Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மூன்று பேர் மூன்று கனவு! - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-13)

அன்பு வாசகர்களே, 


முந்தைய அத்தியாயங்களைப் படிக்க : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12 


சுரிநாம் - தென் அமெரிக்கக் கண்டத்தின் மிகச்சிறிய நாடு. அந்த நாட்டிலிருந்து முதன்முதலாக ஒரு வீரர், 1960 ரோம் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள தகுதி பெற்றார். அவர், விம் எஸாஜஸ். நல்ல ஓட்டப்பந்தய வீரர். பல்வேறு பிரிவு ஓட்டங்களில் தேசிய சாம்பியன். 1956ல் சுரிநாமின் சிறந்த விளையாட்டு வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1960ல் ரோமுக்குச் சென்ற விம், 800 மீ ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கவிருந்தார். ஆகஸ்ட் 31 அன்று போட்டி. அவர் மைதானத்துக்குச் சென்றபோது பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த தகுதிச் சுற்று போட்டி முடிவடைந்திருந்தது. சுரிநாமின் அணி மேலாளர், விம்மிடம் போட்டி நேரத்தைத் தவறுதலாகச் சொல்லிவிட்டார். ஆகவே விம் அந்த நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். ஒலிம்பிக்கில் அடியெடுத்து வைக்கும் முதல் சுரிநாமியன் என்ற கௌரவத்தை, தன் பதக்கக் கனவுகளை எல்லாம் அந்தத் தூக்கம் பறித்தது. அடுத்தவர் செய்த தவறால் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்த விம், மீண்டும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளவே இல்லை.

விம் எஸாஜஸ்

 

2005ல், சுரிநாம் ஒலிம்பிக் கமிட்டி, ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட முதல் சுர்நாமியர் என்ற பெருமையை விம்முக்கு அதிகாரபூர்வமாக வழங்கி கௌரவித்தது. அதற்கு அடுத்த இரு வாரங்களில் விம் இறந்துபோனார்.

தாமஸ் ஹேமில்டன் பிரௌன்

 

தாமஸ் ஹேமில்டன் பிரௌன் - தென் ஆப்பிரிக்காவின் குத்துச்சண்டை வீரர். இருபதாவது வயதில் தென் ஆப்பிரிக்க ஒலிம்பிக் அணியில் இடம்பிடித்தார். குத்துச்சண்டையில் லைட்வெயிட் (எடை 135 பவுண்டுக்குள் இருக்க வேண்டும்) பிரிவில் மோதுவதாக இருந்தார். அதற்காக 1936 பெர்லின் நகரத்துக்கு வந்து சேர்ந்தார். பயிற்சிகளில் உத்வேகத்துடன் ஈடுபட்டார் தாமஸ்.

முதல் சுற்றுப் போட்டியில் சிலியின் கார்லோஸ் லில்லோ என்ற வீரருடன் தாமஸ் மோதினார். கடுமையான போட்டி. இருவரின் கைகளுமே ஓங்கித்தான் இருந்தன. ஆனாலும் தாமஸின் குத்துகள் வலிமையானதாக இருந்தன. 

போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டது. கார்லோஸ் லில்லோ வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். தாமஸுக்குப் பெருத்த ஏமாற்றம். கோபம் தகித்தது. ஓர் உணவகத்துக்குச் சென்றார். ஆத்திரம் தீரும் வரை கண்டதையும் ஆர்டர் செய்து சாப்பிட்டார். வந்து தூங்கி விட்டார்.

ஒரு சில நாள்களில் தாமஸைத் தேடி ஒரு செய்தி வந்தது. சந்தோஷமான செய்திதான். கார்லோஸுடனான போட்டியில் நடுவர் ஒருவர் புள்ளிகளைத் தவறாகக் கணக்கிட்டு விட்டார். உண்மையில் தாமஸின் புள்ளிகளே அதிகம். அவரே வெற்றியாளர்.

மீண்டும் லைட்வெயிட் சுற்றில் நுழைவதற்கு தாமஸுக்குக் கதவு திறந்தது. துள்ளிக் குதித்து வந்து நின்ற தாமஸை போட்டிக்கான அதிகாரிகள், எடை மெஷின் மேல் ஏறச் சொன்னார்கள். அது 135ஐ எல்லாம் தாண்டிக் குதித்தது. அன்று கோபத்தில் உண்ட உணவு, தாமஸின் ஒலிம்பிக் கனவைக் கலைத்துப் போட்டிருந்தது.

1890ல் ரொடீஸியா நாட்டுக்கு (இன்றைய ஜிம்பாப்வே) ஆங்கிலேயர்கள் தங்கம் தோண்ட வந்தனர். இருக்க இடம் கேட்டு வந்தவன் படுக்கப் பாய் கேட்டால்கூட பரவாயில்லை. இடம் கொடுத்த வீட்டுக்காரனை அடித்துத் துவைத்து, வீட்டையே தன் வசமாக்கிக் கொண்டான். அந்த வீட்டுக்காரனையே தன் வேலைக்கார அடிமையாகவும் நடத்த ஆரம்பித்தான். எதிர்த்தவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டார்கள். இதுதான் ரொடீஸியாவின் சுருக்கமான அரசியல். 

இந்த ரொடீஸியாவின் பிறந்த வெள்ளை இனத்தவர், ப்ரூஸ் கென்னடி. அவரது தந்தை தடகளப் பயிற்சியாளர். தனது மகனை தடகள வீரராகவே வளர்த்தார். ப்ரூஸுக்கு ஈட்டி எறிவதில் ஆர்வம் இருந்தது. அதில் கவனம் குவித்து தேசிய அளவில் முன்னேறினார். 

1972 முனிச் நகர ஒலிம்பிக் போட்டிகளுக்காக, ரொடீஸியாவின் சார்பில் ஈட்டி எறியும் வீரராக ப்ரூஸ் கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒலிம்பிக் ஆரம்பமாவதற்கு இரு வாரங்கள் முன்பாகவே முனிச் சென்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ரொடீஸியாவில் ஆளும் (மைனாரிட்டி) பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான பூர்வகுடி மக்களின் கலகங்கள் உச்சம் பெற்றிருந்தன. ‘கருப்பர்கள் இன்னும் தேசத்தை ஆளும் அளவுக்குத் தகுதியை வளர்த்துக் கொள்ளவில்லை’ என நிறவெறி கொண்ட வெள்ளை ரொடீஸிய ஜனாதிபதி ஆட்சியை விட்டுக் கொடுக்க அடம்பிடித்தார்.

 

ப்ரூஸ் கென்னடி

அந்தச் சூழலில் நிறவெறி கொண்ட ரொடீஸியா, முனிச் ஒலிம்பிக்கில் பங்கேற்றால், நாங்கள் யாரும் பங்கேற்க மாட்டோம் என பிற ஆப்பிரிக்க நாடுகள் குரலை உயர்த்தின. வேறு வழியின்றி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ரொடீஸிய அணியை நாடு திரும்பும்படி அறிவுறுத்தியது. ப்ரூஸின் ஒலிம்பிக் கனவுக் குமிழ்கள் பட் பட்டென காணாமல் போயின.

சரி, அடுத்த ஒலிம்பிக் போட்டிகளுக்குள் ரொடீஸியப் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துவிடும். அதில் நாம் நிச்சயம் பங்குபெறுவோம். இப்படியாக மனத்தைத் தேற்றிக் கொண்டு பிற தேசிய, சர்வதேச போட்டிகளில் ஈட்டி எறிந்து கொண்டிருந்தார் ப்ரூஸ்.

இதற்கிடையில் ப்ரூஸ் அமெரிக்கா சென்றார். அங்கே பார்பரா என்ற பெண்ணைச் சந்தித்தார். திருமணம் செய்து கொண்டார். 1976ல் கனடாவின் மாண்ட்ரியல் நகரத்தில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகளுக்காக ப்ரூஸ் தயாராகிக் கொண்டிருந்தார். ரொடீஸிய அணிக்காக தேர்வும் செய்யப்பட்டார். ஆனால், ரொடீஸிய அரசியல் பிரச்னைகள் ஓயவில்லை. மீண்டும் பிற ஆப்பிரிக்க அணிகள் எதிர்ப்புக் கொடி பிடிக்க, சர்வதேச ஒலிம்பிக் சங்கம், ‘மாண்ட்ரியல் பக்கம்கூட வர வேண்டாம்’ என்று ரொடீஸியாவை ஒலிம்பிக்கை விட்டுத் தள்ளி வைத்தது.


ப்ரூஸ், நொந்து போனார். இனியும் ரொடீஸியக் குடிமகனாக எதையும் சாதிக்க இயலாது என்று நினைத்தார். அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். அங்கே ஈட்டி எறிதலில் தேசிய சாம்பியன் பட்டமும் பெற்றார். 1980 ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கிக் கொண்டிருந்தன. பெரும் கனவுகளுடன் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ப்ரூஸ், அன்றைக்கு உலகின் டாப் 10 ஈட்டி எறியும் வீரர்களில் ஒருவராகவும் மிளிர்ந்தார். களத்தில் அமெரிக்காவுக்காக ஒரு பதக்கம் தன்னால் வாங்க முடியும் என்ற கனவு அவருக்குள் கனன்றது.

1980 ஒலிம்பிக் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற இருந்தது. 1979ல் சோவியத், ஆப்கனிஸ்தான் மீது போர் தொடுத்திருந்தது. இன்னும் ஒரு மாதத்தில் சோவியத் படைகள் ஆப்கனிஸ்தானிலிருந்து விலக்கிக் கொள்ளப்படாவிட்டால், மாஸ்கோ ஒலிம்பிக்கை அமெரிக்கா புறக்கணிக்கும் என்று அதிபர் ஜிம்மி கார்ட்டெர் அறிவித்தார். அதுபோலவே அமெரிக்கா, மாஸ்கோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளவில்லை.

நேராக நிற்க வைத்து நெஞ்சில் யாரோ ஈட்டியைப் பாய்ச்சியது போலிருந்தது, கஷ்டப்பட்டு ப்ரூஸ் தன்னைத் தேற்றிக் கொண்டார். அத்துடன் தனது ஒலிம்பிக் கனவுகளை முடித்துக் கொண்ட ப்ரூஸ், புன்னகையுடன் வார்த்தைகளை வெளியிட்டார். 

‘நான் முதலில் அமெரிக்கன். பிறகே விளையாட்டு வீரன். அரசின் முடிவை மதிக்கிறேன். என்ன, நான் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளாமலே மூன்று முறை தோற்றுப் போய்விட்டேன்.’


1979ல் ரொடீஸியாவின் அரசியல் பிரச்னைகள் முடிவுக்கு வந்தன. ரொடீஸியா, ஜிம்பாப்வே ஆனது. 1980ல் அங்கே முதல் கருப்பின அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாஸ்கோ ஒலிம்பிக்கில் ஜிம்பாப்வே அணி கலந்து கொண்டது.

(டைரி புரளும்.)

அடுத்த அத்தியாயம் : சுதந்திர இந்தியாவின் ஒலிம்பிக் நாயகன் ஜாதவ்!

- முகில்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement