Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செல்லுக்கு நோ... இணையத்துக்கு தடா! கறார் கோபிசந்த்!! #MakingOfSainaSindhu

நிஜாம்களின் நகரம் நித்திரையில் இருக்கும் நேரம் அது. ஆனால், ஹைதராபாத் புறநகரான காச்சிபோலியில் உள்ள கோபிசந்த் அகாடமியில் மட்டும் அந்நேரம் சத்தம் கேட்கிறது. அதிகாலை 4.30 மணி. அகாடமிக்கு உள்ளே நுழைந்தால் ஆணும், பெண்ணுமாக ஐம்பது பேர். மோஸ்ட்லி டீன் ஏஜ் பருவத்தினர்.

எல்லோருடைய ஜெர்ஸிக்கு பின்னாலும் ‘கோபிசந்த் அகாடமி’ என அச்சிடப்பட்ட வாசகங்கள். இருக்கும் எட்டு கோர்ட்டிலும் நெட்டுக்கு இருபுறமும் நின்று பிராக்டிஸ். கோர்ட் கிடைக்காதவர்கள் ஒதுக்குப்புறத்தில் நின்று வார்ம் அப். அவர்களுக்கு டிப்ஸ் கொடுக்க சில பயிற்சியாளர்கள் என பரபரப்பாக இருந்தது அந்த இடம்.

கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால், இடதுகையில் பத்து ஷட்டில்கள் வைத்து, ஒவ்வொன்றாக அதை வேகவேகமாக எதிரில் இருந்து மூன்று பேருக்கு த்ரோ செய்கிறார் கோபிசந்த். அவர் கண் அந்த கோர்ட்டில் உள்ள ஒவ்வொரு இஞ்ச்சையும், ஒவ்வொருவரையும் கண்காணிக்கிறது. இது கோபிசந்த் அகாடமியில் அன்றாடம் நடக்கும் நிகழ்வு.

கோபிசந்த் பேட்மின்டன் அகாடமி. லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்து இருவரின் பயணம் துவங்கிய இடம். ஸ்ரீகாந்த் கிடாம்பி, காஷ்யப், பிரணாய் குமார், குருசாய் தத் என தரமான வீரர்களை பேட்மின் உலகுக்கு தந்த இடம். ‘என்னால் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியவில்லை. ஆனால், பதக்கம் வெல்லும் வீரர்களை உருவாக்க முடியும்’ என சூளுரைத்து கோபிசந்த் கட்டிய இடம்.

2001ல் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் சாம்பியன் பட்டம் வென்றபின், காயம் காரணமாக கரியரை வேகமாக முடித்து விட்டார் கோபிசந்த். தனக்கு கிடைக்காத வசதிகளை இளம் வீரர்களுக்கு கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்ற வேகத்துக்கு கிடைத்த விளைவுதான் இந்த அகாடமி.

சிறந்த நோக்கம் என்பதால் அகாடமி அமைக்க, ஐந்து ஏக்கர் நிலத்தை சலுகை விலையில் தந்து உதவியது ஆந்திர அரசு. ஸ்பான்சர் மற்றும் சொந்த பந்தங்களின் உதவியுடன், காச்சிபோலியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் சூழ்ந்திருக்கும் ஐடி பார்க்கில், 2008ல் கட்டி முடித்த அந்த அகாடமியில் இருப்பது எட்டு கோர்ட், ஒரு நீச்சல் குளம், உணவகம், ஓய்வறை அப்புறம் ஓர் அலுவலகம். இவை அனைத்தும் சிசிடிவி கண்காணிப்பில் என, எல்லாமே சர்வதேச தரத்துக்கு நிகர்.

அதிகாலை 4.30 மணியில் இருந்து பயிற்சி துவங்கி விடும். கோபிசந்த் 4.15 மணிக்கு அங்கு இருப்பார். முதலில் இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர்களுக்கு பயிற்சி. அப்புறம் மூன்று செஷனாக, அகாடமியில் உள்ள 50 வீரர்களுக்கு முறையான டிரெயினிங். காலை 7 & 8.30 சிங்கிள்ஸ், 8.30 & 10 டபுள்ஸ், 10 & 11.30 வரை மீண்டும் சிங்கிள்ஸ், 11.30 முதல் மதியம் ஒரு மணி வரை டபுள்ஸ் வீரர்களுக்கு என ஷிஃப்ட் முறையில் பயிற்சி. மாலை 4 & 5.30, 5.30 & 7 என மீண்டும் ஒரு செசன் வியர்வை சொட்டச்சொட்ட பயிற்சி.

அங்கு இன்டர்நெட் வசதி கிடையாது. ஞாயிறு தவிர்த்து மற்ற நாட்களில் வீரர்கள் ஃபோன் பேச அனுமதி இல்லை. பிசியோ, பிசிகல் டிரெய்னர், பேட்மின்டன் கோச் என பத்துக்கும் மேற்பட்டோர் கோபிசந்த்துக்கு உதவியாக இருப்பர். முதல் ஆளாக வந்து கடைசி ஆளாக வெளியேறுவார் கோபிசந்த். ‘அவர் வீட்டுல இருப்பது கம்மி. அவரைப் பாக்கணும்னா அகாடமிலதான் போயி பார்ப்போம். அவங்க அம்மா, அப்பா வந்தா கூட அவங்களும் அங்க போய்தான் பார்ப்பாங்க’ என்றார் ஒருமுறை கோபிசந்த் மனைவி லட்சுமி.

‘தினமும் 30 கி.மீ., பயணித்து இங்கு வருவேன். காலையில் என்னை டிராப் செய்து, பயிற்சி முடிந்த பின் பள்ளிக்கு கூட்டிச் சென்று, மீண்டும் மாலையில் இங்கு கொண்டு வந்து விடுவதே, நான்கு ஆண்டுகளாக என் அப்பாவுக்கு வேலை. செகந்திரபாத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு மாறும் வரை இதுதான் எங்கள் ரொட்டீன் வாழ்க்கை’ என்றார் சிந்து. அகாடமியின் தரத்துக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?

ரஜினி படம் பார்ப்பது, அவர் போல ஹேர் ஸ்டைல் வைப்பது என, தென்னிந்தியாவில் 90களில் இளைஞர்கள் எப்படி இருந்தனரோ கோபிசந்த்தும் அப்படித்தான் இருந்தார். அண்ணன் சென்னை ஐஐடியில் படித்து மேற்கத்திய நாட்டில் செட்டிலாகி விட்டார் என்பதால் கோபிசந்த்தும் இன்ஜினியரிங் எக்ஸாம் எழுத பணிக்கப்பட்டார். அவரும் எழுதினார். போதிய மார்க் வரவில்லை.

‘மார்க் வந்திருந்தால் என் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கும். என், 27 வயதில், ‘ஆல் இங்கிலாந்து பேட்மின்டன்’ பட்டம் வென்றேன். பேட்மின்டன் வீரனாக என் பணி முடிந்து விட்டது. இளைஞர்களுக்கு உதவ நினைத்தேன். அதற்கு இந்த அகாடமி உதவுகிறது’ என்றார் கோபிசந்த்.

இன்னொரு ஒலிம்பிக் கோல்ட் மெடலிஸ்ட்ட ரெடி பண்ணுங்க பாஸ்!

                                                                                                                                                                                                                        -  -தா. ரமேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement