Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அணைந்த ஒலிம்பிக் தீபம்! - ஒலிம்பிக் டைரி குறிப்புகள்- 20

 

அன்பு வாசகர்களே, 


முந்தைய அத்தியாயங்களைப் படிக்க : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15 16 17  18   19

 

கிரேக்கக் கடவுள்களில் ஒருவரான  ப்ரோமேதியஸ்  வருங்காலத்தை முன்கூட்டியே கணிக்கக் கூடியவர். கடவுள் என்றாலும் பொதுவுடைமைச் சிந்தனை கொண்டவர். மவுண்ட் ஒலிம்பியாவின் உச்சியில், கடவுள்களோடு கடவுளாக வாழ்வதில்  ப்ரோமேதியஸுக்கு அதிக விருப்பம் இல்லை. மக்களோடு மக்களாக வாழ தரைக்கு வந்தார். ஆனால், மக்களின் வாழ்க்கை சுகமாக இருக்கவில்லை. முடங்கிக் கிடந்தனர். அதிகக் குளிர். வேட்டையாட, சமைக்க முடியவில்லை. காரணம், அவர்களிடம் நெருப்பே இல்லை.

 

கடவுள்களின் அரசனான ஜீயஸிடம் சென்றார்  ப்ரோமேதியஸ். ஜீயஸே இடி, மின்னல், நெருப்பு உள்ளிட்ட சக்திகளின் ஹோல்சேல் அதிபதி. ‘ப்ளீஸ், மக்களுக்கு நெருப்பு கொடுங்க...’ என்று விண்ணப்பம் வைத்தார். ‘நெருப்பைக் கொடுத்தால் மக்கள் சக்தி வாய்ந்தவர்களாக மாறிவிடுவார்கள். அது நமக்கு பாதகமாகிவிடும். சிறு பொறி கூட தரமாட்டேன்’ என்று கடுப்பு காட்டினார் ஜீயஸ்.

கவலையுடன் கடற்கரையில் நடந்து வந்த  ப்ரோமேதியஸ், அங்கே ஒரு மரத்துண்டைக் கண்டார். அதை உடைத்தார். அதன் வெற்றிடத்தின் உள்ளே நீண்ட நேரம் நின்று எரியும் பொருள்களை நிரப்பினார். ஜீயஸ் வாழும் இடத்தில் சென்று மறைந்து கொண்டார். இரவில் ஜீயஸ் உறங்கும்போது  ப்ரோமேதியஸ் அவரருகே பதுங்கிப் பதுங்கிச் சென்றார். ஜீயஸ் கையில் வைத்திருக்கும் நெருப்பு உருவாக்கும் மந்திரக்கோலின் மீது அந்த தீப்பந்தத்தை வைத்தார். சிறு மின்னல் உருவாகி பந்தம் பற்றியது.

உடனே நிலத்துக்குத் திரும்பினார். குளிர்காய நெருப்பை மூட்டி, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். பிறகு ஒருநாள் ஜீயஸ், நிலத்தில் மக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி சந்தோஷமாக வாழ்வதைக் கண்டார். கோபமடைந்தார்.  ப்ரோமேதியஸுக்கு கடும் தண்டனை வழங்கினார். ஆனால்,  ப்ரோமேதியஸ் ஜீயஸிடமிருந்து திருடியிருக்காவிட்டால் மக்களுக்கு நெருப்பே கிடைத்திருக்காது என்பதே கிரேக்க புராணம் சொல்லும் கதை.

பண்டைய கிரேக்கத்தில், அதாவது கிமு 776 ல்,   முதல் ஒலிம்பிக் போட்டிகள்  நடந்த காலம் முழுவதும், இந்த நெருப்பு திருடிய நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, ஒரு கொப்பரையில் தீ எரிந்து கொண்டிருந்தது. நவீன ஒலிம்பிக் 1928 ல் ஆம்ஸ்டர்டாமில் நடந்துபோது, ஒலிம்பிக் தீபம் ஏற்றும் பண்டைய கிரேக்க வழக்கம் மறு அறிமுகம் செய்யப்பட்டது. 1936 பெர்லின் ஹிட்லர் ஒலிம்பிக்கில், தீபத்தை ஓட்டமாக எடுத்துச் சென்று, அதை துவக்க விழா சமயத்தில் கொப்பரையில் ஏற்றும் வழக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிக்கும் பிரத்யேகமாக ஒலிம்பிக் தீவட்டி தயாரிக்கப்படுகிறது. ஒலிம்பிக் ஆரம்ப விழாவுக்கு சில மாதங்களுக்கு முன்பாகவே, ஒலிம்பிக்கின் தாயகமான ஒலிம்பியாவில் இந்த தீவட்டி ஏற்றப்படுகிறது. பதினொரு கன்னிப் பெண்கள் சூழ்ந்திருக்க, சூரிய ஒளியை ஓர் ஆடியில் குவியச் செய்து அதன் மூலம் நெருப்பை உண்டாக்கி தீவட்டியை ஏற்றுகின்றனர். அதன்பின் காடு, மலை, பாலைவனம், கிராமம், நகரம், கடல், அருவி, வானம் என ஒவ்வொன்றையும் கடந்து, ஒலிம்பிக் நடைபெறும் மைதானத்தை நோக்கி, ஒலிம்பிக் தீபத்தின் பயணம் ஆரம்பமாகும்.

யார் இறுதியில் மைதானத்தில் ஓடிவந்து ஒலிம்பிக் தீபத்தை ஏற்றப்போகிறார் என்பதை ஒவ்வொரு முறையும் ரகசியமாகவே வைத்திருப்பார்கள். அந்த கௌரவம் மிகப் பெரியது. 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில் யார் தீபத்தை ஏந்தி வரப்போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அப்போது பிரபலம் அல்லாத பருவ வயது இளைஞன் ஒருவன்,  தீபத்தை ஏந்தி ஓடிவந்தான். அவன் பெயர் யோஷினோரி ஷகாய். இரண்டாம் உலகப்போரில், ஹிரோஷிமா நகரம் மீது அணுகுண்டு வீசப்பட்ட அதே தினத்தில் பிறந்தவன். போருக்குப் பின் ஜப்பான் மீண்டெழுந்ததைக் குறிக்கும் விதமாகவும், உலகில் அமைதியை வலியுறுத்தும் விதமாகவும் மாணவன் யோஷினோரிக்கு தீபம் ஏற்றும் கௌரவம் அளிக்கப்பட்டது.

1992 பார்சிலோனா தொடக்க விழாவில், ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்ட விதம் உலகையே வாய்பிளக்கச் செய்தது. மைதானத்தில் பாராலிம்பிக் வில்வித்தை வீரர் ஆண்டனியோ ரெபோல்லோ காத்திருந்தார். மக்கள் ஆர்ப்பரிக்க ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வந்த வீரர் ஒருவர், ஆண்டனியோ கையில் இருந்த அம்பின் முனையில் பற்ற வைத்தார். ஆண்டனியோ ஒரு வில்லில் அந்த நெருப்பு அம்பைப் பொருத்தி, 181 அடி உயரத்தில் இருந்த கொப்பரையை நோக்கி எய்தார். ஒலிம்பிக் தீபம் மளமளவென எரிந்தது. அதைக் கண்ட ஒவ்வொருவரும் பரவசத்தில் ஆழ்ந்தனர். இதுவே மிகச் சிறந்த ஒலிம்பிக் தீப ஏற்றும் நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது.

 

 

ஆனால், ஆண்டனியோ எய்த நெருப்பு அம்பு, கொப்பரை தாண்டி வைக்கப்பட்டிருந்த மணல் பெட்டிகளில் பாதுகாப்பாகச் சென்று விழுந்தது. கொப்பரையின் மேலே எரிவாயு பரவியிருந்தது. அம்பு எய்யப்பட்ட நொடியில், ரிமோட் கண்ட்ரோல் மூலம் கொப்பரையில் தீ ஏற்றப்பட்டது. எல்லாமே நாடகம். ரசிகர்களின் பாதுகாப்பு கருதியே இப்படிச் செய்தார்கள் என்று பின்னர் செய்திகள் வெளியாயின.

ஒலிம்பிக் தீப ஓட்டம் நடைபெறும் இடத்தில் போராட்டம் செய்வது, எதிர்ப்புகளைத் தெரிவிப்பது, மிரட்டல் விடுப்பது, ஓட்டத்தைத் தடுக்க நினைப்பது என ஒவ்வொரு ஒலிம்பிக் ஓட்டத்திலும் இந்த நெருப்பைச் சுற்றிய அரசியல் போராட்டங்களுக்கும் குறைவே இல்லை. 'ஒலிம்பிக் தீபத்தை அணைக்காமல் நாடு நாடாக, ஊர் ஊராகக் கொண்டு செல்ல முடியுமா, அது அணைந்ததே இல்லையா' என்ற கேள்விகள் எழலாம். அணைந்திருக்கிறது. அணைந்தால் மீண்டும் ஏற்றிக் கொண்டு ஓட்டத்தைத் தொடருவார்கள். அவ்வளவுதான்.

1976 மான்ட்ரியல் ஒலிம்பிக் போட்டிக்கான தீப ஓட்டம் நடைபெற்றது. ஆரம்ப விழாவில் கொப்பரையில் தீபம் ஏற்றுவதில் எல்லாம் பிரச்னையில்லை. இடையே ஒரு நாள் நல்ல காற்று, கனமழை. கொப்பரையில் நெருப்பு அணைந்துவிட்டது. அன்று போட்டி எதுவும் இல்லாததால் மைதானத்தில் யாரும் இல்லை. ஒரே ஒரு பிளம்பர் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஒலிம்பிக் தீபம் அணைந்ததும், பதறிய அவர், ஒரு செய்தித்தாளை எடுத்து சுருட்டி, தன் சிகரெட் லைட்டரால் அதைப் பற்றவைத்து ஒலிம்பிக் தீபம் ஏற்றும் பெருமையினைத் தனக்குத் தானே தேடிக் கொண்டார். அவர் பெயர், பியரி பௌசர்ட்.

இதைக் கண்டு பதறிய ஒலிம்பிக் அதிகாரிகள் சிலர், வேக வேகமாக வந்து அந்த தீபத்தை அணைத்தனர். ஒலிம்பிக் தீபத்தின் புனிதம் கெட்டுவிட்டதாகப் பதறினர். மைதானத்தில் பத்திரமாக வைத்திருந்த பிரத்யேக ஒலிம்பிக் தீவட்டியை எடுத்து வந்து, மீண்டும் தீபமேற்றி புனிதத்தை மீட்டெடுத்தனர்.

இதுவரையிலான நவீன ஒலிம்பிக் வரலாற்றில், 2008 பீஜிங் ஒலிம்பிக் தீபத்தின் பயணம்தான் மிக நீளமானது. மார்ச் 24ல் ஆரம்பித்த ஓட்டம், ஆகஸ்ட் 8 வரை நடந்தது. அண்டார்டிகா தவிர, பிற ஆறு கண்டங்களிலும், 1,37,000 கி.மீ பயணம். 21,880 பேர் சுமந்து ஓடினர். எவரெஸ்ட் சிகரத்தில்கூட  அந்த ஒலிம்பிக் தீபம் பயணம் செய்தது. பறவைக்கூடு வடிவிலான தேசிய மைதானத்தில், சீன ஜிம்னாஸ்டிக் வீரர் லி நிங், கையில் ஒலிம்பிக் தீபத்துடன், அந்தரத்தில் பறந்தபடி ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.

2016 ரியோ ஒலிம்பிக் தீப ஓட்டத்தில், அகதிகள் முகாமிலிருக்கும் ஆப்கனிஸ்தான், ஈரான், சிரிய அகதிகளும் பங்கேற்றள்ளனர்.

ஒவ்வொரு ஒலிம்பிக் நிறைவு விழாவின் இறுதியாக, ஒலிம்பிக் தீபம் அணைக்கப்படும். அது மீண்டும் ஒலிம்பியாவில் உயிர்பெறும்வரை காத்திருப்போம்.

(டைரி நிறைந்தது)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement