Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒலிம்பிக்கின் நம்பிக்கை மனிதர்கள்! - ஒலிம்பிக் டைரி குறிப்புகள்( அத்தியாயம் - 16)

அன்பு வாசகர்களே, 


முந்தைய அத்தியாயங்களைப் படிக்க : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15


 

மாற்றுத் திறனாளிகளுக்கான குளிர்கால பாராலிம்பிக்ஸ் போட்டிகள் 1976 முதல் நடத்தப்பட்டு வருகின்றன. பாராலிம்பிக்ஸ் போட்டிகள் இன்றி, ஒலிம்பிக்ஸிலேயே மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு சாதிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அப்படி உயரம் தொட்ட ஒரு சிலர் பற்றி இங்கே.

ஹங்கேரியைச் சேர்ந்த கரோலி தகாக்ஸுக்கு சிறுவயது முதலே ராணுவத்தில் சேர வேண்டும் என்பது விருப்பம். தவிர, துப்பாக்கி மீதும் பிரியம் உண்டு. வைத்த குறி தப்பாமல் சுடுவதில் வல்லவனாக இருக்க வேண்டும் அவரது ஆசை. தன் விருப்பப்படியே ராணுவத்தில் சேர்ந்தார். தவிர, தேசிய அளவில் திறமையான துப்பாக்கி சுடும் வீரராகவும் திகழ்ந்தார்.


1936 பெர்லின் ஒலிம்பிக்ஸ் அறிவிக்கப்பட்டது. தனக்கு ஹங்கேரியின் துப்பாக்கி சுடும் அணியில் இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தார் கரோலி. பட்டியலில் அவர் பெயர் இல்லை. காரணம் கேட்டபோது, ‘சாதாரண ராணுவ வீரரை எல்லாம் ஒலிம்பிக் அணிக்குத் தேர்ந்தெடுக்க மாட்டோம். அதற்கு உயர்நிலை அதிகாரியாக இருக்க வேண்டும்’ என்று பதில் சொன்னார்கள்.


கரோலி மனம் உடைந்து போனார். அடுத்த ஒலிம்பிக்கில் பார்த்துக் கொள்ளலாம் என்று தேற்றிக் கொண்டார். 1938ல் கையெறி குண்டு ஒன்றைக் கையாளும்போது கவனக்குறைவால் அது வெடித்தது. கரோலியின் வலது கை சிதைந்துபோனது. இனி, துப்பாக்கி சுடும் ஆசையெல்லாம் காலியா?

கரோலி முடங்கி உட்காரவில்லை. இடது கையால் சுட்டாலும் துப்பாக்கி வெடிக்காதா என்ன? கரோலி, தன் இடதுகையால் துப்பாக்கிப் பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தார். 1940, 1944 ஒலிம்பிக் போட்டிகளை இரண்டாம் உலகப் போர் விழுங்கியது. தன் கனவு நிச்சயம் ஒருநாள் நிறைவேறும் என்று பொறுமையாகக் காத்திருந்தார் கரோலி.

கரோலி


துப்பாக்கிச் சுடுதலில் தொடர்ந்து ஹங்கேரியின் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்று கொண்டிருந்த கரோலிக்கு, 1948 லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் கனவு பலித்தது. 25 மீ ராபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவு. அனைவரது கண்களும் அப்போதைய உலக சாம்பியனான அர்ஜெண்டினாவின் கார்லோஸ் டயாஸ் மீதே பதிந்திருந்தது. இடது கையால் தோட்டாக்களை இலக்குகளை நோக்கி இம்மி பிசமாகல் செலுத்திய கரோலி, 580 புள்ளிகள் பெற்றார். முதலிடம். தங்கப் பதக்கம். கூடவே உலக சாதனையும். கார்லோஸ் 571 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்றார்.


1952 ஹெல்சின்கி ஒலிம்பிக்கிலும் அதே 25 மீ ராபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் தங்கத்தைத் தக்க வைத்துக் கொண்டார் கரோலி. இம்முறை 579 புள்ளிகள். 578 புள்ளிகள் பெற்ற ஹங்கேரியின் சக வீரர் குன், வெள்ளி வென்றார். 1956 ஒலிம்பிக்கில் இதே பிரிவில் கலந்துகொண்ட கரோலிக்கு எட்டாமிடமே அமைந்தது. துப்பாக்கிச் சுடுதலில் தொடர்ச்சியாக இரு தங்கம் வாங்கிய முதல் வீரர் கரோலியே.

இம் டாங்


*
கரோலிக்கு துப்பாக்கி என்றால், தென் கொரியாவைச் சேர்ந்த இம் டாங் ஹ்யூன் என்ற வீரருக்கு வில்லும் அம்பும். இம் டாங் கிட்டத்தட்ட பார்வை இழந்தவர். கிட்டத்தட்ட என்றால், அவரது இடது கண் 20/200 என்ற அளவில் பார்வைக் குறைபாடு கொண்டது. வலது கண் 20/100 என்ற அளவில் பார்வைக் குறைபாடு கொண்டது. இம் டாங், வில்லில் அம்பைப் பொருத்திக் கொண்டு, இலக்கை நோக்கினார் என்றால் தூரத்தில் ஏதேதோ வண்ணங்கள் அலசலாக மட்டுமே தெரியும். ஆனால், டாங் வைக்கும் குறி தப்பாது. 90 சதவிகிதம் மைய வட்டத்தில் அல்லது அதற்கு அடுத்த வட்டத்தில் சென்று அம்பு தைக்கும். இடைவிடாத பயிற்சி, தனது ஞாபக சக்தி, அதன் மூலம் துல்லியமாகக் கணிக்கும் திறன் - இவையே இம் டாங் வெற்றிகரமாக அம்பைச் செலுத்துவதன் பின்னணிக் காரணங்கள்.

தன்னை பார்வைத்திறன் அற்றவர் என்று பதிவு செய்து வைத்துள்ள டாங், தனது குறைபாட்டை எல்லாம் பொருட்படுத்தாமல் ஒலிம்பிக் போட்டிகளிலும் கலந்து கொண்டார். போட்டியில் பார்வைக் குறைபாட்டை ஈடுகட்ட லென்ஸ் எதுவும் அணியவும் இல்லை. 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக், அவர் கலந்து கொண்ட முதல் போட்டி. ஆரம்ப சுற்றில், 70 மீ தொலைவில் உள்ள இலக்கை நோக்கி 72 அம்புகள் எய்ய வேண்டும். அதில் 687 புள்ளிகள் பெற்று அசத்தினார். அது புதிய உலக சாதனையும்கூட. அம்பெய்யும் இம் டாங், பார்வைக் குறைபாடு கொண்டவர் என்று தெரிய வந்தபோது ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். அந்த ஒலிம்பிக்கில் பார்வை உள்ள வீரர்களுக்குக் கடும் சவாலாக இம் டாங் விளங்கினார்.

தனி நபர் பிரிவில் இம் டாங்கால் பதக்கம் வெல்ல முடியாவிட்டாலும், குழுப் பிரிவில் அவர் இடம்பெற்ற தென் கொரிய அணி தங்கப் பதக்கம் வாங்கியது. 2008 பிஜீங் ஒலிம்பிக்கிலும் தங்கப் பதக்கத்தை வென்றது. 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம்.

லண்டன் ஒலிம்பிக்கில் 72 அம்பு ஆரம்பச் சுற்று பிரிவில் 699 புள்ளிகள் பெற்று தன் உலக சாதனையைத் தானே முறியடித்தார் இம் டாங். தவிர, பல்வேறு சர்வதேச வில் வித்தைப் போட்டிகளில் தனிநபர் பிரிவிலும், குழு பிரிவிலும் தங்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை வென்று அசத்தி வருகிறார் டாங்.
*
1952 ஹெல்சின்கி ஒலிம்பிக். குதிரை நடனம் என்ற டிரெஸ்ஸேஜ் போட்டி நடந்து கொண்டிருந்தது. அந்த ஆண்டுதான் பெண்களும் அந்தப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆண் - பெண் இருபாலருக்கும் சேர்த்து ஒரே போட்டி நடந்தது.

ஜூப்ளி என்ற அழகிய குதிரை வந்து நின்றது. நடக்கவே இயலாத ஒரு பெண்ணை அந்தக் குதிரையின் மேல் ஒருவர் ஏற்றி உட்கார வைத்தார். பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு. ஜூப்ளி, அந்தப் பெண்ணின் கட்டளைக்கேற்ப களத்தில் இறங்கி தனது களி நடனத்தை ஆரம்பித்தது.

லிஸ் ஹார்டெல்அந்தப் பெண்ணின் பெயர், லிஸ் ஹார்டெல். டென்மார்க்கைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே குதிரையேற்றப் பயிற்சி பெற்றவர். அவருக்கு 23 மூன்று வயது இருக்கும்போது போலியோ தாக்கியது (1944). அப்போது அவர் கர்ப்பிணியும்கூட. மூட்டுக்குக் கீழ் கால்கள் செயலிழந்தன. கைகளிலும் சிறிய பாதிப்பு உண்டானது. நல்லவேளையாக, லிஸ்ஸுக்கு ஆரோக்கியமான மகள் பிறந்தாள்.
அதற்குப் பிறகு லிஸ் முடங்கி உட்காரவில்லை. தனது குதிரையேற்றப் பயிற்சியைத் தொடர்ந்தார். 1952 ஒலிம்பிக்கில் பெண்களுக்கும் குதிரையேற்றத்தில் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று தெரிந்ததும் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் வந்து கலந்துகொண்டார்.

அந்த தனிநபர் டிரெஸ்ஸேஜ் பிரிவில் லிஸ்ஸும் ஜூப்ளியும் இணைந்து வெள்ளிப் பதக்கம் பெற்று அசத்தினர். 1956 ஒலிம்பிக்கிலும் இதே பிரிவில் வெள்ளியை வசப்படுத்தினார் லிஸ்.

நடாலியாலிஸ்ஸுக்கு வாழ்க்கையின் இடையில் போலியோவால் கால் போனது. ஆனால், போலந்தைச் சேர்ந்த நடாலியா பார்டிகாவுக்கு பிறக்கும்போதே வலது முன்னங்கை இல்லை. ஆகவே நம்பிக்கை கூடுதலாகவே இருந்தது. ஏழு வயதிலேயே ஒற்றைக் கையால் டேபிள் டென்னிஸ் ஆட ஆரம்பித்தார் நடாலியா. சிட்னியில் நடந்த 2000 பாராலிம்பிக்ஸில் அடியெடுத்து வைத்தார். அப்போது நடாலியாவுக்கு வயது பதினொன்று. பாராலிம்பிக்ஸில் பங்குபெற்ற மிகக்குறைந்த வயது கொண்ட நபர் நடாலியாதான்.

நடாலியா வீடியோ
 

 


இதுவரை நடாலியா பாராலிம்பிக்ஸில் 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வென்றுள்ளார். தவிர, சாதாரணமானவர்கள் கலந்துகொள்ளும் ஒலிம்பிக் போட்டிகளிலும் மாற்றுத் திறனாளியான நடாலியா தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இதுவரை ஒலிம்பிக்ஸில் நடாலியாவுக்கு பதக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

அதனால் என்ன. நடாலியாவின் உயரிய தன்னம்பிக்கைக்கு முன் எந்தப் பதக்கமும் வெற்று உலோகமே!

(டைரி புரளும்.)

அடுத்த அத்தியாயம் : ஃபாக்ஸிடம் ஏமாந்த நரி!

- முகில்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement