Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பதக்கம் அல்ல... அரசியல் ஆயுதம்! - ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள் - 19

அன்பு வாசகர்களே, 


முந்தைய அத்தியாயங்களைப் படிக்க : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15 16 17   18

 

 


 

த்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரத்தில் அமைந்திருக்கும் ராஜ குடும்பத்தினரது மாளிகையில்,  மெய்க்காப்பாளராக வேலைக்குச் சேர்ந்திருந்தார் அடிபே பிகிலா. தனது குக்கிராமத்திலிருந்து தினமும் 20 கி.மீ நடந்தும் ஓடியும்தான் அடிஸ் அபாபாவைச் சென்றடைந்தார் அடிபே. பிற போக்குவரத்து வசதிகள் எதுவும் கிடையாது.

அப்போது எத்தியோப்பிய அரசாங்கம்  நல்லதொரு திட்டத்தைக் கொண்டு வந்தது. 'இந்த மண்ணின் மைந்தர்கள் ஓட்டத்தில் திறமையுள்ளவர்கள். அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து மேம்படுத்தினால், சர்வதேச தடகளப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கலாம்' என்று சொல்லி, அதற்காக, ஸ்வீடனைச் சேர்ந்த ஒன்னி நிஸ்கானான் என்ற பயிற்சியாளரை நியமித்தது. அவர் பயிற்சியளிப்பதற்காகத் தேடித் தேர்ந்தெடுத்த நபர்களில் அடிபேவும் ஒருவர்.

1960 ரோம் ஒலிம்பிக் போட்டிகளுக்காக, எத்தியோப்பியாவின் தடகள வீரர்கள் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அதில் அடிபே இல்லை. ரோமுக்கு விமானம் கிளம்புவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, அடிபேவுக்கு வாய்ப்பு அமைந்தது. ‘மாரத்தான் வீரர் வாமி பிராட்டுக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்குப் பதிலாக நீ செல்!’ என்றனர்.

ரோம் வந்திறங்கினார் அடிபே. அடிடாஸ் நிறுவனம் எத்தியோப்பிய வீரர்களுக்கு ஷூக்கள் ஸ்பான்ஸர் செய்தது. அதில் எந்த ஷூவும் அடிபேவுக்குப் பொருந்தவில்லை. ஷூவின்றி எப்படி அவ்வளவு தூரம் ஓட முடியும்?

‘அதெல்லாம் முடியும்’ என்று வெறும் கால்களுடன் மாரத்தான் பந்தயத்தில் ஓட ஆரம்பித்தார் அடிபே. போட்டி ஆரம்பமாவதற்கு முன் பயிற்சியாளர் நிஸ்கானான் ஒரு விஷயத்தை மட்டும் சொல்லியிருந்தார். ' உனக்கு போட்டியாக இருக்கப் போகிறவர் மொராக்கோவின் ராடி பென். அவர் 26ம் எண் கொண்ட பனியன் அணிந்திருப்பார். அவரை முந்துவதில் கவனமாக இரு."

அடிபே தடதட வேகத்தில் அசராமல் முன்னேறிக் கொண்டிருந்தார். தான் முந்திச் செல்லும் ஒவ்வொரு வீரரது எண்ணையும் கவனித்தபடியே ஓடினார். 26 கண்ணில் படவில்லை. 75 பேர் கலந்து கொண்டிருந்த அந்தப் போட்டியில் பெரும்பான்மையான வீரர்களை முந்தி ஓடிக் கொண்டிருந்தார் அடிபே. இறுதி ஒரு கிலோ மீட்டர் இருக்கும். அடிபேவுக்கு இணையாக 185 எண் கொண்ட உடையணிந்த ஒரு வீரர் வந்து கொண்டிருந்தார். ‘அந்த 26ஐக் காணோமே?’ அடிபேவுக்குள் குழப்பம்.

இறுதி 500 மீட்டரில் மூச்சைப் பிடித்து இழுத்து, தன் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி ஓடி, எல்லைக் கோட்டை முதல் ஆளாகத் தொட்டார் அடிபே. மாரத்தானில் முதல் வீரராக ஓடி வந்த ஒருவர் காலில் ஷூ அணியவில்லை என்பது அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது. 185ம் எண்தான் ராடி பென். அவருக்கு இரண்டாமிடம்.

அடிபே, தங்கம் வென்றது மட்டுமன்றி, 2:15:16.2 நேரத்தில் ஓடி புதிய ஒலிம்பிக் சாதனையும் படைத்திருந்தார். 1964 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக, அடிபே வயிற்றுவலியால் துடித்தார். அவருக்கு குடல்வால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. கால அவகாசம் குறைவாக இருந்ததால், மருத்துவமனை வளாகத்திலேயே அடுத்த ஒலிம்பிக் மாரத்தானுக்கான பயிற்சிகளை மேற்கொண்டார். டோக்கியோ மாரத்தானிலும் அடிபே முதலாவதாக வந்தார். 2:12:11.2 என புதிய ஒலிம்பிக் சாதனை. தொடர்ந்து இருமுறை மாரத்தானில் தங்கம் வென்றவர் என்ற உலக சாதனையையும் அடிபே நிகழ்த்தியிருந்தார்.

அடிபே பிகிலா

ரோம் ஒலிம்பிக்கில் வென்றதும் அடிபேவிடம் நிருபர்கள் கேள்வி கேட்டார்கள்.  ‘நீங்கள் ஏன் வெறும் காலுடன் ஓடினீர்கள்?’

அடிபே உணர்வுபூர்வமாக அளித்த பதில்.

" என் தேசத்தின் பெயர் எத்தியோப்பியா. அந்த தேசத்தை உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்பினேன். 'அர்ப்பணிப்பும், வெல்லும் திறமையும் கொண்ட நாயகர்கள் எங்கள் மண்ணில் இருக்கிறார்கள்' என்று உலகுக்கு அறிவிக்க நினைத்தேன்."

நிஜம்தான். அடிபேவால்தான் எத்தியோப்பியா,  ஒலிம்பிக்கில் முதன் முதலாக அடையாளம் பெற்றது. அதற்குப் பிறகே ஆப்பிரிக்க தேசங்களிலிருந்து பல மாரத்தான் வீரர்கள் உருவாக ஆரம்பித்தனர்.

சில வீரர்களுக்கு ஒலிம்பிக் என்பது வெறும் விளையாட்டுக் களமல்ல. அது அரசியல் பேசும் களம். ‘ஒடுக்கப்படும் எங்களது குரல் சர்வதேச அளவில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே நான் இங்கே நிற்கிறேன்’ என்று பதக்க மேடையில் உலகின் கவனம் ஈர்ப்பார்கள். அப்படி இரண்டு சம்பவங்கள் 1968 மெக்ஸிகோ ஒலிம்பிக்கில் நிகழ்ந்தன.

வெரா காஸ்லாவ்ஸ்கா

வெரா காஸ்லாவ்ஸ்கா - செகோஸ்லோவாகியாவைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. ஜிம்னாஸ்டிக்கில் பல பிரிவுகளில் ஏகப்பட்ட சர்வதேச வெற்றிகளைப் பெற்ற சாதனை நட்சத்திரம். அதில் ஒலிம்பிக்கில் 7 தங்கம், 4 வெள்ளி, உலக சாம்பியன்ஷிப்பில் 4 தங்கம், 5 வெள்ளி, 1 வெண்கலம், ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் 11 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

ஜிம்னாஸ்டிக், நவீன ஒலிம்பிக் ஆரம்பிக்கப்பட்ட 1896 முதலே இடம்பெற்று வருகிறது. அதில் சோவியத் யூனியனின் ஆதிக்கமே அதிகம். வேறு யாரும் ஜிம்னாஸ்டிக்கில் தங்கத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்னுமளவுக்கு, சோவியத் வீராங்கனைகள் சர்வாதிகாரம் செலுத்தி வந்தனர். 1960, 1964 ஒலிம்பிக்குகளில், சோவியத் பிம்பங்களை எல்லாம் உடைத்து மேலே வந்து, தன் மீது ஆச்சர்ய ஒளி பாயச் செய்தவர் வெரா.

களத்தில் வெராவுக்கும் சோவியத் வீராங்கனைகளுக்குமே போட்டி எப்போதும் இருக்கும். களத்துக்கு வெளியேயும் வெரா, சோவியத்துடன் மோத வேண்டியதிருந்தது. 1968ல் சோவியத் யூனியன் படைகள் செகோஸ்லோவாகியாவுக்குள் ஊடுருவியிருந்தன. அதற்குக் கடும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. செகோஸ்லோவாகியாவின் நட்சத்திர வீராங்கனையான வெராவும் தன் எதிர்ப்புகளைக் கடுமையாகப் பதிவு செய்தார். சில போராட்டங்களில் கலந்து கொண்டார்.

1968 மெக்ஸிகோ ஒலிம்பிக், அக்டோபரில் ஆரம்பமாக இருந்தது. தன் தேசத்தில் அரசியல் சூழல் சரியில்லாத சூழலில், நாட்டுக்குள் இருந்தால் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள இயலாமல் முடக்கப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையால், ஒரு மலைக்கிராமத்தில் பதுங்கி வாழ ஆரம்பித்தார் வெரா. அங்கே கிடைக்கும் மரக்கட்டைகளையும், உருளைக்கிழங்கு மூட்டைகளையும், இன்ன பிற சாதாரண பொருட்களையும் கொண்டு, தன் ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளைத் தீவிரமாகத் தொடர்ந்தார்.

வெராவுக்கு, இறுதி நிமிடத்தில்தான் மெக்ஸிகோவுக்குச் செல்லும் அனுமதி கிடைத்தது. தன் தேசத்தை சோவியத் ஆக்கிரமித்திருக்க, அந்த ஜிம்னாஸ்டிக் களத்தை சோவியத் வீராங்கனைகளைப் புறந்தள்ளிவிட்டு, வெரா ஆக்கிரமித்தார். (வீடியோ : https://www.youtube.com/watch?v=EC6vBFBilaA ) மூன்று தனிநபர் பிரிவுகளில் வெரா தங்கம் வென்றார். பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளி. குழுப் பிரிவுகளில் இரண்டு வெள்ளி. அதில் ஃப்ளோர் என்ற பிரிவில் மட்டும் வெராவும், சோவியத்தின் லாரிஸாவும் ஒரே புள்ளிகள் பெற, இருவருக்கும் தங்கம் என அறிவிக்கப்பட்டது. பேலன்ஸ் பீம் பிரிவிலும் அசத்திய வெராவுக்கே தங்கம் வந்திருக்க வேண்டும். ஆனால், சோவியத்தின் நடாலியா, தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார். 'சோவியத், தன் அதிகாரத்தால் போட்டி முடிவுகளில் தலையிட்டு முறைகேடு செய்துவிட்டது' என்று வெராவுக்குக் கோபம் பொங்கியது. கூடவே சோவியத் மீதான அரசியல் கோபங்களும் சேர்ந்து கொண்டன.

வெரா, ப்ளோர் பிரிவில் தங்கப் பதக்கம் வாங்க, பதக்க மேடையில் ஏறினார். உடன் சோவியத் வீராங்கனை லாரிஸாவும் ஏறினார். இருவருக்கும் தங்கம் அணிவிக்கப்பட்டது. யாருக்கும் வெள்ளி கிடையாது. வெண்கலம் சோவியத்தின் நடாலியாவுக்கு. பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, சோவியத்தின் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது,  வெரா தலையைக் குனிந்து, முகத்தை தனது வலப்புறமாகத் திருப்பிக் கொண்டார். (வீடியோ: https://www.youtube.com/watch?v=dykBBhaoczg) அதாவது சோவியத் மீதான தன் எதிர்ப்பை, கண்டனத்தை, அந்த மேடையில் வெரா அமைதியாக, ஆழமாகப் பதிவு செய்தார். இது உலக அரங்கில் பெரும் சலசலப்புகளை உண்டு செய்தது.

செகோஸ்லோவாகிய மக்கள் தங்கள் நாயகியை, அவளது தைரியத்தைக் கொண்டாடினர். ஆனால், அரசியல்வாதிகள் வெராவின் செயலை விரும்பவில்லை. அவரை ஜிம்னாஸ்டிக்கிலிருந்து வலுக்கட்டாயமாக ஓய்வுபெறச் செய்தனர். சொந்த நாட்டில் ஜிம்னாஸ்டிக் கோச்சாகக்கூட அவர் பணிபுரிய அனுமதிக்கப்படவில்லை. இப்படி வெரா சந்தித்த நெருக்கடிகள் ஏராளம்.

அதே 1968 மெக்ஸிகோ ஒலிம்பிக்கில், இன்னொரு பதக்க மேடையும் அரசியல் அனலைக் கிளப்பியது. அக்டோபர் 16 அன்று நடந்த 200 மீ ஓட்ட இறுதிப் போட்டியில், கருப்பின அமெரிக்கரான டாமி ஸ்மித், 19.83 நேரத்தில் கடந்து, உலக சாதனையுடன் தங்கம் வென்றார். இரண்டாமிடம் ஆஸ்திரேலியரான பீட்டர் நார்மனுக்கு. மூன்றாமிடம் இன்னொரு கருப்பின அமெரிக்கரான ஜான் கார்லோஸுக்கு. பதக்க மேடையில் மூவரும் ஏறியபோது பரபரப்பு கிளம்பியது.

ஸ்மித்தும் கார்லோஸும் ஷூக்கள் அணியவில்லை. காலில் கறுப்பு காலுறைகள் மட்டும் அணிந்திருந்தனர். அது அமெரிக்காவில் கருப்பினத்தவர் வறுமையில் வாடுகின்றனர் என்பதன் குறியீடு. ஸ்மித் கழுத்தில் கருப்புப் பட்டை ஒன்றை சுற்றியிருந்தார். அது கருப்பர்களின் பெருமையைச் சொல்லும் அடையாளம்.  இருவரும் தங்கள் கை ஒன்றில் கருப்பு உறை அணிந்திருந்தனர். பதக்கம் அணிவிக்கப்பட்டு அமெரிக்க தேசிய கீதம் ஒலித்தபோது, இருவரும் தலை கவிழ்ந்து நின்றனர். ஸ்மித் கருப்பு உறை அணிந்து வலது கையை உயர்த்திப் பிடித்தபடியும், கார்லோஸ் கருப்பு உறையுடன் தனது இடது கையை உயர்த்திப் பிடித்தபடியும் பதக்க மேடையில் நின்றனர். ஆஸ்திரேலிய வீரர் நார்மன் உட்பட மூவருமே Olympic Project for Human Rights (கருப்பின அமெரிக்கரும் சமூக ஆர்வலருமான ஹாரி எட்வர்ஸால் ஆரம்பிக்கப்பட்ட, அமெரிக்காவில் நடைபெறும் இனவெறிக்கு எதிராகப் போராடும் ஓர் அமைப்பு) பேட்ஜ் அணிந்திருந்தனர்.

டாமி ஸ்மித்

இந்தச் செயலினால், ஸ்மித்தும் கார்லோஸும் அமெரிக்காவில் கருப்பர்களுக்கு எதிராக நடைபெறும் இனவெறிச் செயல்களை, சர்வதேச அளவில் தோலுரித்துக் காட்டினர். பதக்க மேடையிலிருந்து அவர்கள் இறங்கிச் சென்றபோது, வெள்ளை இன ரசிகர்கள் அந்தக் கருப்பினத்தவர்களை நோக்கி ஆவேசக் குரல் எழுப்பினர்.

பின் பேட்டியளித்த ஸ்மித், தன் உணர்வுகளைக் கொட்டினார். " நான் வென்றால் அமெரிக்கன். அப்போது கருப்பினத்தவன் அல்ல. நான் தோற்றாலோ, வேறு ஏதாவது தவறு செய்தாலோ, நான் ஒரு நீக்ரோ. நாங்கள் கருப்பினத்தவர்களே. அப்படி இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்."

1968 Olympics Black Power Salute என்ற இந்த சரித்திர நிகழ்வு, மறுநாள் உலகின் தலைப்புச் செய்தியாக விடிந்தது. இந்நிகழ்வின் பின்விளைவாக ஸ்மித்தும் கார்லோஸும் உடனடியாக அமெரிக்க அணியிலிருந்து நீக்கப்பட்டனர். ஒலிம்பிக் கிராமத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டனர். நாட்டுக்குத் திரும்பிய அவர்கள் இருவரும், ஏராளமான நெருக்கடிகளைச் சந்தித்தனர். அவர்களது குடும்பமே கொலை மிரட்டலுக்கு உள்ளானது.

கருப்பினத்தவர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பேட்ஜ் அணிந்து, பதக்க மேடையேறிய ஆஸ்திரேலிய நார்மனும் கடும் எச்சரிக்கைக்கு ஆளானார். அடுத்த ஒலிம்பிக்கில் பங்குபெற அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

2006 ல் நார்மன் இறந்துபோனார். ஸ்மித்தும் கார்லோஸும் நார்மனின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டனர். அன்று தங்களுக்கு ஆதரவாக களத்தில் வந்து நின்ற அந்த வெள்ளை இன நண்பனுக்கு நன்றி சொல்லும் விதமாக, அவன் உறங்கும் அந்தச் சவப்பெட்டியை ஸ்மித்தும் கார்லோஸூம் சுமந்து சென்றனர்.

(டைரி புரளும்...)

அடுத்த அத்தியாயம்: அணைந்த ஒலிம்பிக் தீபம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement