Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய வீரர்களை விமர்சிக்கும் ஷோபா டேவுக்கு தத்து பற்றி தெரியுமா?

நாசிக் அருகே தலீக்கோன் என்ற சிறிய கிராமம்.  நேற்று  மாலை 5 மணியளவில் ஒரே பரபரப்பு...எதிர்பார்ப்பு. ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட  மக்கள் ஒரே இடத்தில் தொலைக்காட்சி முன் தவம் கிடந்தனர். மின்சாரமும் அவ்வப்போது தடைபட்டுக்கொண்டிருந்தது. கிராம மக்களுக்கோ ஒரே எரிச்சல். ''இனிமேல் மின்சாரம் தடைபட்டால் நடப்பதே வேறு '' என ஒருவர் மின் வாரியத்துக்கு போனில் பேசி எச்சரிக்கை விடுத்தார்.

ஒலிம்பிக்கில், படகு வலித்தல் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் தத்து பபன் பொகனல்லின் சொந்த கிராமத்தில், நேற்று நடந்த  உ,ண்மைச் சம்பவம் இது. நான்கு வருடங்களுக்கு முன், மகாராஷ்ட்ராவின் மராத்வாடா பகுதியில் கடுமையான வறட்சி. மக்கள் கூட்டம் கூட்டமாக பிழைப்புத் தேடி இடம்பெயருகின்றனர். தத்துவின் தந்தை ஒரு வெங்காய விவசாயி. அவரது உயிரை வறட்சியும் புற்றுநோயும் பறித்துக் கொள்கின்றன.

குடும்பத்துக்கு தத்துதான் மூத்த மகன். ஏற்கனவே தந்தையின் மருத்துவச் செலவுக்காக, இருந்த கொஞ்ச நஞ்ச நிலத்தையும் விற்றாகி விட்டது. தத்து தந்தையின் இறுதிச்சடங்குக்கு கூட கிராம மக்கள்தான் உதவியிருக்கின்றனர். கையில் சல்லிக் காசு இல்லாத நிலையில், குடும்ப பாரம் தத்து மீது விழுந்தது..சொந்த கிராமத்தை விட்டு வெளியேறுகிறார் தத்து. நெடு நெடுவென 6 அடி 4 இன்ச் உயரத்தில் தத்து இருப்பார். ராணுவம் அடைக்கலம் கொடுத்தது. தத்துவின் உயரத்தையும் கை, கால்களின் நீளத்தையும் அளந்த ராணுவ அதிகாரி ஒருவர், 'படகு வலிக்க சரியான ஆள் கிடைத்திருக்கிறார்' என அவரை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.உண்மையைச் சொல்லப் போனால் அதுவரை தத்துவுக்கு நீச்சல் கூடத் தெரியாது. தண்ணீரைக் கண்டால் கூட பயம்.

 

வாழ்க்கையில் சோகம் இருக்கலாம். ஆனால் சோகமே வாழ்க்கையானால்  என்ன செய்வது?. தத்து இரண்டாவது ரகம். கடந்த மார்ச் மாதம், தென் கொரியாவில் ஒலிம்பிக் படகு வலித்தலுக்கான தகுதி சுற்றுப் போட்டியில் பங்கேற்க, தத்து தென்கொரியா சென்றிருந்தார். அந்த சமயத்தில், தத்துவின் தாயார் விபத்தில் சிக்கி, தலையில் பலத்த காயமடைந்தார். சுமார் 3 மாத காலம் கோமாவில் இருந்தார். ஒலிம்பிக் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் தத்துவின் தாயார் வீடு திரும்பினார்.

தாயாரின் சிகிச்சைக்காக தத்துவுக்கு வீட்டை விற்க வேண்டிய நிலை. இப்போது ஓலைக் குடிசை ஒன்றில் தத்துவின் குடும்பம் தஞ்சம் புகுந்திருக்கிறது. வீட்டில் டி.வி கூட கிடையாது. அவரது தாயாருக்கு மேற்கொண்டும் சிகிச்சைத் தேவைப்படுகிறது. ஆனால், தத்துவின் கையில் பணமில்லை. ஒலிம்பிக் படகு வலித்தல் பயிற்சிக்காக  அரசு  ரூ. 5 லட்சம் மட்டும் ஒரு முறை வழங்கியுள்ளது. அது பயிற்சிக்கு கூட போதவில்லை. இத்தகைய கடினச் சூழலில்தான் ரியோவில் அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார் தத்து.

அண்மையில் பிரபல எழுத்தாளர் ஷோபா டே,  இந்திய ஒலிம்பிக் வீரர்கள் குறித்த சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை வெளியிட்டார். அதில் ''டீம் இந்தியாவின் இலக்கு இதுதாதன். ரியோவில் ஊர் சுற்றுவார்கள். செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள். இதுவெல்லாம் பணத்தை வீண் செய்யும் வேலை'' என சகட்டு மேனிக்கு கருத்து கூறியிருந்தார். ஒலிம்பிக் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், ஷோபா டேவின் இந்த கருத்து விளையாட்டு வீரர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அரசியல் தலையீடும், தகுதியற்றவர்களுக்கு வாய்ப்பும் வழங்கும் தேர்வாளர்களுக்கு மத்தியில் இருந்துதான் தத்து போன்ற ஒலிம்பிக் வீரனும் உருவாகி வந்திருக்கிறான் என்பது  ஷோபா டே போன்றவர்களுக்குத்  தெரியுமா... தெரியாதா என்று நமக்குத் தெரியவில்லை!

- முரளி.சு
(மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement