வெளியிடப்பட்ட நேரம்: 10:37 (10/08/2016)

கடைசி தொடர்பு:15:01 (09/07/2018)

'தனி ஒருவன்' ஓடிய ஓட்டப்பந்தயம்!- ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்- 9)

அன்பு வாசகர்களே, 


முந்தைய அத்தியாயங்களைப் படிக்க : 1  2  3  4  5  6  7  8 


9. ஒருவர் ஓடிய ஓட்டப்பந்தயம்!

ஏகப்பட்ட சர்ச்சைகள் நிரம்பிய ஒலிம்பிக் எந்த ஆண்டு, எங்கே நடந்தது?...இந்தக் கேள்வியை 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி'யில் அர்விந்த் சுவாமி கேட்டால், எந்த ஹெல்ப்லைனும் இல்லாமல் கீழுள்ள பதிலைச் சொல்லிவிடலாம்.

1908 - லண்டன் ஒலிம்பிக்

முதலில் 1908 ஒலிம்பிக்கை நடத்த ரோம் நகரம்தான் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இத்தாலியும் அதற்கான ஏற்பாடுகளில் குஷியாக இறங்கியது. 1906ல் இத்தாலியின் வெசுவியஸ் மலை பொங்கியதில் இத்தாலியின் நேபிள்ஸ் நகரம் நாசமானது. இதைத்தான் 1981ல் சொன்னார் வைரமுத்து. 'எரிமலை எப்படி பொறுக்கும்?' என்று.

பொங்கிவரும் எரிமலையை ஒலிம்பிக் போட்டிக்காகப் பொறுமை காக்கச் சொல்ல முடியுமா? ஒலிம்பிக் செலவுகளுக்காக முடிந்து வைத்த கைக்காசை எல்லாம் நேபிள்ஸைச் சீரமைக்க எடுத்துக் கொண்டது இத்தாலி. ஆகவே வருத்தத்துடன் பின்வாங்கியது.

வாய்ப்பு லண்டனுக்குச் சென்றது. குறைவான கால அவகாசமே இருந்தாலும் நிறைவான ஏற்பாடுகளைச் செய்தது இங்கிலாந்து. ஒயிட் சிட்டி என்ற புதிய பிரம்மாண்ட ஸ்டேடியம் மளமளவெனக் கட்டப்பட்டது. இங்கிலாந்தும் பிரான்கோ-பிரிட்டிஷ் வர்த்தகப் பொருட்காட்சியின் ஒரு பகுதியாகவே ஒலிம்பிக்கை நடத்தியது. 22 நாடுகள், 2008 வீரர்கள் கலந்துகொண்ட உலகின் முதல் பெரிய ஒலிம்பிக் இதுவே. கிங் ஏழாம் எட்வர்ட், ஒலிம்பிக் போட்டிகளை ஏப்ரல் 27 அன்று ஆரம்பித்து வைத்தார். அக்டோபர் 31 அன்றுதான் நிறைவு விழா நடந்தது. 187 நாட்கள். அதிக காலம் நடந்த சவ்வுமிட்டாய் ஒலிம்பிக்கும் இதுவே.

ஆரம்ப விழா அணிவகுப்பிலேயே சர்ச்சைகளுக்கும் சலசலப்புகளும் அணிவகுத்தன. ஒவ்வொரு நாட்டின் வீரர்களும் உரிய கொடியுடன் அணிவகுத்து வந்து கிங்கைக் கடக்கும்போது சற்றே தம் தேசியக் கொடியை தாழ்த்தி மரியாதை செலுத்த வேண்டும் என்று பிரிட்டிஷார் சொல்லியிருந்தனர். சுவீடன் வீரர்கள் வந்தார்கள். மைதானத்தில் பல தேசத்தின் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. எட்டுத் திசைகளிலும் சுற்றிப் பார்த்தார்கள். சுவீடனின் கொடி எங்கும் இல்லை. ‘கொடியே இல்ல. நாங்க எதுக்கு அணிவகுக்கணும்?’ என்று கோபித்துக் கொண்டு வெளியேறினார்கள்.

பின்லாந்து வீரர்களுக்கும் ஒரு பிரச்னை காத்திருந்தது. அப்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் பின்லாந்து இருந்தது. ரஷ்யக் கொடியை ஏந்தித்தான் பின்லாந்து வீரர்கள் வர வேண்டும் என்று சொல்லப்பட, அந்த வீரர்கள் கொடியேதுமின்றி அணிவகுத்து வந்தது பரபரப்பை உண்டாக்கியது. அமெரிக்காவின் கொடியும் மைதானத்தில் பறக்கவிடப்படவில்லை. அமெரிக்க அணி அணிவகுத்து வந்தது. தலைமை தாங்கி வந்த ரால்ப் ரோஸ் என்ற தடகள வீரர், தேசியக் கொடியை சாய்க்காமல் கிங்கைக் கடந்து சென்றார்.

ரால்ப் ரோஸ்

மைதானமெங்கும் சலசலப்பு. அமெரிக்கர்கள் கிங்கை அவமதித்துவிட்டதாக ராஜவிசுவாசிகள் கொந்தளித்தார்கள்.  ‘வேறெந்த தேச மன்னருக்கும் எங்கள் தேசியக் கொடி தலைவணங்காது’ என்று பின்பு அமெரிக்கர்கள் விளக்கம் சொன்னதாகச் செய்திகள் வந்தன.

இந்த அமெரிக்க, இங்கிலாந்து மோதல் களத்திலும் எதிரொலித்தது. 400 மீ ஓட்டம் இறுதிப்போட்டி நடந்தது. அப்போதெல்லாம் மைதானத்தை சுற்றி வரும் விதத்தில் ஓட்டப்பந்தயப் பாதை அமைக்கப்படவில்லை. நேராக ஓட வேண்டியதுதான். இங்கிலாந்து வீரர் வெய்ண்டம் ஹால்ஸ்வெலே ஓடிக் கொண்டிருக்கும்போது, அமெரிக்க வீரர் ஜான் கார்பெண்டர் அவரை முந்தவிடாமல் வலது முழங்கையால் தடுத்ததாக புகார் எழுந்தது. ‘அமெரிக்கத் தடகள விதிகளின்படி அதெல்லாம் தவறே இல்லை’ என்றார் கார்பெண்டர். ‘போட்டி இங்கிலாந்தில் நடக்கிறது. எங்கள் விதிகளின்படி அது பெரிய தவறு’ என்று பிரிட்டிஷார் மல்லுக்கட்டினர். அமெரிக்கர்கள் விடாமல் வாக்குவாதம் செய்தனர். போட்டி இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த மறு போட்டி நாளில் ஹால்ஸ்வெலே மட்டும் மைதானத்தில் வந்து ஓடுவதற்காகத் தயாராக நின்றார். கார்பெண்டரும் அவருடன் ஓட வேண்டிய மேலும் இரு அமெரிக்க வீரர்களும் போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

துப்பாக்கி வெடித்தது. ஹால்ஸ்வெலே ஓட ஆரம்பித்தார். தனி ஒருவனாக. 400 மீட்டரை 50.2 செகண்ட்களில் கடந்து மூச்சுவாங்க நின்றார். தங்கப் பதக்கம் அவருக்கு. அந்தப் பிரிவில் வெள்ளியும் வெண்கலமும் யாருக்குமே வழங்கப்படவில்லை.

ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனி ஒருவர் மட்டுமே பங்குபெற்ற இறுதிப் போட்டி இது மட்டுமே. ஒவ்வொரு நாடுகளும் தனித்தனி விதிமுறைகளுடன் ஒலிம்பிக் போட்டி நடத்தினால் பஞ்சாயத்துகள் தீராது என்று உணர்ந்த ஒலிம்பிக் கமிட்டி, போட்டிகளுக்கான பொது விதிமுறைகளை இயற்றியது. International Amateur Athletic Federation பிறந்தது. ஒலிம்பிக்கில் தடகளத்துக்கான பொது விதிமுறைகள் 1912 ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்கில் அமலுக்கு வந்தன.

தடகளத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் டெய்லர் என்பவரும் இடம் பெற்றிருந்தார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் இவர்தான். 4X400மீ தொடர் ஓட்டப்பந்தயத்தில் சக அமெரிக்க வீரர்களுடன் இணைந்து ஓடிய ஜான் டெய்லர் குழுவுக்குத் தங்கம் கிடைத்தது. ஆக, தடகளத்தில் சாதித்த முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஜான் டெய்லரே. நாடு திரும்பிய ஜானுக்கு ஆரவார வரவேற்பு கிட்டியது. ‘உலகின் தலைசிறந்த நீக்ரோ ஓட்டக்காரர்’ என்று புகழ்ந்தது நியுயார்க் டைம்ஸ். உயிரோடு இருக்கும்போது அல்ல; சில வாரங்களிலேயே டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஜான், இறந்துபோனபோது.

1908 மாரத்தான் போட்டியிலும் சர்ச்சைக்கு இடம் உண்டு. முதலில் 25 மைல்களுக்கான பந்தயப் பாதைதான் அறிவிக்கப்பட்டது. பின்பு வேல்ஸ் இளவரசர் தன் குடும்பத்துடன் தனக்கு வசதியான ஓரிடத்தில் மாரத்தானைப் பார்வையிட வேண்டும் என்பதற்காக பந்தயப் பாதை மாற்றப்பட்டு, 26 மைல்களாக நீட்டிக்கப்பட்டது. அதற்குப் பிறகும் பந்தயப் பாதையில் ராஜாங்க அனுமதி கிடைப்பதில் குழப்பங்கள். கடைசியாக 26.2 மைல்கள் (42.195 கிமீ) தொலைவுக்கு ஒரு பந்தயப் பாதையை முடிவு செய்தார்கள். பந்தயம், மைதானத்தில் கிங் அமர்ந்திருக்கும் ராஜ மாடத்தில் முடிவதாக ஏற்பாடு. (இந்த லண்டன் போட்டியிலிருந்துதான் முழுநீள மாரத்தான் ஓட்டத்தின் தொலைவு 26.2 மைல்களாக உயர்ந்தது என்பது வரலாறு.)

அந்த மாரத்தானில் இத்தாலியைச் சேர்ந்த டொராண்டோ பியட்ரி என்பவர் முதல் ஆளாக மைதானத்துக்குள் நுழைந்தார். ரசிகர்கள் உற்சாகமாகக் கத்தினர். அதீதக் களைப்புடன் அங்கே வந்து சேர்ந்த பியட்ரிக்கு, மைதானத்தில் எந்தப் பக்கம் ஓடிச் சென்று எல்லைக் கோட்டைத் தொடுவது என்று புரியவில்லை.

அங்குமிங்கும் ஓடி குழம்பினார். தலை சுற்றியது. தடுமாறி விழுந்தார் பியட்ரி. இருவர் கைத்தாங்கலாகப் பிடித்தபடி எல்லைக் கோட்டை நோக்கி அவரை இழுத்து வந்தனர். பின்பு அவர் எல்லைக் கோட்டைக் கடந்து பொத்தென விழுந்தார். ஸ்ட்ரெக்சரில் அவரைத் தூக்கிக் கொண்டு சென்றார்கள்.

 

ஒரு நிமிட இடைவெளியில் ஜானி ஹேஸ் என்ற அமெரிக்க வீரர் மைதானத்துக்குள் வந்து எல்லையை அடைந்தார். அடுத்தடுத்த நிமிடங்களில் சார்லஸ் என்ற தென் ஆப்பிரிக்க வீரரும், ஜோசப் என்ற அமெரிக்க வீரரும் இலக்கை அடைந்தனர். பியட்ரியை எல்லைக் கோட்டுக்குத் தூக்கி வந்து சேர்த்தது தவறு. ஒப்புக்கொள்ளவே முடியாது என்று அமெரிக்க வீரர்கள் வாக்குவாதம் செய்தனர். ஆகவே அதிகாரிகள் பியட்ரியை தகுதி நீக்கம் செய்தனர். மற்றவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வழங்கப்பட்டன. நொந்து போயிருந்த பியட்ரிக்கு, மறுநாள் ராணி அலெக்ஸாண்ட்ரா ஆறுதல் பரிசு வழங்கி தேற்றினார்.

லண்டன் ஒலிம்பிக்ஸில் போலோ போட்டியும் இடம்பெற்றிருந்தது. மொத்தம் மூன்று அணிகள் அதில் பங்கேற்றன. மூன்றுமே இங்கிலாந்தைச் சேர்ந்த கிளப் அணிகளே. தங்களுக்குள் மோதிக் கொண்டு, தங்கம், வெள்ளி, வெண்கலத்தைப் பிரித்துக் கொண்டன. 1908 லண்டன் ஒலிம்பிக்கின் பதக்கப் பட்டியலில் யார் முதலிடம் என்று கேட்கவே வேண்டாம். இங்கிலாந்துதான். 56 தங்கம், 51 வெள்ளி, 39 வெண்கலம் - மொத்தம் 146 பதக்கங்களை அள்ளியது. அமெரிக்கா, சுவீடன் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்தன. அடுத்த ஒலிம்பிக் 1912ல் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது.    

1912 ஒலிம்பிக்கில் ஜப்பான் பங்கேற்றது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒரு அணி முதல் முறையாக ஒலிம்பிக்கில் நுழைந்தது அப்போதுதான். ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியா என ஐந்து கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் பங்கேற்ற முதல் ஒலிம்பிக்காக 1912 ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக் அமைந்தது. அதைச் சிறப்பிக்கும்விதமாக ஒவ்வொரு நாட்டின் கொடியிலிருந்தும் பொதுவான வண்ணங்களைப் பிரித்தெடுத்து (நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை), ஐந்து வளையங்கள் வெள்ளைப் பின்னணியில் இருக்குமாறு கொடி ஒன்றை வடிவமைத்தார் ஒலிம்பிக்கின் தந்தையான கோபெர்டின்.

அந்த ஒலிம்பிக்கில்தான் போர்ச்சுகல் முதன் முதலில் அடியெடுத்து வைத்தது. ஆறு போர்ச்சுகல் வீரர்கள் முதல் நாள் அணிவகுப்பில் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். பிரான்சிஸ்கோ லஸாரோ என்ற தடகள வீரரும் மகிழ்ச்சியுடன் கையசைத்தபடி வந்தார். அவரது கண்களில் ஒலிம்பிக்கின் வளையங்கள் தென்பட்டன. அந்த ஒலிம்பிக் வளையங்கள், சில நாட்களில் அவருக்கான மலர் வளையங்களாக மாறிப் போன சோகமும் அங்கே அரங்கேறியது.

(டைரி புரளும்.)

 

- முகில்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்