Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நேற்று சாக்‌ஷி...இன்று சிந்து... இரண்டு மெடல்கள் போதுமா இந்தியா?!

ரியோ ஒலிம்பிக் களத்தில் கிட்டத்தட்ட 11 நாட்களுக்குப் பின் இந்தியா சார்பில் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார், மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மலிக். 

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் எல்லாவற்றிலும் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்த இந்தியா, பதக்கப் பட்டியலில் 70வது இடத்தில் உள்ளது. 

சாக்‌ஷியைத் தொடர்ந்து பேட்மின்ட்டன் களத்தில், இந்தியாவைச் சேர்ந்த பி.வி.சிந்து நம்பிக்கை நட்சத்திரமாக பதக்கத்தை நோக்கி முன்னேறியிருக்கிறார். இரண்டு பெண்களும் ஒலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்து இந்தியாவையே ஆர்ப்பரிக்கச் செய்துள்ளார்கள். 

பி.வி.சிந்து ஒட்டுமொத்த இந்தியர்களின் நம்பிக்கையையும் சுமந்து கொண்டிருக்கிறார் என்பதைவிட, அவர் மீது நம்முடைய பதக்க எதிர்பார்ப்பைத் திணித்துத்தான் அவரை இறுதிச்சுற்றுக்கு அனுப்பியுள்ளோம் என்பதே உண்மை.

ஆனால், அமெரிக்காவோ அசால்ட்டாக 93 பதக்கங்களைக் குவித்துள்ளது. இத்தனைக்கும் முதல்முறையாக பதக்கம் ஜெயித்த குட்டித் தீவு நாடான கொசாவாவைவிட இந்தியா வளமையிலும், பொருளாதார ரீதியிலும் குறைவான நாடு கிடையாது. 

இரண்டு பெண்கள் ஒலிம்பிக்கில் நம்முடைய மானத்தைக் காப்பாற்றிய இதே நொடியில்தான், அத்தனை இந்தியர்கள் மனதிலும் இரு கேள்விகள் எழுகின்றன. இரண்டு பதக்கங்களைப் பெறவே நம்முடைய விளையாட்டு வீரர்கள் அத்தனை உழைக்க வேண்டியுள்ளது.

அப்படி என்னதான் குறைபாடுகள் விளையாட்டுத் துறை சார்ந்து நம்மிடமிருக்கின்றன? அமெரிக்கா எப்படி அத்தனை போட்டிகளிலும் பதக்கங்களைக் குவிக்கிறது?

அமெரிக்காவின் பதக்கப் பட்டியல் எகிறவும், இந்தியா இரண்டே பதக்கங்களுடன் தத்தளிக்கவும் காரணங்கள் இவைதான்:

அமெரிக்கா: அமெரிக்காவில் விளையாட்டுகளுக்கு என்று தனியிடம் எப்போதுமே உண்டு. சமூகத்தின் எந்தப் படிநிலையில் இருந்தாலும், அவர்களுடைய திறமைக்கு மட்டுமே அங்கு மரியாதை.

இந்தியா: இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒருவர் விளையாட்டுத்துறைக்குள் நுழையவே பல கட்டச் சோதனைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. ஆர்வமும், திறமையும் இருந்தும் இங்கு நிலவும் அதிகாரவர்க்க அரசியலால் முடக்கப்பட்ட வீரர்கள் ஏராளமான பேர். 

அமெரிக்கா: எல்லாருக்கும் தெரிந்த நீச்சல், பளு தூக்குதல், தடகளம் உள்ளிட்ட விளையாட்டுக்களைத் தாண்டி ஐஸ் பால், பேஸ் பால், ரக்பி என்று அதிக பரிச்சயமில்லாத விளையாட்டுக்களைக்கூட ஊக்குவிக்கிறது அமெரிக்க விளையாட்டுத்துறை.

இந்தியா: இந்தியாவில் அனைவரும் அறிந்த தடகளம், பளுதூக்குதல் போன்ற விளையாட்டுக்களுக்கே விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதிலும், ஒரு வீரர் நன்றாகத் தேர்ச்சி பெற்று ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக் என்று சென்றால்கூட அவருக்கு அளிக்கப்படும் உடல் ரீதியான துன்பங்களைவிட, மன ரீதியான அழுத்தங்களே அதிகம். 

அமெரிக்கா: உயர்நிலைப்பள்ளியில் ஒரு மாணவர் நுழையும்போதே அவர் கண்டிப்பாக ஏதேனும் ஒரு விளையாட்டுப் பிரிவில் பயிற்சி பெற்றே ஆகவேண்டும். அமெரிக்காவில் குழு விளையாட்டுகளில் மட்டும் பள்ளிகளில் ஜொலிக்கும் வீரர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் மேல். தனிப்பிரிவுகளில் நீச்சல் வீரர்களாக மட்டுமே 3 லட்சம் பேர் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்தியா: இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், ஹாக்கிக்கோ, தடகளத்துக்கோ அளிக்கப்படுவதில்லை. எத்தனையோ வீரர்கள் நம்மிடையே இருந்தும் முறையான பயிற்சியோ, சரியான உணவுகளோ வழங்கப்பட இங்கு வழியில்லை. நம் தமிழகத்திலேயே இன்று வரை 500&க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சல்மான்கானோ, ஷாருக்கானோ சினிமாவில் வெற்றி பெறுவதை ரசிக்கும் நாம், ரியல் ஹீரோவாக விளையாட்டுத் துறைகளில் ஜொலிக்கத் துடிக்கும் இளம் வீரர்களைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.

அமெரிக்கா: அமெரிக்காவில் சிறப்பான விளையாட்டு வீரர்களை எந்த ஒரு குடிமகனிடம் கேட்டாலும் சரியாகச் சொல்வார்கள். அவர்களுடைய பகுதியில் யார் யார் எந்தெந்த விளையாட்டுகளில் சிறந்தவர்கள் என்பதையும் தெரிந்து வைத்திருக்கின்றனர்.

இந்தியா: இதோ, களத்தில் தங்கத்துக்காகப் போராட உள்ள பி.வி.சிந்துவையும், மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற சாக்‌ஷியையும் அவர்களுடைய வெற்றிக்குப் பிறகே நமக்குத் தெரியும். தோனி பெயரையும், சானியா பேரையும் சரியாகச் சொல்லத் தெரிந்த பலருக்கு, இங்கே ஒலிம்பிக் வேக நடைப்போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர் யார் என்பது தெரிந்திருக்கவில்லை.

இவையெல்லாம் வெறும் சாம்பிள்கள்தான். இந்தியாவில் மட்டும் 100க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்கங்கள் இருக்கின்றன. ஆனால், பள்ளி வாழ்க்கை முதலே விளையாட்டுகளைப் போதிக்கும் தனிப்பிரிவுகள் மிகவும் குறைவு. விளையாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதி சரியாக உபயோகிக்கப்படுகிறதா என்பதே இன்றுவரை நமக்குத் தெரியாது. 1920களில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்த இந்தியா, இதுவரையில் 24 மெடல்களை மட்டுமே கவர்ந்து வந்துள்ளது.

அமெரிக்கா பதக்க மழையில் குளித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்தான், ஹாக்கியில் வெளியேறி விட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தில் இரவு உணவுக்குப் பதிலாக வெறும் வேர்க்கடலையை உணவாகப் பரிமாறியுள்ளது ரியோவில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம். இன்னொரு பக்கம், இந்திய விளையாட்டுத் துறை அமைச்சரோ, தன்னுடன் வந்தவர்களை உள்ளே விடவில்லை என்று ஒலிம்பிக் கமிட்டி அதிகாரிகளுடன் சண்டை போட்டுள்ளார்.

ஆனாலும், இதையெல்லாம் தாண்டி இந்திய அரசு விளையாட்டுத் துறையை முறையாகக் கையிலெடுத்துக் கொண்டு செயல்பட ஆரம்பிக்கும்போது, அடுத்த முறை #go4goldsindhu என்று நாம் ஒற்றைப் பதக்கத்திற்காக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விளையாடத் தேவையில்லை. 

இனி பதக்கம் வெல்ல இந்தியா கடைப்பிடிக்க வேண்டியவை:

1. மாநிலவாரியாக திறனாய்வுப் போட்டிகளை நடத்தி இளைஞர்களில் இருந்தும், சிறுவர்களில் இருந்தும் திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.

2. தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு முறையான வசதிகள், பயிற்சி முறைகள், திறமையான பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்.

3. பெரும்பாலான விளையாட்டுத் திறமையாளர்கள் ஏழ்மையான வாழ்க்கை முறையைச் சேர்ந்தவர்களாகத்தான் உள்ளனர். அவர்களுக்கு சத்தான உணவுகளும், போக்குவரத்து, பயிற்சிக்கான உதவிகளை முழு மூச்சாக அரசு செய்ய முன்வர வேண்டும்.

4. ஆண், பெண், அதிகார வர்க்கத்தினர், ஏழை&திறமைசாலி என்கிற பாரபட்சமெல்லாம் பார்க்காமல் வீரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை அந்தந்த விளையாட்டுகள் சார்ந்து செம்மைப்படுத்த வேண்டும். 

இதையெல்லாம் மாத்திக்கணும் இந்தியா:

# பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா, அதன் வீரர்களுக்கு ஒரு நாளைக்கு இந்திய மதிப்பில் 22 ரூபாய் செலவு செய்கிறது. ஆனால், இந்தியாவோ வெறும் 3 பைசாக்களையே விளையாட்டு வீரர்களின் நலனுக்காக ஒரு நாளைக்குச் செலவு செய்கிறதாம். 

# தனியாக தங்கம் ஜெயித்த வீரர்களில் இந்தியாவில் இடம் பிடித்திருப்பவர் ஒரே ஒருவர்தான். அவர் 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில், துப்பாக்கி சுடும் போட்டியில் தங்க மெடல் வென்ற அபிநவ் பிந்த்ரா. 

# வறுமை மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளால் இந்திய விளையாட்டு வீரர்கள் பலர் தங்கள் வாழ்வில் விளையாட்டுக்களுக்கு முதலிடம் கொடுப்பதில்லை. குடும்பம் சார்ந்த பிரச்னைகளுக்காக அவர்கள் வேறு வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளது. சரியான நிதியுதவிகள், வாய்ப்புகள் கிடைத்தால் விளையாட்டை மட்டுமே முதற்குறிக்கோளாகக் கொண்டு விளையாட, வீரர்கள் முன்வருவார்கள்.

# 30 லட்சம் மக்களுக்கு அமெரிக்காவிடம் ஒரு பதக்கம் இருக்கிறதாம். லண்டனிடமோ 10 லட்சம் பேருக்கு ஒரு பதக்கம் இருக்கிறது. ஆனால், இந்தியாவிலோ 2 கோடி மக்கள் தொகைக்கே ஒரு பதக்கம்தான். இதற்கான காரணம் சரியான திறமைசாலிகளை இனம் கண்டு கொள்ளாதது, தொழில்நுட்ப ரீதியிலான உதவிகள் கிடைக்காதது, பொருளுதவி, பயிற்சியின்மை ஆகியவைதான்.

முடிந்தவரையில் திறமையாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு முறையான பயிற்சியையும், நிதியுதவியையும் அரசு அளிக்க ஆரம்பித்தாலே இந்தியா கண்டிப்பாக ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்கும் நாள் தூரமில்லை.... இனியேனும் விழித்துக் கொள்வதே சிறந்தது!

                                                                                                                                                                                              - பா.விஜயலட்சுமி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement