் மானோவுடன் ஒரு முறை பானிபட் மைதானத்துக்கு சென்றேன். அவர் ஒரு ஈட்டி எறியும் வீரர். மைதானத்தில் மானோ பயிற்சி எடுக்கும் போது, நான் அவருக்கு மீண்டும் ஈட்டியை எடுத்துக் கொண்டு போய் கொடுப்பேன். ஒரு முறை மானோ, ஈட்டியைக் கையில் கொடுத்து 'எறிடா...' என்றான். நான் எறிய, அது தொலை தூரத்தில் போய் விழுந்தது. மானோ மிரண்டு போனான். தினமும் பயிற்சி எடுக்கும் அவனை விட நான் அதிகமாக வீசியிருந்தேன். அவன்தான் ஈட்டி எறியும் பயிற்சியாளர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினான். அப்படித்தான் ஈட்டி எறிய ஆரம்பித்தேன்.

பயிற்சிக்காக சொந்த ஊரில் இருந்து தினமும் பானிபட் போக வேண்டியது இருந்தது. எளிய விவசாயக் குடும்பம். கையில் காசு இருக்காது. யாரிடமாவது லிப்ட் கேட்டுதான் தினமும் பானிபட் போவேன். எங்கள் ஊரில் இருந்து பானிபட் 16 கிலோ மீட்டர் தொலைவு இருந்தது. போவதற்கு கஷ்டமாக இருந்தாலும் ஈட்டி எறிதல் மீது எனக்கு தனிக் காதல் ஏற்பட்டிருந்தது. பல கஷ்டங்களைத் தாண்டி, அந்தக் காதல்தான் என்னை தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட வைத்தது. அந்த சமயத்தில் என்னிடம் ஈட்டி கிடையாது. நண்பர்கள் கொண்டு வரும் ஈட்டியில்தான் பயிற்சி எடுப்பேன்.

தேசியக் கொடித் தேடி ஓடினேன்...

2014 ம் ஆண்டு கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தில், இரண்டு ஈட்டியை வாங்கினேன். தினமும் பயிற்சி. பழகப் பழக வந்துவிட்டது. தேசிய அளவில் சாதித்த பிறகு, நேஷனல் கேம்பிற்கு அழைத்தார்கள். கடந்த ஆண்டுதான் முதன்முறையாக நேஷனல் கேம்ப்பில் பங்கேற்றேன். சீனியர் வீரர் ரஜீந்தர்சிங்கும் ஆஸ்திரேலிய கோச் கேரி காவ்லெட்டும் என்னைக் கவனித்துக் கொண்டார்கள். முழுமையான ஈட்டி எறியும் வீரனாக மாறினேன். போலந்துக்கு புறப்படும் போது, இப்படி ஒரு சாதனை படைப்பேன் என நினைக்கவில்லை. ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் என்ற கனவுடன் இருந்தேன். ' வைல்டு கார்டு' கிடைக்காத வருத்தம் என்னை அழுத்திக் கொண்டுதான் இருக்கிறது.

போலந்தில் தங்கம் வென்றதும் உடலில் தேசியக் கொடியை போர்த்திக் கொண்டு ஓட ஆசை. தேசியக் கொடியைத் தேடுகிறேன். 'ஆர்கனைசர்கள்' கொண்டு வர மறந்து விட்டனர். மைதானம் முழுக்க சுற்றிச் சுற்றி ஓடுகிறேன். எங்காவது தேசியக் கொடி தென்படுகிறதா எனப் பார்க்கிறேன். இந்திய தேசியக் கொடியுடன் ஒருவரைக் கூட காணோம். மனதுக்குள் அவ்வளவு வருத்தம்.

நான் ஜெயிப்பேன் என்று யாரும் நினைக்கவில்லை . அதனால் 'ஆர்கனைசர்கள்' தேசியக் கொடித் தேவையில்லை என கருதி விட்டனர் போலும். போடியத்தில் நான் ஏறிய போது, மைதானத்தில் நமது தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தேசியக் கீதமும் பாடப்பட, என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதே விட்டேன். என்னால் என் தேசத்துக்கு கிடைத்த பெருமை அல்லவா....ஒரு விளையாட்டு வீரனுக்கு இதை விட வேறு என்ன வேண்டும்?''

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்