Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இவர்தான் உண்மையான ஒலிம்பியன் – ஒற்றை ஷூவோடு ஓடிய வீராங்கனை!

வெற்றி யாருக்கும் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. எத்தனையோ தடைகளைத் தாண்டித் தான் ஒவ்வொருவரும் வெற்றிகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. இயலாமை முதல் இயற்கை வரை அனைத்தையும் தாண்டி வருபவருக்கே அது வசப்படுகிறது. ஒலிம்பிக் என்னும் மாபெரும் களத்தில் வெற்றி வாகை சூடும் ஒவ்வொருவரும் பல இன்னல்களைத் தாண்டித் தான் வெற்றி மேடை ஏறுகின்றனர். அந்த வெற்றிகளின் பின்னால் இருக்கும் கண்ணீரும், கண்ணீர்களின் பின்னால் உள்ள வலிகளும் நாம் அறியாதவை. ரியோவில் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் அது ஒரு கனவு. வரும் மாதக்கணக்கில் செய்த பயிற்சி அல்ல. நான்கு ஆண்டு தவம் அது. அப்படிப்பட்ட தவம் வேறொருவரால் தடைபட்டால், தனது உழைப்பு முழுதும் ஒரு நொடியில் கரைந்து போனால்... அவையெல்லாம் நடந்தாலும் ஒரு உண்மையான ஒலிம்பியன் தனது போராட்டக் குணத்தைக் கைவிடமாட்டார். தோல்வியைத் துரத்தி தனது கண்ணீருக்கு அர்த்தம் சேர்ப்பார். அப்படியான ஒரு போராளியைத் தான் இன்று பிரேசிலின் ஒலிம்பிக் அரங்கம் கண்டுகளித்தது.

எடினேஷ் டிரோ – எத்தியோப்பியாவைச் சேர்ந்த 3000மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்ட வீராங்கனை. இந்தப் போட்டியின் 3வது மற்றும் கடைசி சுற்று தொடங்கும் போது வெற்றி பெற வாய்ப்புள்ளவர்களில் அவரும் ஒருவராகக் கருதப்பட்டார். ஆனால் துருதிர்ஷ்டம் அவரைத் துறத்தியது. 17 பேர் ஓடிய அந்தப் பந்தயத்தில் இரண்டரை லேப்கள் மீதம் இருந்த நிலையில், ஓடுதளத்தில் தண்ணீர் இருந்த காரணத்தால் சக போட்டியாளர் ஒருவர் கால் இடறி கீழே விழுந்தார். கீழே விழுந்த அவர் டிப்ரோவின் காலில் மோதினார். இந்த மோதலில் இன்னொரு வீராங்கனையும் கீழே விழுந்தார். கீழே விழுந்த இரு வீராங்கனைகளும் எழுந்த ஓடத் தொடங்கினார். ஆனால் கீழே விழாத டிப்ரோவுக்கு பிரச்சனை தனது காலனியின் வாயிலாக எழுந்தது. அந்த வீராங்கனை டிப்ரோவின் கால் மீது விழ, அவரது ஷூ பழுதடைந்தது. சில நொடிகள் நின்று அதை சரி செய்ய முயற்சி செய்தார் டிப்ரோ.

 

ஆனால் மற்ற அனைவரும் தன்னை முந்திவிட்டதால் அதற்குமேல் எதுவும் யோசிக்காமல் பழுதடைந்த அந்த ஷூவை கழட்டி வீசிவிட்டு ஒற்றை ஷூவோடு ஓடத் தொடங்கினார் டிப்ரோ. அதைப் பார்த்த மொத்த அரங்கமும் டடிப்ரோவை உற்சாகப்படுத்தியது. சக நாட்டவரைப் போல் கூச்சலிட்டு அந்தப் போராளிக்கு அவர்கள் தங்கள் ஆதரவை அளித்தனர். ஒற்றை ஷூவோடு இலக்கை அடைய வேண்டும் என்ற வெறியோடும் இன்னும் வேகமாக ஓடினார் டிப்ரோ. சுமார் அரை மைல் தூரம் ஒற்றை ஷூவோடு ஓடிய டிப்ரோ பலரையும் முந்தி ஏழாம் இடம் பிடித்தார். முதல் மூன்று இடம் பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் டிப்ரோ டிராக்கிலேயே கண்ணீர் விட்டு அழத்தொடங்கினார். அவரது இந்த முயற்சியைப் பாராட்டி சக போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் அளித்தனர். பார்வையாளர்கள் அனைவரும் ஒரு சாம்பியனுக்குத் தரும் கோஷத்தை டிப்ரோவுக்காக எழுப்பினர்.

தெரியாமல் ஏற்பட்ட விபத்தால் மூன்று வீராங்கனைகளின் வாய்ப்பு பரிபோனதால் மேல்முறையீடு செய்யப்பட்டு டிப்ரோ, டிரீகி, ஆயிஷா பிராட் ஆகிய மூவருக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

 

ஒலிம்பிக் என்பது வெறும் விளையாட்டுப் போட்டியல்ல. ஆயுதம் இல்லாமல் போராடும் போராளிகளின் போர்க் களம் அது. ஒலிம்பிக்கை ரசிக்கும் நமக்கு வேண்டுமானால் பதக்கம் வெல்வது மட்டும் முக்கியமாக இருக்கலாம். ஆனால் அந்தக் களத்தில் போராடும் ஒவ்வொருவரும் தோல்வி, அவமானம், வலி, வேதனை அவையனைத்தையும் எதிர்த்து யுத்தம் நடத்துபவர்கள். அந்தப் போர்க் களத்தில் பின்வாங்குவது மட்டுமே அவர்களைப் பொருத்தமட்டில் தோல்வி. தான் ஒரு ஒலிம்பியன் என்ற நினைப்பே அவர்களை பல்லாண்டு காலம் பெருமையோடு வாழ வைக்கும். போராடுவது மட்டுமே அவர்களின் பொழுதுபோக்கு.

ஒலிம்பிக் மற்றியும் ஒலிம்பியர்கள் பற்றியும் தெரியாமல் பதக்கம் வாங்காவதவர்களை தூற்றிக்கொண்டிருப்பவர்களை கழண்டு போன தனது ஷூவால் அடித்துவிட்டார் டிப்ரோ!

மு.பிரதீப் கிருஷ்ணா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement