Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீச்சல் குளத்தையே கண்டிராத நீச்சல் வீரர்!- ஒலிம்பிக் விநோதம்

ம். தலைப்பு பொய் சொல்லவில்லை. எரிக் முசாம்பனி மலோங்கா ஒரு பெரிய நீச்சல் குளத்தை, ஒலிம்பிக் போட்டிக்கு நேரில் சென்ற பின்னர்தான் முதன்முறையாக கண்டார். ஒரு தேசத்தின் கனவு அது.

அது ஒரு அழகான ஏப்ரல் காலை. தன் தங்கைகளுடன் அமர்ந்து காலை உணவை ருசித்துக் கொண்டிருந்தார் எரிக். அப்போது வானொலியில் ஒலிபரப்பான ஒரு விளம்பரம் அவரை ஈர்த்தது. ஒலிம்பிக் பந்தயத்தில் நீச்சல் வீரர்களை தேர்வு செய்யும் போட்டி நடைபெறுவதற்கான அறிவிப்பு அது. நாம் ஏன் முயற்சி செய்யக்கூடாது?., என்று சிந்தித்தார் எரிக். அவரது வாழ்க்கையை மாற்றப்போகும் சிந்தனை அது என்று அப்போது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

இத்தனைக்கும் அவர் முறையாக நீச்சல் பயிற்சி பெற்றவரில்லை. கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். ஆனால் எதிலும் தனித்திறமை கிடையாது. விளையாடத்தெரியும், அவ்வளவு தான். தவிர சைக்கிள் ஓட்டுவதிலும் ஆர்வம் இருந்தது. ஏழ்மை காரணமாக சொந்தமாக வாங்க இயலாது நண்பர்களினுடையதை ஓட்டி மகிழ்வது வழக்கம். ஆனால், நீச்சல்? கடலில் ‘தையத்தக்கா’ என்று நீச்சலடித்த அனுபவம் மட்டுமே உண்டு.

2000-ம் ஆண்டு செப்டம்பரில் துவங்கவிருந்தது, ஆஸ்திரேலியாவின் சிட்னி ஒலிம்பிக்ஸ். அதில் வளரும் நாடுகளும் பங்கேற்பதை ஊக்குவிக்க சிறப்பு தகுதியாக நேரடி அனுமதி கிடைத்திருந்தது, ஈக்குவேட்டரியல் கினியாவிற்கு. இது ஆப்பிரிக்காவின் எண்ணெய் வளம் மிக்க சிறிய நாடு.

போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மலாபோ என்ற ஊரிலிருந்த ஹோட்டல் உரிக்காவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கு காரணம், கினியா நாட்டிலிருந்த ஒரே நீச்சல் குளம் அங்குதானிருந்தது. அன்றைய கணக்கீட்டின்படி ஐந்தேகால் லட்சம் மக்கள் தொகை கொண்ட கினியா நாட்டில் இருந்த ஒரே நீச்சல் குளம் ஒரு ஓட்டலில் இருந்தது. அதிலும் அந்த நீச்சல் குளத்தின் மொத்த நீளம் வெறும் 12 மீட்டர் மட்டுமே!

காலையில் சுறுசுறுப்பாகக் கிளம்பி முதல் ஆளாகப் போய்ச் சேர்ந்தார் எரிக். அவரைத்தவிர அங்கு போட்டிக்காக வந்திருந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஒரே ஒரு பெண் மட்டுமே. ஆம். போட்டிக்காக வந்தவர்கள் வெறும் இரண்டே பேர் தான்.

நீச்சலடிக்கத் தெரியுமா என்று இருவரிடமும் கேட்கப்பட்டது. நீந்திக்காட்டினார்கள். அவ்வளவு தான். ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள கினியா நாட்டின் நீச்சல் வீரர்கள் தயார்! இருவரிடமும் அவர்களது பாஸ்போர்ட், புகைப்படம் போன்றவற்றை தயார் செய்யுமாறு சொல்லி கைகுலுக்கி அனுப்பி விட்டனர்.  

"தீயா வேலை செய்யணும் குமாரு! போய் நல்லா பயிற்சி எடுத்துட்டு வா" என்றனர் ஏற்பாட்டாளர்கள்.
"பயிற்சியாளரை எங்க போய் நான் பார்க்கணும்?" என்ற எரிக்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. "அந்த வெட்டிச்செலவெல்லாம் எதுக்கு? தேவையில்லை. நீயாவே பயிற்சி எடுத்துக்கோ" என்று சொல்லி விட்டனர்.

நீச்சலில் பலவகைகளுண்டு. எந்த வகைக்கு எப்படி நீந்த வேண்டும் என்று தெரியாது. அதிலும் போட்டிக்காக நீந்துதல் என்பது தனி வகை. நீச்சல் குளமும் இல்லை. ஆறுகளிலும், கடலிலும் தனக்குத் தெரிந்த மாதிரி நீச்சல் பயிற்சி செய்தார் அவர். வார இறுதியில் மட்டும் அந்த பன்னிரெண்டே மீட்டர் நீளமுள்ள நீச்சல் குளத்தில் இரண்டு மணி நேரம் பயிற்சி.

ஒலிம்பிக் விளையாட்டுகள் என்பது ஒரு பிரம்மாண்ட நிகழ்வு என்பது மட்டும் தெரியும். அவரது ஒரே மகிழ்ச்சி தாய் நாட்டின் சார்பாக வெளிநாட்டுக்கு, அதிலும் வெகு தொலைவிலிருக்கும் நாட்டிற்கு பயணம் செய்து ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளப்போகிறோம் என்பதே.

கையில் 3500 ரூபாய் பணமும் துவக்க விழாவன்று கையில் எடுத்துச் செல்ல அவரது தாய்நாட்டின் கொடியும் கொடுத்து விமானமேற்றி அனுப்பி விட்டனர். லிப்ரெவில்லே, பாரிஸ், ஹாங்காங் அதன் பிறகு சிட்னி என்று மூன்று நாட்கள் நீடித்தது அவரது அந்த நீண்டதூரப்பயணம்.  சிட்னி சென்று இறங்கியதும் அவர் செய்த முதல் காரியம், போட்டி நடக்கும் நீச்சல் குளத்தை நேரில் சென்று பார்த்தது தான். அங்கு இரண்டு அதிர்ச்சிகளை சந்தித்தார் அவர்.

முதலாவது நீச்சல் குளத்தில் கயிறு மூலம் நேர்க்கோடுகள் வரையறுக்கப்பட்டிருந்தன. அதற்குள்ளாகத்தான் போட்டியாளர்கள் நீந்த வேண்டும். பன்னிரெண்டே மீட்டர் நீளமுள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்ற அவருக்கு ஐம்பது மீட்டர் நீளமிருந்த அந்த நீச்சல் குளம் பிரம்மாண்டமாய் தெரிந்தது. அதிலும் கோட்டிற்குள்ளாக நீந்த வேண்டுமென்பது அயர்ச்சியைத் தந்தது.

அதைக்கூட சமாளித்து விடலாம் என்று நினைத்தவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அது போட்டிக்காக நீந்த வேண்டிய தூரம் நூறு மீட்டர் என்பது. அவரைத் தேர்ந்தெடுத்த ஏற்பாட்டாளர்கள் "சும்மா அம்பது மீட்டர் தான்யா... அசால்ட்டு!" என்றிருந்தார்கள். அவரும் அதற்கேற்றவாறே பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

வந்தாகி விட்டது. வேறு வழி? அங்கு நீச்சல் குளத்தில் பயிற்சி பெற வந்திருந்த அமெரிக்கர்களை பார்த்து தானாகவே தொழில்(!) பழக ஆரம்பித்தார். எப்படி நீச்சல் குளத்தில் பாய்வது?., கைகளை அசைப்பது எப்படி?., கால்களை அசைப்பது எப்படி?., என எல்லாமே பார்த்துப் பார்த்துத் தெரிந்து கொண்டார். இவரது நடவடிக்கைகளை பார்த்து சந்தேகப்பட்டார் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பயிற்சியாளர் ஒருவர். இவரும் ஒரு போட்டியாளர் தான் என்று உறுதி செய்து கொண்ட பின் தன்னிடமிருந்த இரண்டு புதிய நீச்சலுடைகள், போட்டியின் போது அணிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்புக் கண்ணாடி போன்றவற்றைக் கொடுத்து உதவினதோடு மட்டுமல்லாமல், கொஞ்சம் நீச்சல் பயிற்சியும் அளித்தார்.

அந்த நாளும் வந்தது. முதல் சுற்றில் அவருடன் போட்டியிட ஒரு நைஜீரியரும் தாஜிகிஸ்தானைச் சேர்ந்த மற்றொருவரும் என மேலும் இரண்டு போட்டியாளர்கள் இருந்தனர். சோதனையாக இருவரும் அவசரப்பட்டு நீச்சல் குளத்தினுள் தாவி விட்டதனால், தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டனர். அடுத்து என்ன என்று எரிக்குக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தன்னை நேரடியாக தேர்ந்தெடுத்து விடுவார்களோ?

அதற்கான விடை உடனே தெரிவிக்கப்பட்டது. எரிக் போட்டி போட வேண்டியது மனிதர்களுடன் அல்ல. நேரத்துடன். அதாவது தகுதி பெற நூறு மீட்டர் தொலைவை அவர் 1:10 நிமிடங்களுக்குள் நீந்த வேண்டும். அதுவும் தன்னந்தனியாக.

இவ்வாறு எரிக்கின் அந்த உலகப்புகழ் பெற்ற நீச்சலானது 17,000 மக்களின் முன்னிலையில் துவங்கியது. தன்னுடைய முதல் ஐம்பது மீட்டர் தொலைவை வேகமாகவே நீந்தினார் எரிக் முசாம்பனி. (47 வினாடிகள்) அவரது அத்துணை ஆற்றலையும் பயன்படுத்தினார். என்ன நடந்தாலும் சரி, இடையில் மட்டும் நிறுத்தி விடக்கூடாது என்ற உறுதி மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

ஐம்பது மீட்டரைத் தொட்டுவிட்டு திரும்பும் போது மிகவும் களைப்பாக உணர்ந்தார். கை, கால்கள் அசைப்பது சிரமமாக இருந்தது. சற்றுத் தடுமாறினார். தற்போது உலகமே நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த போட்டியை இறுதி வரை நீந்தி முடிக்க வேண்டும். அப்போது போட்டியினை வர்ணனை செய்து கொண்டிருந்த ஆட்ரியன் மூர்ஹவுஸ் ‘இதெல்லாம் தேவையா? எப்ப வேணா கயிறைப் புடிச்சுட்டு நிக்கப்போறான் பாரேன்’ என்றார் இளக்காரமாக. 1988 சியோல் ஒலிம்பிக்கில் இதே போட்டியில் தங்கம் வென்றவர் இவர்.

என் குடும்பம், என் நண்பர்கள், என் உறவினர்கள், என் தேசம், ஏன் இந்த உலகமே நம்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. நேரத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நம் தேசத்தினை உயர்த்திப் பிடிக்க வேண்டிய தருணத்தை விட்டுவிடாதே என அவர் மனது ஆர்ப்பரித்தது. அப்போது போட்டியினை பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலியர்களின் உற்சாகப்படுத்தும் குரல்கள் கேட்கத் தொடங்கின. அது அவருக்கு மேலும் பலத்தைக் கொடுத்தது. எஞ்சியிருந்த சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி நீந்தினார்.

இறுதியில் ஒரு நிமிடம் 52.72 வினாடிகளில் நீந்தி முடித்தார். தகுதி பெற 1:10 நொடிகளுக்குள் நீந்தியிருந்திருக்க வேண்டும். இது தான் ஒலிம்பிக் வரலாற்றிலேயே மிகவும் அதிகமான நேரம் என்று வரலாற்றில் பதிவானது. அதனாலென்ன? அனைத்து மீடியா வெளிச்சமும் எரிக் முசாம்பனி மீது விழுந்தது அப்போது தான்.

’மக்கள் இதை ரசித்தாலும் எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை’ என்றார் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக இருந்த ஜாகுவஸ் ரோஜ் வெளிப்படையாக. வெற்றி பெற வாய்ப்பில்லாதவர்களை எல்லாம் போட்டியில் கலந்து கொள்ள வைத்து ஒலிம்பிக்கின் பெயரையே கெடுக்கிறார்கள் என்ற வசவும் சொன்னார்கள் சிலர்.

ஆனால் நவீன ஒலிம்பிக்கின் தந்தை என அழைக்கப்படும் பாரோன் பியரே டி கூபெர்டின் இந்த எதிர்மறையான வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. வளரும் நாடுகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்கத்தான் வேண்டும் என்றார் பிடிவாதமாக. ஒருவரின் போராட்டக் குணத்தை வெளிப்படுத்த இதுவே வாய்ப்பாகும். ஒலிம்பிக் போட்டிகளின் நோக்கம் போட்டிகளில் வெற்றி பெறுவது மட்டுமல்ல, ஒற்றுமையுடன் அனைவரும் பங்கேற்பதே, என்றார் அவர்.

பின்னாட்களில் நூறு மீட்டர் தொலைவை 57 வினாடிகளில் நீந்தும் அளவுக்கு பயிற்சி பெற்று 2004-ல் ஏதென்சில் நடைபெற இருந்த ஒலிம்பிக்கில் இடம் பெறத்துடித்தார் எரிக். ஆனால் அவருக்கு விசா கிடைப்பதற்கு ஏற்பட்ட குளறுபடிகளினால் பங்கேற்க முடியவில்லை. அவர் போட்டியில் மீண்டும் பங்கேற்பதைத் தவிர்க்கவே விசா குளறுபடிகள் உண்டாக்கப்பட்டது என்றும் சொல்லப்பட்டது

அவரது 34-வது வயதிலும் 55 வினாடிகளில் நீந்திக் காண்பித்தார் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத எரிக் முசாம்பனி. 'எனக்கு இன்றும் ஒரு கனவு உள்ளது. நான் என்னை மேம்படுத்திக் கொண்டு விட்டேன். என்னால் 100 மீட்டர் தொலைவை இன்னும் குறைவான வினாடிகளில் நீந்த முடியும் என்பதை இந்த உலகிற்கு காட்ட வேண்டும்' என்கிற எரிக் முசாம்பனி, இன்றும் காலை ஐந்து மணிக்கு எழுந்து மூன்று கிலோ மீட்டர்கள் ஓட்டம், உடற்பயிற்சிகள் முடித்து எட்டு மணியிலிருந்து ஐந்து மணி வரை வேலை செய்து விட்டு ஆறு முதல் பத்து மணி வரை மற்றவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார். ஆம். இப்போது ஈக்குவேட்டரியல் கினியாவில் நீச்சல் குளங்கள் இருக்கின்றன.

அன்று நூற்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பேட்டிகள், உலகின் பல்வேறு பத்திரிக்கைகளிலும் செய்தி என ஊடக வெளிச்சத்தில் மிதந்தார் எரிக் முசாம்பனி. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாவிட்டால் என்ன?., நாங்கள் தருகிறோம் என ஒரு இங்கிலாந்து பத்திரிக்கை அவருக்கு ஒரு பதக்கத்தை அளித்தது. ஜெர்மனியைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம், அவரை சிட்னி ஹார்பரை சுற்றி கப்பலில் அழைத்துச் சென்றது. சென்ற இடமெல்லாம் ரசிகர்கள் இவரது கையெழுத்துக்காக காத்திருந்தனர். அமெரிக்கத் தொலைக்காட்சியில் இவரைப் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. எரிக் ஒரு விலாங்கு மீன் என்று புகழப்பட்டார்.

’என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியவில்லை. ஏனென்றால், நான் போட்டியில் வெல்லவே இல்லை. ஆனால், இப்போது எல்லோருக்கும் எனது தாய்நாட்டைப் பற்றி தெரிய வந்திருக்கிறது. அதிலெனக்கு சந்தோஷமே’ என்றார் எரிக் முசாம்பனி.

2012 முதல் தேசிய நீச்சல் அணியின் தலைமைப் பயிற்சியாளராய் பொறுப்பேற்று நீச்சல் வீரர்களை உருவாக்கி வருகிறார். நீச்சல் குளங்களே இல்லாத நாடாய் இருந்த கினியாவில் நீச்சல் குளங்கள் உண்டாக்கி அவருக்கு கிடைக்காத பயிற்சி மற்றவர்களுக்கு எளிதில் கிடைக்க வழி செய்திருக்கிறார்.

துரதிருஷ்டவசமாக ரியோ ஒலிம்பிக்கிற்கு அவர்கள் எவரும் தகுதி பெறவில்லை. அதனாலென்ன.... அடுத்த ஒலிம்பிக் காத்திருக்கிறது.

அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு மாபெரும் தேசத்திற்கும் இப்படியான கனவுகள் இருக்கின்றன. ஏராளமான திறமைகள் நாடெங்கும் கண்டுகொள்ளப்படாமல் சிதறிக் கிடக்கின்றன. கனவுகள் நிறைவேறுமா?

- ப்ரேம் குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement