Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒலிம்பிக்: இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் டூட்டி சந்த்!

லிம்பிக்கின் 'தி பெஸ்ட்'  ஈவென்ட் என்றால் அது 100 மீட்டர் ஓட்டப் பந்தயம்தான். உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டி என்றால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு மாஸ் ஈவென்ட் தான் இந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தயமும்.

அப்படிப்பட்ட ஒரு பெருமையான ஈவென்டில், 1980-ம் ஆண்டு,  'இந்தியாவின் பயோலி எக்ஸ்பிரஸ்' என்று அழைக்கப்பட்ட பி.டி உஷாவிற்கு பிறகு, ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கும்  இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் டுட்டி சந்த் (Dutee Chand). இதுவரை, இந்தியாவில் இருந்து 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை வெறும் மூன்றே பேர்தான், அதில் டூட்டி மூன்றாவது நபர்.

பின்னணி

1996-ம் ஆண்டு, பிப்ரவரி 3 ம் தேதியன்று  ஒடிசா மாநிலம், கோபால்பூரில் பிறந்தார் டூட்டி சந்த்.  ஏழை நெசவாளர் குடும்பம். ஏழ்மையை வெல்வது எப்படி என்கிற ஒரே சிந்தனையில் சரஸ்வதி சந்த் (டூட்டி சந்தின் மூத்த சகோதரி) வேகமாக ஓடத் தொடங்கினார். சரஸ்வதியின் ஓட்டத்திற்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது. தேசியப் போட்டிகளில் பெற்ற சில பதக்கங்களால், அவருக்கு அரசு வேலை கிடைத்தது.

தொடர்ந்தது டூட்டியின் ஓட்டம்:

அக்காவை பார்த்து ஓடத் தொடங்கிய டூட்டிக்கு ஓட மட்டுமே தெரிந்திருந்தது. ஓடிய வேகத்தில், 2012-ம் ஆண்டு, தேசிய தடகளப் போட்டியில், 18 வயதிற்கு உட்பட்ட மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், 100 மீட்டர் பந்தயதூரத்தை 11.8 நொடிகளில் ஓடி தங்கம் வென்றார்.  அன்றிலிருந்துதான் இந்திய தடகள நட்சத்திர வீராங்கனைகள் பட்டியலில்  டூட்டியையும் சேர்த்து,  பத்திரிகைகள் பேசத் தொடங்கின.
அதனைத் தொடர்ந்து, புனேவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில்,  200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், 23.811 நொடிகளில் ஓடி, வெண்கலப் பதக்கத்தை வென்றார். இப்படி, பல போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4 X 100 மீட்டர் ரிலே என்று பல போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்துக் கொண்டிருந்தபோதுதான் சோதனை தொடங்கியது.

சோ(வே)தனை காலம்:

2014 காமென் வெல்த் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றிருந்த டூட்டி,  உற்சாகமாக ஸ்காட்லாந்திற்கு பறக்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது, இந்திய தடகள சம்மேளனத்திலிருந்து, "டூட்டி உனக்கு ஃபீமேல் ஹைபர்ஆண்ட்ரோஜெனிஸம் (Femal Hyperandrogenism) இருக்கிறது. எனவே காமென் வெல்த் போட்டியில் கலந்து கொள்ள முடியாது"  என்று செய்தி சொன்னார்கள். அதோடு,  'இனி வரும் சர்வதேச போட்டிகளிலும் ஒரு பெண்ணாக கலந்து கொள்ள முடியாது" என்றும் சொன்னதை கேட்டு மிரண்டே போனார்  டூட்டி. இத்தனை நாள் பட்ட கஷ்டங்களும், கண்ட கனவுகளும் அவ்வளவுதானா என்று ஒரு சிறு அச்சம் கலந்த கேள்வி எழுந்தது. அதை வெளிக்காட்டாமல் அமைதியாக யோசித்தார்.

வந்தார்... வென்றர்...

காமென்வெல்த் போகட்டும் என்று கோர்ட் படி ஏறினார். இறுதியாக ஜூலை 2015ல் கோர்ட் ஆஃப் ஆர்பிட்ரேஷன் ஃபார் ஸ்போர்ட்ஸ் (Court of Arbitration of Sports) டூட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. டூட்டியின் மீதான தடையும் விலக்கப்பட்டது. அவரது ஒரு வருட போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.

தடைபட்ட பயிற்சி:

பொதுவாக சர்வதேச போட்டிகளுக்கு தயாராகும் வீரர், வீராங்கனைகளை 'ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் (Sports authority of India - SAI) இந்தியா'   அழைத்து,  நல்ல தரமான உணவு, விளையாட்டுச் சாதனங்கள், தகுந்த மருத்துவம், மஸாஜ் என்று சகல வசதிகளையும் கொடுத்து தயார் செய்வார்கள். அப்படி SAI லிருந்து  வர வேண்டிய அழைப்பு டூட்டிக்கு வரவில்லை. காரணம் கேட்டால்,  வழக்கு நீடிப்பதாக சொல்லி விட்டார்கள். தனது கோச் ரமேஷிடம் விஷயத்தை சொன்னார் டூட்டி. ரமேஷும் எவ்வளவோ முயற்சி செய்தும், SAI ல் பயிற்சி பெற, டூட்டிக்கான அனுமதியைப் பெற முடியவில்லை. கடைசியில், இந்தியாவின் பாட்மின்டன் ராணி சாய்னா நெஹ்வால் பயிற்சி பெறும் கோபிசந்திடம் டூட்டியை பற்றிச் சொன்னார். கோபிசந்தும் சம்மதிக்க, சாய்னா நெஹ்வால் பயிற்சி பெற்ற அதே களத்தில் டூட்டி,  தன் கடுமையான பயிற்சிகளை தொடர்ந்தார். கிட்டத்தட்ட தீர்ப்பு வரும் வரை டூட்டியின் பயிற்சி அங்கேதான் நடந்தது.

உடைந்தது தேசிய சாதனை:

இந்தியாவின் மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தய சாதனை நேரம் 11.38 நொடி. இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ரச்சிதா மிஸ்ட்ரி. இந்த சாதனை 2000-ம் ஆண்டு படைக்கப்பட்டது. அதன் பிறகு அதை யாரும் நெருங்க முடியாமலேயே இருந்தது.

ஜூலை 2015 ல் கிடைத்த தீர்ப்புக்குப் பிறகு, டூட்டியின் பயிற்சி இரண்டு மடங்கு கூடியது. தேவையற்ற சிந்தனை இல்லை. ஓட்டம்... ஓட்டம்... ஓட்டம் மட்டுமே சிந்தனையாகவும் செயலாகவும் இருந்தது. ஜூலை 2015க்குப் பிறகு, சில போட்டிகளில் பதக்கங்கள் வென்றாலும், டூட்டியை பார்த்து இந்தியா மிரண்ட நாள் வந்தது. இப்படி ஒரு வீராங்கனை நம்மிடம் இருக்கிறாளா என்று பாரதமே வியந்தது.

ஆம்! 2016-ம் ஆண்டு ஃபெடரேஷன் கப் ஆஃப் அத்லெடிக்ஸ் சேம்பியன்ஷிப் போட்டியில் டூட்டி 100 மீட்டர் தூரத்தை 11.33 நொடிகளில் கடந்து, ரச்சிதாவின் சாதனையை முறியடித்து "நான் வந்துட்டேன்னு சொல்லு... இரண்டு  வருஷத்துக்கு முன்னாடி இருந்த டூட்டியை விட இன்னும் பளிச்சுனு ஃபார்ம்ல வந்துட்டேன்னு  சொல்லு" என்று, வந்த உடன்  பழைய சாதனையை உடைத்து அரங்கத்தையே அலறவிட்டார். தன் பெயரை மீண்டும் மிளிரச் செய்தார். மீண்டும் நம்பிக்கை நட்சத்திர பட்டியலில் டூட்டிக்கு தனி இடம் போட்டு விட்டார்கள்.

அடுத்த நாள்:

'சாதனையை முறியடிச்சது சரிதான்... ஆனால் ஒலிப்பிக்குக்கு தகுதி பெறலயே...' என்று பயிற்சியாளர்கள் வருத்தப்பட,  ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் பந்தயத்தில் கலந்து கொள்ள தகுதிப் பெற வேண்டுமானால் என்ன டைமிங் என்று கோச்சிடம் கேட்டார்.

'11.32.....' என்றார்கள் பயிற்சியாளர்கள். அடடே 0.01 நொடியில் தகுதிப் பெற முடியாமல் போய்விட்டதே என்று மனதில் நினைத்து வருத்தப்படவில்லை. 11.32 டைமிங்கை ஆழ்ந்து பார்த்தார்.

சரி, பார்ப்போம் என்று நம்பிக்கை கொண்ட முகத்தோடு தன் அறைக்கு சென்றார்.

ஓட்டப் பந்தயத்தில் 0.01 நொடியை வேகமாக ஓட வேண்டும் என்றால்... பல மாதங்கள் தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டியது இருக்கும்.

2013-ம் ஆண்டு 100 மீட்டர் தூரத்தை 11.73 நொடிகளில் ஓடிய டூட்டி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அதே 100 மீட்டர் தூரத்தை 11.33 நொடிகளில் ஓடினார். இதையும் இன்னும் இம்ஃப்ரூவ் செய்ய வேண்டும் என்றால் சற்றே கஷ்டம்தான் என்கிற பேச்சுகள் டூடியை சுற்றி வரத்தான் செய்தது. இதை எல்லாம் காதில் கூட வாங்கிக் கொள்ளவில்லை அவர்.

அடுத்த நாள், டூட்டி கஜகஸ்தானில் நடக்க இருந்த 16-வது சர்வதேச ஜி.கொஸநோவ் நினைவு அல்மாடி போட்டியில் (XVI International Meeting G Kosanov Memorial in Almaty, Kazakhstan) கலந்து கொள்ள வேண்டி இருந்தது.

போட்டியில் ஓடத் தயாரானார்.  அப்போது டூட்டியின் மனதில் ஒன்றும் ஓடவில்லை. ரசிகர்களின் களேபரங்கள், மற்ற வீராங்கனைகளின் சப்தங்கள் எதுவும் கேட்கவில்லை..... கூர்மையான கண்கள் எல்லைக் கோட்டை பார்த்துக் கொண்டே இருந்தது.

மீண்டும் உடைந்த தேசிய சாதனை:

'ஆன் யுவர் மார்க்' என்கிற சப்தம் கேட்ட உடன், தனக்கு ஒதுக்கி இருந்த டிராக்கில் தயாரானார். ஓடுவதற்கான துப்பாக்கிச் சத்தம் கேட்டதுதான் தெரியும். வேறு எதுவும் காதில் விழவில்லை. ஓடுவதும் தெரியவில்லை. 100 மீட்டர் தூரத்தை கடந்த பிறகு, வாட்ச்கள் சொன்னது, " டுட்டி... நீ 100 மீட்டர் தூரத்தை 11.24 நொடியில் ஓடி இருக்கிறாய், மீண்டும் இந்திய தேசிய சாதனையை முறியடித்து, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருக்கிறாய்..." என்று. பயிற்சியாளர்கள் குதூகலத்தில் கூத்தாடினர்.  

ஓட்டப் பந்தயத்தில் 'ஆல் அவுட் ரேஸ் (All out race)' என்று சொல்வார்கள். ஒரு ஓட்டக்காரர், தன் உடலில் உள்ள ஒவ்வொரு தசை, எலும்பு, சுவாசம் என்று தன் முழு பலத்தையும் பயன்படுத்தி ஓடினால், அவரால் ஓட முடியாத வேகத்தில் ஓடலாம். அப்படி ஒரு ஓட்டத்தைதான் அன்று டூட்டி ஓடி இருந்தார்.

அன்று உயிர் கொடுத்து ஓடிய ஓட்டத்திற்குதான் இன்று இந்தியாவே டூட்டியை துதி பாடிக் கொண்டிருக்கிறது. ஆம் 36 வருடங்களுக்குப் பிறகு இன்னொரு எக்ஸ்பிரஸ் இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறது.

நாம இந்தக் கட்டுரையை படிக்கும் நேரம், அவர் இந்தியாவின் கம்பீர உடை அணிந்து வீர நடை போட்டு ரியோவின் ஓட்டப் பந்தய அரங்கத்திற்குள் நுழைந்திருப்பார்.  

டூட்டி பதக்கத்துடன் திரும்ப வாழ்த்துவோம்...!

- மு.சா.கெளதமன்

Save

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement