Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறுதிச் சுற்றில் இன்று களம் காண்கிறார் தீபா... ஒலிம்பிக் பதக்கம் கிடைக்குமா?

ந்த பெண் குழந்தைக்கு இயற்கையாகவே தட்டையான பாதம். "இந்த  குழந்தை நிச்சயம் ஜிம்னாஸ்டிக்கில் ஜொலிக்கவே முடியாது. தட்டையான பாதம் கொண்ட எந்தவொருவரும் ஜிம்னாஸ்டிக்கில் சாதிப்பது சாத்தியமில்லை. உங்கள் குழந்தைக்கு ஆசை இருக்கிறது, ஆர்வம் இருக்கிறது, திறமை இருக்கிறது. ஆனால் ஜிம்னாஸ்டிக்கில் சாதிக்கமுடியாது. அதுதான் நிஜம். ஜிம்னாஸ்டிக்கை தூக்கிப்போட்டுவிட்டு குழந்தையை  நன்றாக படிக்க வைப்பது குறித்து யோசியுங்கள்" - இப்படித்தான் பல ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர்களும் துலால் கர்மகரிடம் அறிவுறுத்தினார்கள்.

ஆனால் தனது குழந்தை மீதும்,  திறமை மீதும் மிகுந்த நம்பிக்கைக்  கொண்ட அந்த தந்தை, தனது முயற்சியை கைவிட வில்லை. இந்தியாவின் விளையாட்டு ஆணையமான 'சாயில்' (SAI)  பணிபுரிந்து வந்த துலால் கர்மகர், தனது பெண் குழந்தையின் கனவுகளுக்கு வடிவம் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

ஜிம்னாஸ்டிக் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், தட்டையான பாதத்தால் தனது குழந்தை  தத்தித்தடுமாறுவதை பார்த்த துலாலால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. பிரபல ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் பிஷ்பேஷ்வர் நந்தியிடம் அழைத்துச் சென்றார்.
 
அப்போதுதான் அந்தச்சுட்டிப் பெண், தட்டையான பாதங்களை வைத்துக்கொண்டே உடலை வளைத்து வளைத்து ஜிம்னாஸ்டிக் பழகுவதை நேரில் பார்த்தார் நந்தி. ஜிம்னாஸ்டிக்கில் ஜம்பிங் செய்ய வேண்டியத்   தருணங்களில் தட்டையான பாதத்தால் அந்த சிறுமி அவதிப்படுவதை பார்த்த நந்தி, 'தொடர் பயிற்சிகள் மூலம் தட்டையான பாதத்தை  வளைவாக்க முயற்சி செய்யலாம்' என சற்று தெம்பூட்டினார்.

அன்றில் இருந்து  அந்தச்  சிறுமி  கடும் பயிற்சி பெறத்தொடங்கினார். அவரது 14-வது வயதில், தேசிய அளவிலான ஜுனியர் பிரிவில் நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில்,  தங்கம் வென்றார். அதுதான் முதல் தங்கம். அந்தப் பரிசும், அதற்கு கிடைத்த பாராட்டுகளும் அந்தச் சிறுமியை ஜிம்னாஸ்டிக்தான் இனி தனது வாழ்க்கை  என்ற  முடிவையும் எடுக்க வைத்தது. அடுத்த 8 ஆண்டுகளில், 77 பதக்கங்கள் அவரை வந்து சேர்ந்தன. அதில் 67 பதக்கங்கள் தங்கம் என்பது அடிக்கோடிட வேண்டிய விஷயம். அந்த சிறுமிதான் தீபா கர்மகர்.

 

ஒலிம்பிக்கில்,  ஜிம்னாஸ்டிக் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு தகுதி  பெற்ற முதல் இந்தியர் என்ற உயரிய சிறப்புக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் தீபா. இன்று இரவு நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் இந்தியாவுக்கு பதக்கம் வென்றால் அது நிச்சயம் வரலாறாகவே மாறும்.

அகர்தலா டூ ரியோ டி ஜெனிரோ  சாத்தியமானது எப்படி ?

திரிபுராவின் தலைநகர் அகர்தலாவில் கீதா - துலால் தம்பதிக்கு 1993 ம் ஆண்டு, ஆகஸ்ட் 9 ம் தேதி பிறந்தவர் தீபா. பொருளதாரத்தில் மிகவும் பின் தங்கிய இந்த பகுதியில் இருந்து ஒரு விளையாட்டு வீராங்கனை வெளியே தெரிவதே பெரிய விஷயம். மேரிகோமை தொடர்ந்து,  இந்தியாவின் கிழக்கு பகுதியில் இருந்து வந்திருக்கும் புதுப் புயல் இந்த தீபா கர்மாகர்.

தீபாவின் தந்தை, இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை பார்க்கிறார் என்றாலும் நடுத்தர வசதி கொண்ட குடும்பம்தான். இந்தியாவில் ஜிம்னாஸ்டிக் துறைக்கு போதிய நிதியை அரசு ஒதுக்குவது கிடையாது என்பதால் ஆரம்பகட்டத்தில் கடும் பொருளாதார சிக்கல்களை சந்தித்தார்.

" நான் முதன் முறையாக ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்க செல்லும்போது சரியான  ஷூ கூட  இல்லை. ஜிம்னாஸ்டிக் செய்வதற்கான பிரத்யேக உடையை கூட இன்னொருவரிடம் இருந்து  கடனாக  வாங்கினேன்" என  பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில்  தீபா சொல்லியிருந்தார். ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் வெற்றி பெற ஆரம்பித்த பிறகுதான், தனக்கு தேவையான உடைகள் முதலானவற்றை எல்லாம் சொந்தமாக வாங்கினார். ஆரம்பத்தில் ஜிம்னாஸ்டிக் குறித்து பெரிய அபிப்ராயம் தீபாவுக்கு இல்லை. ஆனால் தன்னால் ஜிம்னாஸ்டிக்கில் சாதிக்க முடியும் என்ற தருணத்தை உணர்ந்த பிறகு, வேற லெவல் பாய்ச்சல்களுக்கு தயாரானார்.  தீபாவின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது 2010 ம் ஆண்டுதான்.

2010 காமன்வெல்த் போட்டிகள் டெல்லியில் நடந்தபோது, தீபாவும் ஒரு பங்கேற்பாளராக களத்தில் இருந்தார். அப்போது ஆஷிஷ்குமார் இந்தியாவுக்காக ஜிம்னாஸ்டிக் பிரிவில் வெற்றிப் பெற்று பதக்கம் வாங்கித்தந்திருந்தார். இந்தியர் ஒருவர்  சர்வதேச ஜிம்னாஸ்டிக் போட்டியில் பதக்கம் பெறுவது அதுதான் முதல் முறை. ஆஷிஷ்குமாரின் வெற்றியை பார்த்து, தீபாவுக்கு  தன்னம்பிக்கை எக்கச்சக்கமாக கூடியது. அடுத்து நடைபெறும் கிளாஸ்க்கோ காமன்வெல்த்தில் இந்தியாவுக்காக பதக்கம் ஜெயிப்பது என தனக்குத்தானே உறுதிபூண்டார் தீபா. நான்காண்டுகள் உருண்டோடியது  கிளாஸ்கோ காமென்வெல்த்தில்  வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார். அப்போதுதான் தீபா குறித்து செய்திகள் வெளிவரத்துவங்கின. 2015 ம் ஆண்டு,  ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடந்த ஆர்டிஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெண்கலம் வென்றார்.

பொதுவாக ஜிம்னாஸ்டிக் போட்டிகளில், சர்வதேச அளவில் பதக்கம் வெல்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. ரஷ்யா, சீனா, ஜப்பான் நாடுகளில்  ஜிம்னாஸ்டிக்குக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். பல நூற்றுக்கணக்கான பிரத்யேக ஜிம்னாஸ்டிக் பள்ளிகள் அங்கே இருக்கின்றன. இதனால் அந்த நாட்டு வீராங்கனைகளின் ஆதிக்கம் ஜிம்னாஸ்டிக்கில் அதிகம்.  ஆனால் இந்தியாவில் நிலைமை அப்படி கிடையாது. அதுவும் தீபா படைத்துள்ள சாதனைகள் உச்சிமுகர வேண்டியவை.

விளையாட்டில், அதுவும் ஜிம்னாஸ்டிக் பிரிவுகளிலேயே மிகக் கடினமானது, அபாயகரமானது  ப்ரோடுனோவா வால்ட் (PRODUNUVA VAULT). ஓடிவந்து வந்து ஒரு தட்டையான பகுதியில் கையை வைத்து,  அந்தரத்தில் இரண்டு  சம்மர் சால்ட் அடித்தவாறே  தரையில் சரியாக இறங்க வேண்டும். இரண்டு மூன்று முறை தொடர்ந்து அந்தரத்தில் சம்மர்சால்ட் அடிப்பது என்பது மிகவும் அபாயகரமான விஷயம். உங்களின் எடை 50 கிலோ என வைத்துக்கொள்வோம். அந்தரத்தில் இரண்டாவது தடவை சம்மர் சால்ட் அடிக்கும்போது உங்கள் காலில் 100 கிலோ எடையை உணர்வீர்கள். இந்த எடையை பேலன்ஸ் செய்துதான் வெற்றிகரமாக முடிக்க வேண்டும்.

பலர் இந்த வால்டில் அடிபட்டு வாழக்கையை இழந்திருக்கிறார்கள். பலரின் கணுக்கால், மூட்டுகள், பாதங்கள்  உடைந்திருக்கின்றன. மிகக்கடினமான இந்த பிரிவில்  இதுவரை உலகிலேயே மூன்றாவது பெஸ்ட் ஸ்கோர் வைத்திருப்பது தீபாதான். கிளாஸ்கோ காமன்வெல்த்தில்தான்  தீபா இந்தச் சாதனையை நிகழ்த்தினார். ஜிம்னாஸ்டிக்கில் 22- 23 வயது என்பதே அதிகமான வயதுதான். அந்த வயதுகளில் சாதனை படைப்பது என்பது சாதாரண விஷயமில்லை. ஜிம்னாஸ்டிக் மீது அளவில்லாத காதலும் அசாதாரண உழைப்பும்,  வலிமையான மன உறுதியும் கொண்ட ஒருவரால்தான் இப்பேற்பட்ட சாதனைகளை நிகழ்த்த முடியும்.

ஒரு நாளில் காலை, மாலை என ஏழு மணி நேரம் கடும் பயிற்சி செய்து, மன உறுதியுடன் ரியோ நகரத்துக்கு வந்த தீபாவுக்கு இறுதிச் சுற்று பரிசாய் கிடைத்திருக்கிறது. உயிரைப் பணயம் வைத்து, அபாயகரமான விளையாட்டில் அசத்தி வரும் தீபா கர்மகரின் கனவுகள் நனவாக நாம் வாழ்த்துவோம்.

இறுதிச் சுற்றில் வெற்றியோ, தோல்வியோ, எதிர்பார்ப்பு மூட்டைகளை அவர் மேல் தூக்கிவைக்காமல் அளவில்லாத ஆதரவு தீபிகா பக்கம் இருக்கட்டும்.

- பு.விவேக் ஆனந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close