Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஒலிம்பிக் பதக்கம் என்ன பாண்டி பஜாரிலா விற்கிறது..?'

‘ஊர் சுற்றுவதும், செல்ஃபி எடுப்பதும்தான் இந்திய வீரர்களின் இலக்கு. இவர்களுக்கு செலவு செய்வது வீண்’ என ட்வீட் தட்டி இருந்தார் பிரபல(!) எழுத்தாளர் ஷோபா டே. ‘அன்னிக்கு மட்டும் கணக்கு வாத்தியாருக்கு பி.இ.டி. டீச்சர், ஸ்போர்ட்ஸ் பீரியடை கடன் கொடுக்காம இருந்திருந்தா, இன்னிக்கு நான் ஒலிம்பிக்கல தங்கம் ஜெயிச்சிருப்பேன்’ என சோஷியல் மீடியாவில் கிண்டல் செய்கின்றனர் சிலர். விஷயம் இதுவே.

ஆரோக்கிய ராஜீவ்

ரியோ ஒலிம்பிக் தொடங்கி ஒரு வாரமாகி விட்டது. இன்னும் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கவில்லை. இதைத்தான் அப்படி குத்திக் காட்டுகின்றனர். ஷோபா மட்டுமல்ல நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் நடக்கும்போதெல்லாம் நமக்குள் இருக்கும் தேசப்பற்றும், பதக்க எதிர்பார்ப்பும் எகிறி விடுகிறது. ‘அத அப்படி பண்ணிருக்கலாம். இதை இப்படி பண்ணி இருக்கலாம்...' என விவாதம் பறக்கிறது.

ஒவ்வொரு வீரனுக்கும் ஒலிம்பிக் என்பது சிம்மசொப்பனம். அதில் பங்கேற்பது என்பது குதிரைக்கொம்பு. இது ஷோபாக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆண்களுக்கான 100 மீட்டர் தூரத்தை 10 விநாடிகளுக்குள் கடக்க திராணி இருப்பவனுக்கு மட்டுமே ஒலிம்பிக்கில் இடம். ஓடத் தொடங்கிய எல்லோருக்கும் கிடைத்துவிடாது இந்த வாய்ப்பு. ஒவ்வொரு போட்டியிலும் இப்படி ஒவ்வொரு இலக்கு. மயிரிழையில், மைக்ரோ செகண்ட்களில் ஒலிம்பிக் வாய்ப்பை தவற விட்டவர்கள் ஏராளம், ஏராளம்.

வாக்கர் கணபதி

ஆசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் குவித்தும், இன்னும் சொந்த வீடு இல்லாமல் தவிப்பவர் திருச்சியைச் சேர்ந்த தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ். மாத வருமானம் 5 ஆயிரத்தில் பிழைப்பு நடத்தும் தருமபுரியை அடுத்த குக்கிராமத்தை சேர்ந்தவர் ரேஸ் வாக்கர் கணபதி. தந்தை இறந்துவிட, மருத்துவமனைப் படுக்கையில் இருந்த தாயை மீட்க, இருந்த நிலத்தையும் விற்றவர் மகாராஷ்ட்ராவை சேர்ந்த படகு வலித்தல் வீரர் தத்து போகனல். உலக சாம்பியன்களே முயற்சிக்க தயங்கும் ‘ப்ரொடுனோவா’ வால்ட் பிரிவில் சாதிக்க, உயிரைப் பணயம் வைத்தவர் அகர்தலாவை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மகர். இவர்கள் எல்லாம் செல்ஃபி எடுப்பதற்காகவா பிரேசில் சென்றிருக்கின்றனர்?

‘யாராவது ஒருவர் நான்காவது இடம் பிடிக்க வேண்டும். இந்தமுறை அந்த இடம் எனக்கு கிடைத்துவிட்டது’ என, 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் பதக்கத்தை நழுவவிட்ட பின் சொன்னார் அபினவ் பிந்த்ரா. ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் முதல் தங்கம் வென்ற அவர், இந்த சாதனையை எட்ட செலவழித்த தொகை ஆண்டுக்கு ரூ.2 கோடி. பயிற்சி எடுத்தது 20 ஆண்டுகள். எல்லோருக்கும் இது சாத்தியமா என்ன?

அபினவ் பிந்த்ரா

" பதக்கம் கிடைக்கவில்லை என விமர்சிப்பவர்கள், அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதே இல்லை. ‘ஈஸியா சொல்லிடுறோம் பதக்கம் கிடைக்கலைன்னு. நாடுவிட்டு நாடு போறோம். அங்க தண்ணி ஒத்துக்கலைன்னாகூட பிரச்னைதான். ஜுரம் வந்துரும். பல பேருக்கு அங்க இருக்குற சாப்பாடு ஒத்துக்காது. இப்படி பல பிரச்னைகள் உள்ளன. இதையெல்லாம தாண்டி ஜெயிக்கணும். அது சாதாரண விஷயமில்லை" என்கிறார் தடகள பயிற்சியாளர் ஒருவர். உண்மைதான்.

பிரேசிலில் நடந்த 2014 உலகக் கோப்பையில், ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றதற்கு, களத்தில் அவர்கள் செயல்பட்ட விதம் மட்டுமே காரணம் அல்ல. பல்பு முதல் உணவு வரை வீட்டில் எப்படி இருக்குமோ அதே வசதியை ஒவ்வொரு வீரருக்கும் பிரேசிலில் ஏற்படுத்தி கொடுத்திருந்தது ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு. ‘நாங்கள் பிரேசிலில் இருப்பதைப் போல உணரவில்லை. ஜெர்மனியில் இருப்பதைப் போலத்தான் உணர்கிறோம்’ என்றனர் ஜெர்மனி வீரர்கள். இதுவும் ஒரு வெற்றிச் சூத்திரம்.

தீபா கர்மகர்

நாமோ கடைசி நேரத்தில்தான் வீரர்களை ஒலிம்பிக் போட்டி நடக்கும் கிராமத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். வீரர்களை எகனாமி கிளாசில் அனுப்பிவிட்டு, அதிகாரிகள் பிசினஸ் கிளாசில் பயணிக்கிறார்கள். தீபா கர்மகர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பிறகுதான், அதன் முக்கியத்துவம் உணர்ந்து அவரது பிசியோதெரபியை அவசர அவசரமாக ரியோ அனுப்பி வைக்கிறோம். இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள்.

இதையெல்லாம் கடந்துதான் சாதிக்க வேண்டும். இன்னும் பதக்கம் கிடைக்கவில்லை என்றாலும், இந்திய வீரர்களின் செயல்பாட்டில் திருப்தியே. அபினவ் பிந்த்ரா பதக்க வாய்ப்பை நழுவ விட்டது 0.7 புள்ளிகளில். வில்வித்தைப் போட்டியில் இந்திய பெண்கள் அணி கடைசி ரவுண்டு வரை போராடியது. ஜெர்மனியிடம் போட்டி முடிய 3 செகண்ட் இருக்கும்போது கோல் வாங்கி தோற்றது இந்திய ஹாக்கி அணி. இப்படி ஒவ்வொரு பதக்கமும் மயிரிழையில்தான் நழுவுகிறது.

முந்தைய ஒலிம்பிக் போட்டிகளுடன் ஒப்பிடும்போது, ஏற்பாடு மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் இந்தமுறை பரவாயில்லை. ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களுக்கு ‘ஒலிம்பிக் பதக்க இலக்கு’ திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிப்பதெல்லாம் புதிது. அதனால்தான் ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதன்முறையாக 118 வீரர்களை அனுப்பி வைத்தது இந்தியா. மாற்றத்துக்கான விதை இப்போதுதான் தூவப்பட்டுள்ளது. விதை விருட்சமாக நாளாகும்.


நினைத்தவுடன் வாங்கிட ஒலிம்பிக் பதக்கம் என்ன பாண்டி பஜாரிலா விற்கிறது? அலங்காரமான ஷோ ரூம்களில் இருக்கும் ஆடி கார் போன்றது. எல்லோராலும் எளிதில் வாங்கிட முடியாது!

- தா.ரமேஷ்

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement