Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆயுதம் ஏந்தியபிறகுதான் என் குரல் கேட்கிறது உங்களுக்கு! - ஒரு விளையாட்டு வீரனின் ஆதங்கம்!

 

சிந்து...சாக்‌ஷி..

கடந்த ஒரு வாரமாக அத்தனை இந்தியர்களும் உச்சரிக்கும் பெயர்கள். ஆனால், அதே இந்தியர்கள் தான் அவர்கள் குழந்தைகளை விளையாட்டுத்துறையில் சேர்க்க சொன்னால் “ஸ்போர்ட்ஸ்ல பெரிய ப்யூச்சர்  கிடையாது சார். என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறார்கள். அவர்கள் சொல்வது போலதான் வரலாறும் இருக்கிறது. சர்வதேச அளவில் வெற்றி பெற்ற பலரின் நிலை அதை உறுதிப்படுத்துகிறது.


கிரிக்கெட், டென்னிஸ், கோல்ஃப் போன்ற மேல்த்தட்டு மக்கள் விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு ஸ்போர்ட்ஸ் பணம் சம்பாதிக்கும் இடமாக இருக்கலாம். ஆனால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் வாங்கிக் கொடுக்கும் ஒரு தங்கப் பதக்கம் தான் அவர்களின் பிறவிப் பயன்! அந்த தருணங்களை விவரிக்க வார்த்தைகள் கிடையாது.

இப்படி இந்தியாவிற்காக ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் பதக்கத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு, வாழ்க்கை முழுவதும் அந்த ஒரு கணப் பொழுதை மட்டுமே நினைத்து பெருமை பட்டு வாழ வேண்டியவர்களில் பலரின் வாழ்க்கை, மோசமான பொருளாதார சூழ்நிலை, அரசின் மெத்தனம், விளையாட்டு சங்கங்களின் அலட்சியம் காரணமாக  கொடூரமானதாகவே இருக்கிறது. சிந்துவையும், சாக்‌ஷியையும் போற்றும் இந்த நேரத்தில் இவர்களின் கண்ணீர் பக்கங்களையும் பாருங்களேன்...!

ஷங்கர் லக்‌ஷ்மன் - இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக இருந்தவர், இந்திய அணியில் கோல்கீப்பராக இருந்து கேப்டன் பதவியை பிடித்த முதல் ஆள் இவர் தான். அன்று அவர் துவக்கிய பாதையில் தான் இன்று ஶ்ரீஜேஷ் என்கிற கோல்கீப்பர், இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார். 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் தங்கம், 1960 ரோம் ஒலிம்பிக்கில் வெள்ளி, 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் பெற்றுக் கொடுத்தவர்.  

1960 ரோம் ஒலிம்பிக்கின் இறுதி போட்டியில் பாகிஸ்தானின் நஸீர் அஹமத் அடித்த பந்தை தடுக்க முயன்று முடியாமல் போனதால், இந்தியா முழுவதும் இவரை ஒரு துரோகியாக பார்த்தது. இவனால் தான் இந்தியா தோற்றது என்கிற பழியையும் சுமத்தியது.  அந்த பழியை துடைக்க அடுத்த நான்கு ஆண்டுகள் காத்திருந்து 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிக் கொடுத்து தன் களங்கத்தை தானே துடைத்துக் கொண்ட வீரர். மக்கள் பழியை சுமத்திய போதும், துடைத்த போதும் இவருக்கு மனதில் இருந்தது இந்தியா மட்டும்தான். இந்தியாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது மட்டும். இவருடைய சாதனைகளை கருத்தில் கொண்டு இவருக்கு இந்திய அரசு அர்ஜூனா விருது மற்றும் பத்ம ஶ்ரீ விருது  வழங்கி கெளரவித்தது.  இறுதி காலங்களில் அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய உதவிகள் மற்றும் சரியான மருத்துவ சிகிச்சைகள் ஏதும் இன்றி Gangrene-ல் (ப்ளீஸ். கூகுள் செய்து பாருங்கள் எவ்வளவு கொடுமையான நோய் என்று புரியும்)  பாதிக்கப்பட்டு இறந்தே போனார். 

 


கே.டி ஜாதவ் - 1952 ஒலிம்பிக்- மல்யுத்தத்தில் (Wrestling), இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் பெற்றுக் கொடுத்தவர். 

இவருடைய குடும்பமே மல்யுத்த குடும்பம் தான்.  1948 லண்டன் ஒலிம்பிக்கில் நவீன மல்யுத்த மேட்கள் பயன்படுத்தப்பட்டது மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அனுபவமின்மை காரணமாக 6-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. அதன் பின், தேகத்தை இன்னும் முறுக்கேற்றி, பயிற்சியில் இன்னும் தன்னை பட்டை தீட்டிக் கொண்டார். இந்தியாவின் ஊழல் படிந்த மல்யுத்த ஃபெடரேஷன்கள் காரணமாக ஜாதவ்விற்கு 1952 ஒலிம்பிக்கில் இடம் கிடைக்கவில்லை. பல கட்ட முறையீடுகள், வழக்குகள், பெரிய மனிதர்கள், அரசியல் வாதிகளிடம் மனு என்று போராடி, எப்படியோ 1952 ஹெல்சென்கி ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.


இப்படி நம் இந்திய அரசும், மக்களும் சேர்ந்து பரிகசித்து பேச்சாலேயே இவரை கொன்ற போதும் " என் பிறப்பிற்கு ஏதாவது அர்த்தம் இருக்க வேண்டும், தாய் நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் " என்று ஹெல்சென்கி ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள காசு கொடுங்க சார் என்று கேட்டார். ஆம், வீடு வீடாக குடும்பத்தோடு சென்று பிச்சை கேட்காத குறையாக  காசை சேகரித்து ஒலிம்பிக்கில் கலந்து கொண்டவர்.  

பொதுவாக ஒலிம்பிக்கில் போட்டிகள் சீரான இடைவெளிகளில் தான் நடக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் அந்தந்த நாட்டின் விளையாட்டு சங்க பிரதிநிதிகள் ஒலிம்பிக் கமிட்டியிடம் முறையிட்டு போட்டி நேரத்தை மாற்றலாம். இப்படி எந்த சாதகத்தையும் இந்திய விளையாட்டு சங்கங்கள் செய்யவில்லை.

அரை இறுதி போட்டியில், உலக அளவில் புகழ் பெற்றிருந்த ஜப்பானின்  சொஹாச்சி இஷி யோடு(Shohachi Ishii) மோத வேண்டி இருந்தது. ஜாதவ்விற்கு அப்போது ஒலிம்பிக் மல்யுத்தத்தில் புதிதாக சேர்க்கப்பட்டிருந்த விதிகள் மற்றும் உயர்தர ரப்பர் மேட்கள் அவ்வளவாக பழகவில்லை. இருப்பினும் சிறப்பாக போராடினார். 1952 ஒலிம்பிக்கில் இஷியோடு மோதுவதற்கு முன்பு வரை நடந்த அத்தனை போட்டிகளையும் 5 - 6 நிமிடங்களுக்குள் வென்றவர், முதல் முறையாக இஷியோடு 15 நிமிடங்களுக்கு மேலும் வெற்றிக்காக போராடினார். போட்டி நேர முடிவில் ஒரு புள்ளி வித்தியாசத்தில்  இழந்தார். இஷி தான் ஃபைனலில் தங்கம் வென்றார். 

அதன் பிறகு வெண்கல பதக்கத்திற்கான போட்டி அடுத்த சில நிமிடங்களிலேயே நடந்த போது இந்திய விளையாட்டு சங்க பிரதிநிதிகள் என்ன செய்தார்கள் என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். இவர் வெண்கலத்திற்கு ரஷ்யாவின்  ரஷீத் உடன் (Rashid Mammadbeyov) மோத வேண்டி இருந்தது. இவரும் அன்றைய தேதிக்கு உலக அளவில் தரமான மல்யுத்த வீரர். இஷி உடன் மோதிய களைப்பு உடலில் இருந்த போதும், மீண்டும் முழு மனவலிமையோடு சிங்கம் போன்று சீறிப் பாய்ந்து வெண்கலத்தோடு இந்தியா வந்தார் ஜாதவ். 

 இத்தனை பிரச்னைகளைத் தாண்டி இந்தியாவிற்காக தனி ஒருவனாக களத்திலும், மனத்திலும் போராடி சாதித்தவருக்கு, கடைசி காலத்தில் சல்லிப் பைசா இல்லாமல், பிழைக்க வழி தெரியாமல் இறந்தார். இறக்கவிட்டார்கள் என்பதே உண்மை.

பான் சிங் தோமர்  

3000 மீட்டர் ஸ்டீஃபிள் சேஸில் 7 ஆண்டுகளாக இந்தியாவின் தேசிய சேம்பியனாக இருந்தவர். ராணுவத்தில் பணியாற்றியவர். இவர் களத்தில் இருந்தவரை யாராலும் இவரை வெல்ல முடியவில்லை. இவர் 3000 மீட்டர் ஸ்டீஃபில் சேஸில் 9 நிமிடங்கள் 02 நொடிகள் என்று வைத்த தேசிய சாதனையை அடுத்த 10 ஆண்டுகளுக்கு யாராலும் முறியடிக்க முடியவில்லை.

1958 ஆசிய தடகள போட்டியில் கலந்து கொண்டவர். அந்த காலங்களில் தான் நவீன சிந்தெடிக் டிராக்குகள்  சர்வதேச போட்டிகளில் கொண்டு வரப்பட்டதால் அவருடைய முழுமையான திறமை ஆசியப் போட்டிகளில் வெளிப்படவில்லை. ராணுவத்திலிருந்து வெளியேறிய பின் தன் ஊரில் ஏற்பட்ட நிலத் தகராறில் தன் தாயை இழந்தார். தனக்கு நீதி கிடைக்க தன் ராணுவ உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், காவல் துறை என்று ஏறாத படி கிடையாது. தாயை இழந்த சோகத்தாலும், ஏற்பட்ட கோபத்தாலும் " இவங்களுக்கு வாய்ல பேசுனா புரியாது, இனி துப்பாக்கில தான் பேசணும் " என்று Dacoit (ஆயுதம் ஏந்திய கொள்ளையன்) ஆகிவிட்டார். இறுதியில் இந்திய போலீசாரின் என்கவுன்டர் லிஸ்டில் சேர்க்கப்பட்டு கொல்லப்பட்டார்.

" களத்தில் ஓடும் போது நான் இந்தியாவிற்காக ஓடுகிறேன் என்கிற பெருமிதத்துடன் தான் ஓடினேன்" . " 1962 மற்றும் 1965 சீனப் போர்களில் கலந்து கொள்ள அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்பதால் வருத்தமடைகிறேன் " என்று சொல்லி இருந்த அதே பான் சிங் தோமார் "ஒரு விளையாட்டு வீரானாக இருந்த போது என்னை யாரும் மதிக்கவில்லை, என் பிரச்னை என்னவென்று கூட யாரும் காது கொடுத்த கேடகவில்லை, இப்போது ஆயுதம் ஏந்திய பிறகு தான் நான் என்ன சொல்கிறேன் என்பதை கேட்கவே நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் " என்று இந்திய அரசு அதிகாரிகளைப் பார்த்து கேட்டார்.


ஷர்வன் சிங் -

1954 ஆசிய தடகளப் போட்டியில் தடைஓட்டத்தில் (Hurdles) இந்தியாவிற்கு தங்கம் வாங்கிக் கொடுத்தவர், ஏழ்மை காரணமாக வாழ்கை நடத்துவதற்கு தன் உழைப்பிற்கும், நாட்டிற்கும் கிடைத்த வெகுமதியான தன் தங்கப் பதக்கத்தை கண்ணீரோடு விற்று, தன் குடும்ப வாழ்கையை ஓட்ட வேண்டிய கட்டத்திற்கு தள்ளபட்டார்.


பர்தமான் சிங் -

1954 ஆசிய தடகளப் போட்டியில் குண்டு எறிதல் மற்றும் வட்டு ஏறிதல் போட்டிகளில் இந்தியாவிற்கு தங்கத்தை தட்டி வந்தவர். அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நியாயமான உதவிகள் எதுவும் கிடைக்காமல் அநாதையாக செத்துப் போனவர்.

2000 சிட்னி ஒலிம்பிக்ஸில் பளுதூக்குதலில் வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்த கர்ணம் மல்லேஸ்வரி, ரமேஷ் மல்ஹோத்ரா என்கிற கோச் மீது பாலியல் புகார் கொடுத்தார். அந்த புகாருக்கு இன்று வரை ஒரு தீர்ப்பு கிடைக்கவில்லை.

தன்னுடைய மாத சம்பளத்தில் பாதிக்கு மேல் நன்றாக விளையாடும் பிள்ளைகளுக்கு ஒரு தகப்பனாக இருந்து செலவு செய்யும் கோச்களும் இதே இந்தியாவில் இருப்பதால் தான், சிந்து போன்ற புதிய நம்பிக்கை நட்சத்திரங்கள் அவ்வப்போது துளிர்க்கிறது. 

நீ யாருப்பா. ஏன் இவ்ளோ எமோஷனலா பேசுற என்று கேட்டால்... நானும் தேசிய அளவில் பளுதூக்குதலில் பதக்கங்களைப் பெற்று, பயிற்சியினால் ஏற்பட்ட விபத்தை சரி செய்து கொள்ள, மருத்துவ சிகிச்சைகளுக்கு காசு இல்லாமல், அரசிடம் கெஞ்சி பயனில்லாமல், பதக்க கனவுகளை கண்ணீர் விட்டு புதைத்துவிட்டு, மாத சம்பளத்திற்கு வேலைக்கு போகத் தொடங்கிய காமன் மேன்தான்.

ஜெய்ஹிந்த்...!

-கெளதமபுத்தன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement