தங்க மகன் உசேன் போல்ட்! #HBDUsainBolt | Happy Birthday to Usain Bolt

வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (20/08/2016)

கடைசி தொடர்பு:13:59 (21/08/2016)

தங்க மகன் உசேன் போல்ட்! #HBDUsainBolt

ஸ்பிரிண்டர்ஸ் நீண்ட காலம் களத்தில் நிற்க முடியாது. வேகமாக வருவார்கள். வேகமாகவே போய் விடுவார்கள். அமெரிக்காவின் கார்ல் லூயீஸ் இதற்கு விதி விலக்காக இருந்தவர். 100 ,200 மீட்டர் ஓட்டம்,4x100 மீட்டர் தொடர் ஓட்டம், லாங் ஜம்ப் என அசத்தினார். 1984ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் முதன் முறையாக களம் கண்ட லூயீசுக்கு அமெரிக்கத் தடகள ஜாம்பவான் ஜெஸ்சி ஓவன்தான் ரோல் மாடல். 1936ம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் ஜெஸ்சி ஓவன்ஸ் 100,200 மீட்டம் ஓட்டப்பந்தயத்திலும் , 4x100 ரிலே, மற்றும் லாங்க்ஜம்ப் என அனைத்திலும் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார். தனது ரோல் மாடலின் சாதனையை முறியடிக்க வேண்டுமென்பதே லூயீசுக்கு சிறுவயது முதல் ஆசை.. களம் புகுந்த லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிலேயே அதனை செய்தும் காட்டுகிறான் இளவயது கார்லலூயீஸ்.

அந்த ஒலிம்பிக்கில் 100 ,200 மீட்டர் ஓட்டப்பந்தயம்  4x100 தொடர் ஓட்டம் மற்றும் லாங் ஜம்ப் என அனைத்திலும் தங்கம் வென்று தனது ரோல் மாடலின் சாதனையை எட்டினார் கார்ல்லூயீஸ். அது முதல், 1996ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் வரை வரை சுமார் 12 ஆண்டுகாலம் ஒலிம்பிக்கில் அசைக்க முடியாத ஸ்பிரின்டராக  வலம் வந்தார் அவர். லூயீசுக்கு பிறகு, வந்தவர்களில்  பலர் வந்தார்கள்... சென்றார்கள் ரகம்தான்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு அமெரிக்கரான மவுரீஸ் க்ரீன் 100 மீட்டர் ஓட்டத்தை 9.79 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தவர். 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் 100 மற்றும் 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் இதே பிரிவுகளில் வெள்ளி வென்றார். அத்துடன் காணாமல் போனார். பிரிட்டனைச் சேர்ந்த லின்ஃபோர்ட் கிறிஸ்ட்டி சியோல் ஒலிம்பிக்கில் 100 மீட்டரில் வெள்ளி அடுத்து நடந்த பார்சிலோனா ஒலிம்பிக்கில் இதே பிரிவில் தங்கம் வென்றதோடு ஒலிம்பிக் பயணத்தை முடித்துக் கொண்டார்.

அதுபோலவே டோனாவான் பெய்லி , ஆசாபா பவல், டைசன் கே என ஏராளமானத் தடகள வீரர்கள் வந்தார்கள். நான்கே ஆண்டுகளில் காணாமல் போய் விடுவார்கள். ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் புகுந்த உசேன் போல்ட்தான் கார்ல் லூயீஸ்க்குப் பிறகு  நங்கூரம் போட்டு , ஸ்பிரிண்ட் ஈவன்டில் கலக்கிக் காட்டியுள்ளார். ஒலிம்பிக்கை பொறுத்த வரை 100 மீட்டர், 200 மீட்டர்தான் ஹைலைட். புதிது புதிதாக வந்து கொண்டேயிருப்பார்கள். ஸ்பிரிண்ட் ஈவன்டில் ஒருவர் நீண்ட காலம் களத்தில் நிற்பதும் சாதிப்பதும் கடினம். ஆனால் இந்த ஜமைக்காக்காரர் நின்றும் வென்றும் காட்டியுள்ளார். ஏதென்சில் ஹீட்சிலேயே தோற்று போன, உசேன் போல்ட் பெய்ஜிங்கில்தான் விசுவரூபம் எடுத்தார். 100 மீட்டர் ஓட்டத்தை  9.63 விநாடிகளில் கடந்தார் 200 மீட்டர் ஓட்டம் அடுத்து 4x100 தொடர் ஓட்டத்தில் உசேன் தங்கம் வென்றார். 2009ம் ஆண்டு பெர்லினில் நடந்த உலகச் சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஓட்டத்தில் உசேனின்  உலகச் சாதனை 9.58 விநாடிகள். இந்த சிறுத்தை வேகத்தை முறியடிக்க  இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும்.

பெய்ஜிங் முதல் தற்போது ரியோ வரை ஆதிக்கம் தொடர்ந்ததால் உசேனின் ஒலிம்பிக் கணக்கில் தற்போது 9 தங்கப் பதக்கங்கள் சேர்ந்துள்ளது. பங்கேற்ற அத்தனை ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்ற பெருமையுடன் உசேன் போல்ட் ஓய்வு பெறுகிறார். உசேன் போல்ட் ஸ்பிரின்ட் ஈவன்ட்டுக்குள் வருவதற்கு முன் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒன்று அல்லது இரு மில்லி விநாடிகள்தான் தங்கத்துக்கும் வெள்ளிக்குமான இடைவெளியாக  இருக்கும். அப்போதெல்லாம் பெரும்பாலான சமயங்களில் போட்டோ பினிஷ் வழியாகத்தான் முடிவுகள் தீர்மானிக்கப்படும்.அந்தளவுக்கு கடும் போட்டி இருக்கும்.

பெர்லின் உலகக் தடகளத்தில் 9.58 விநாடிகளில் போல்ட் உலகச் சாதனை படைத்த போது, இரண்டாவது வந்த டைசன் கே 9.71 விநாடிகளில்தான் இலக்கை பினிஷ் செய்தார். இதுவெல்லாம் எலக்ட்ரானிக் போர்டு வந்த பிறகு நடந்த விஷயங்கள். உசேன் போல்ட் எலக்ட்ரானிக்  போர்டு வருவதற்கு முன் ஓடியிருந்தால் போட்டோ பினிஷ்  தேவையே இல்லை.பெய்ஜிங் முதல் ரியோ ஒலிம்பிக் வரை இரண்டாவது இடம் பிடிப்பவரை குறைந்தது ஒரு அடி வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார் உசேன் போல்ட்.

இப்போது 9 தங்கங்களுடன்  ஒலிம்பிக்கில் இருந்து விடை பெற்று விட்டார் 30 வயது உசேன் போல்ட். அடுத்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் யார் வெல்லப் போகிறார்களோத் தெரியவில்லை.

ஆனால் ஒரு வெற்றிடம் மட்டும் நிச்சயம் நிலவும்!

ஹேப்பி பர்த்டே உசேன் போல்ட் @  உசேன் Gold!
 

- எம்.குமரேசன்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்