வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (18/08/2016)

கடைசி தொடர்பு:12:53 (18/08/2016)

'பதக்கம் வெல்ல வேண்டுமென சொல்லிக் கொண்டே இருந்தேன்!' - சாக்‌ஷி மலிக்

ன்றைய நாளை, இந்தியாவிற்கு அமர்க்களமாக துவங்கி வைத்து இருக்கிறார் சாக்‌ஷி மலிக். ஒலிம்பிக் போட்டிகளில், ஒரு பதக்கமாவது வெல்வோமா என பதக்கப் பட்டியலை பார்த்து ஏங்கிக் கொண்டு இருந்த இந்தியர்களுக்கு, முதல் பதக்கத்தை பரிசளித்து இருக்கிறார் சாக்‌ஷி மலிக். ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மலிக் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்திய வீராங்கனை ஒருவர், மல்யுக்தத்தில் ஒலிம்பிக் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை. 58 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் கைர்ஜிஸ்தானின் ஐசுலு டைனிபெகோவாவை 8-5 என்ற கணக்கில் வீழ்த்தினார் சாக்‌ஷி மாலிக். இதன் மூலம், இந்தியாவை ரியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இடம் பெறவும் செய்துள்ளார் சாக்‌ஷி மலிக்.

தனது வெற்றி குறித்து சாக்‌ஷி மலிக் அளித்துள்ள பேட்டியில், ''இது என் 12 ஆண்டுகால அர்ப்பணிப்புக்காக கிடைத்த வெற்றி. என்னுடைய சீனியர் கீதா, 2012 லண்டன் ஒலிம்பிக்ஸிற்கு தகுதி பெற்றார். இந்தியா சார்பாக மல்யுக்தத்தில் பதக்கம் வெல்லும் முதல் பெண்ணாக நான் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால், எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என உறுதியாக நம்பினேன்.

சில போட்டிகள் 2 நொடிகளில் எல்லாம் வெற்றி மாறி இருக்கிறது. என்னுடைய போட்டி 10 நொடிகளில் மாறியது. (முதலில் 0-5 என கணக்கில், சாக்‌ஷி மலிக் பின் தங்கி இருந்தார். அதன் பின்னர் இரண்டாவது ஆட்டத்தில் 8-5 என்று அதிரடியாக அசத்தினார்) ஒரு பதக்கம் வெல்ல வேண்டும் என எனக்குள் சொல்லிக் கொண்டே இருந்தேன். இந்த பதக்கத்தை எனது பெற்றோர், கோச் என அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன். இன்னும் இந்தியா பல பதக்கங்கள் வெல்ல பிரார்த்தனை செய்வோம்" என்று கூறி உள்ளார்.

இந்தியாவிற்கு பதக்கம் பெற்று தந்த சாக்‌ஷி மாலிக்கிற்கு, சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ''சாக்‌ஷி மலிக் சாதனை படைத்து இருக்கிறார். ரக் ஷா பந்தன் நாளன்று, இந்தியாவின் மகள் வெண்கலம் வென்று, நம் அனைவரையும் பெருமைப்படுத்தி இருக்கிறார்" என்று வாழ்த்தி இருக்கிறார்.

இந்திய முன்னாள் வீரர் சேவக், " ஒரு பெண் குழந்தையை நீங்கள் கொல்லாமல் இருந்தால், என்னவெல்லாம் சாதிப்பார் என்பதற்கு சாக்‌ஷி ஒரு உதாரணம். நாட்கள் கடினமாகும் பொழுது, பெண்கள் முன்னேறி, நம் மானத்தை காப்பாற்றி இருக்கிறார்கள்"

நீங்க எப்படி பீல் பண்றீங்க