Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லோக்கல், கலக்கல், செம தில்! அமர்க்களம் ஆரம்பம் #TNPL-T20

வேஷ்டி சட்டையில் மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து, திருநெல்வேலியில் இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டு, சங்கம் தியேட்டரில் சினிமா பார்த்து, பார்ட் டைம் தமிழனாகவே வலம் வந்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மேத்யூ ஹைடன். தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) டி&20 தொடரை ப்ரமோட் செய்வதற்கான நிகழ்ச்சிகளில்தான் இந்த அமர்க்களம். பயிற்சியாளர் அவதாரம் எடுத்துள்ள லான்ஸ் க்ளூஸ்னர், மைக்கேல் பெவன், பிரட் லீ இனி தங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகின்றனரோ? 

‘எதிரணியைச் சேர்ந்தவர் என்றாலும், களத்தில் சாதித்தால் ஆராதிப்பர் என்பதால் சென்னை ரசிகர்கள் மீது எனக்கு தனி பிரியம்’ என்றார் இந்திய ஒருநாள் அணி கேப்டன் தோனி. பரம எதிரியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் வீரர்களுக்கும் உரிய கவுரவம் கொடுத்தவர்கள் சென்னை ரசிகர்கள். அதனால்தான் ‘ஐ லவ் சென்னை ஃபேன்ஸ்’ என்றார் வாசிம் அக்ரம்.

பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து சீனிவாசன் விலகிய பின், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்த துவங்கியது பிசிசிஐ. கடந்த மார்ச் மாதம் டி&20 உலக கோப்பை நடந்தபோது, தன் சொந்த மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்துக்கு ஏழு போட்டிகளை ஒதுக்கி இருந்தார் அப்போது பிசிசிஐ செயலராக இருந்த அனுராக் தாக்கூர். இவ்வளவு ஏன் அனல் கொதிக்கும் இந்தியா & பாகிஸ்தான் போட்டியே தர்மசாலாவில்தான் நடப்பதாக இருந்தது. ஹிமாச்சல பிரதேச அரசு கடைசி நேரத்தில் கை விரித்ததால், போட்டி கொல்கத்தாவுக்கு மாறியது. 

செயலர் இப்படி என்றால் தலைவர் விடுவாரா? அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த சஷாங்க் மனோகர், தன் பங்குக்கு நாக்பூரில் 9 போட்டிகள் நடக்கும்படி பார்த்துக் கொண்டார். கேலரி பிரச்னையை மேற்கோள்காட்டி, போனால் போகட்டும் என 4 பெண்களுக்கான போட்டிகளை மட்டுமே சேப்பாக்கத்துக்கு ஒதுக்கினர். அதுவும் இந்தியா இல்லாத போட்டிகள்.

என்ன ஆயிற்று தெரியுமா?

இந்தியா & வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி&20 உலக கோப்பை போட்டி பெங்களூருவில் நடந்து கொண்டிருந்தது. அதேநேரத்தில் சேப்பாக்கத்தில் தென் ஆப்ரிக்கா & அயர்லாந்து பெண்கள் அணிகள் மோதிக் கொண்டிருந்தன. பத்தாயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொன்னால் கூட, தென் ஆப்ரிக்கா & அயர்லாந்து பெண்கள் மோதிய போட்டியை முழுமையாகப் பார்க்க எந்த கிரிக்கெட் வெறியனும் சம்மதிக்க மாட்டான்.

அவ்வளவு ஏன்... மேட்ச் ரிப்போர்ட் கொடுப்பதற்காக பணிக்கப்பட்டிருந்த நிருபர்கள் கூட, மீடியா ரூமில் இருந்த டிவியில் இந்தியா & வங்கதேசம் மோதிய போட்டியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், இந்த பெண்கள் கிரிக்கெட்டைப் பார்க்கவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேப்பாக்கம் வந்திருந்தனர். அவர்கள் நினைத்திருந்தால் வீட்டில் இருந்தபடி இந்தியா & வங்கதேச போட்டியை பார்த்து ரசித்திருக்கலாம். ஆனால், வந்து நின்றான் ரசிகன். அதான் சென்னை, அதான் கெத்து.

இது தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் ரசனைக்கு ஒரு சாம்பிள். 

அறிவார்ந்த ரசிகர்கள் பட்டம் எல்லாம் ஓகே. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே இல்லையே, சென்னையில் டி&20 உலக கோப்பை போட்டிகள் இல்லையே என கடுப்பில் இருந்த ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக டிஎன்பிஎல் தொடரை ஆரம்பித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் #TNCA. 25 நாட்கள் நடக்கும் இந்தத் தொடர் நாளை தொடங்குகிறது.

சேப்பாக்கம், நத்தம், திருநெல்வேலி ஆகிய மூன்று இடங்களில் நடக்கும், மொத்தம் 31 போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்புகிறது. சேப்பாக் சூப்பர் கில்லிஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், டூ-ட்டி பேட்ரியாட்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் என்பது அணிகளின் பெயர். இந்த தொடரின் மூலம் முழுக்க முழுக்க தமிழகத்தில் இளம் வீரர்களை அடையாளம் காண்வதே அல்டிமேட் இலக்கு.

தமிழகத்தின் இளம் வீரர்களுக்கான இந்த தேடல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், பத்ரிநாத் என சீனியர்கள் இருப்பது இளம் வீரர்களுக்கு பலம். ‘சீனியர் வீரர்களுக்கு ஐபிஎல் அளவுக்கு பணம் கிடைக்காது. இருந்தாலும், அவர்கள் கிரிக்கெட்டுக்கு திருப்பிச் செலுத்தும் நேரமிது. முடிந்தவரை இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு சீனியர்கள் பொறுப்பேற்க வேண்டும்’ என, கோப்பையை அறிமுகப்படுத்தி விட்டு சொன்னார் தோனி. மதுரை அணியின் லோகோவை அறிமுகப்படுத்தி விட்டு ‘மாவட்ட அளவிலான வீரர்கள் மாநில அணிக்கு தேர்வாக இந்த தொடர் நல்ல வாய்ப்பு’ சொல்லி விட்டுப் பறந்தார் சேவாக்.

தோனி, சேவாக் சொல்வது போல, புதிதாக இளம் வீரர்கள் உருவெடுக்க மட்டுமல்ல, ஏற்கனவே ஐபிஎல் அணிகளில் இடம்பெற்று பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் தவிக்கும் வீரர்களுக்கும், தங்களை நிரூபிக்க இது நல்ல களம். அதேசமயம் இங்கு அடிக்கும் ச(த்)தம் அங்கு பிசிசிஐ கதவுகளை தட்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில்...

#TNPL தொடருக்கான வேலைகள் ஒருபுறம் நடக்க, சத்தமில்லாமல் ஆறு தமிழக சீனியர் வீரர்களை துலீப் டிராபி தொடருக்கான அணியில் சேர்த்து ‘அல்ரெடி’ ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது பிசிசிஐ. அந்த ஆறு பேரும் ஸ்டார் வேல்யூ பிளேயர்கள். தவிர, TNCA-வில் பதிவு செய்துள்ள வேற்று மாநில வீரர்களை இந்த தொடரில் பங்கேற்க விடாமல் தடுக்கும் வேலையும் திரைமறைவில் நடக்கிறது. ‘டிஎன்பிஎல் தொடரை உங்களுக்கு போட்டியாக கருத வேண்டாம்’ என, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் இதை அப்படியே ஏற்றுக்கொள்பவரா என்ன?

டிஎன்சிஏ இந்தத் தொடரை இளம் வீரர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் தொடராக பார்க்கிறது. பிசிசிஐ வேறு விதமாக நினைக்கிறது. ஆரம்பமே அதிரடியாக தொடங்கும் இந்த தொடர் சூடுபிடிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. இருந்தாலும் கார்ப்பரேட் பங்களிப்பு, நேரடி ஒளிபரப்பு, ஸ்டார் வீரர்களின் பங்கேற்பு, மின்னொளியில் போட்டி, ஸ்டார் ஹோட்டல்களில் பேட்டி என ஏற்பாடுகள் எல்லாம் பக்கா ஐபிஎல் சொக்கா.

ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு செலிபிரிட்டியை வைத்து ப்ரமோ செய்து வருகிறது. இதில் ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணியின் டீசரை டிஆர் பாடியதுதான் அல்டிமேட். இறங்குனாக்கா லோக்கலு, ஆடுனாக்கா கலக்கலு. இறங்குனாக்கா லோக்கலு, ஆடுனாக்கா கலக்கலு... இப்படி போகுது அந்த டீசர். ரைட்டு!

-தா.ரமேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement