ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு தண்டனை!

கடந்த 2003ம் ஆண்டு ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி. பெய்ரூட்டில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் ஈராக் அணி ஜப்பானை சந்தித்தது. இந்த போட்டியில் ஈராக் அணி மோசமாக விளையாடி தோற்றுப் போனது. போட்டி முடிந்து  ஈராக் அணி தாயகம் திரும்பியது, விமான நிலையத்தில் இறங்கிய வீரர்கள் நேரடியாக சதாம் உசேனின் மகன் உதே உசேனின் மாளிகைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மோசமாக விளையாடிய  கால்பந்து வீரர்களின் கால் விரல்களை வெட்டக் கூட உதே உத்தரவிட்டதாகவும் பின்னர் உதே என்ன நினைத்தாரோ தெரியவில்லை. முடிவை மாற்றிக் கொண்டு, கால்பந்து வீரர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டதாக 'டெய்லி டெலிகிராப் ' பத்திரிகை ஒரு முறை செய்தி வெளியிட்டிருந்தது. இந்த சம்பவம் நிகழ்ந்து 13 ஆண்டுகளுக்கு இப்போது அதே போன்ற ஒரு சம்பவம் வடகொரியாவில் நடந்துள்ளது.

ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடங்குவதற்கு முன், வடகொரிய அதிபர் கிம் ஜாங் வுன் மொத்தம் 17 பதக்கங்களை வெல்ல வேண்டுமென்று தனது நாட்டு வீரர்- வீராங்கனைகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.  இதில், 5 தங்கப்பதக்கங்கள் கண்டிப்பாக வெல்ல வெல்ல வேண்டும் எனவும்  கூறப்பட்டிருந்தது. ஆனால் பளு துக்குதலில் 2 தங்கம் 3 வெண்கலம் ஜிம்னாஸ்டிக்கில் 3 வெள்ளி என வடகொரியாவால் 7 பதக்கங்களை மட்டுமே ரியோவில் வெல்ல முடிந்தது. தற்போதைய பதக்க எண்ணிக்கையை விட கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் கூடுதலாக ஒரு தங்கப் பதக்கம் வடகொரிய அணி வென்றிருந்தது.

பதக்க எண்ணிக்கை குறைந்ததையடுத்து,  ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்கள் அனைவரையும் சுரங்கத்தில் வேலை பார்க்க வடகொரிய அதிபர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடகொரிய அதிபரின் கோபத்திற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அண்டை நாடான  தென்கொரியா, ரியோ ஒலிம்பிக்கில் 21 பதக்கங்களை வென்றதுதான்.. இதில் 9 தங்கமும் 3 வெள்ளியும் 9 வெண்கலமும் அடங்கும். வடகொரியா வெறும் 2 தங்கம் வென்றுள்ள நிலையில் எதிரி நாடான தென்கொரியா 9 தங்கப்பதக்கங்களை கைப்பற்றியது கிம் ஜாங் வுன்னின் கோபத்தை ஏகத்துக்கும் கிளயிருக்கிறது. அது மட்டுமல்ல  பதக்கப் பட்டியலில் தென்கொரியா 8வது இடத்தை பிடித்தது. வடகொரியாவோ அதனை விட 26 இடங்கள் பின்தங்கி 34வது இடத்தையே பிடித்திருக்கிறது. இதையடுத்துதான்  பதக்கம் வெல்லாதவர்களுக்கு கடும் தண்டனை தரப்பட்டுள்ளதாம்.

பதக்கம் வென்ற வீரர்களுக்கு புதிய பங்களா, ரேசனில் கூடுதல் சலுகைகள், கார் ஆகியவை பரிசாக வழங்ப்படவிருக்கிறது. தண்டனைக்குள்ளாகும் வீரர்கள் வசித்து வரும் வீடுகள் பறிக்கப்பட்டு, வசதி குறைந்த வீடுகள் வழங்கப்படும். ரேசனில் வழங்கப்பட்டிருந்த உணவுச் சலுகைகளும் ரத்து செய்யப்படவுள்ளன. ரேசன் கார்டையே பறித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம். வடகொரியாவில் ரேசன் கார்டு இல்லையென்றால் உணவுப் பொருட்களும் பெற முடியாது.

வடகொரிய விளையாட்டு வீரர்கள் தண்டனைக்குள்ளாவது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2010ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு வடகொரிய அணி முதல் முறையாக தகுதி பெற்றிருந்தது. அதன் போதாத நேரம் 'குரூப் ஆப் டெத்' தில் மாட்டிக் கொண்டது. இந்த பிரிவில் பிரேசில், போர்ச்சுகல், ஐவரிகோஸ்ட் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன. இந்த 3 அணிகளுமே கால்பந்து ஆட்டத்தில் வடகொரியாவை விட பல மடங்கு பலம் வாய்ந்தவை. முதல் சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணியிடம் 2 -1 என்று வடகொரியா தோற்றது.

ஆனால் ,அடுத்து நடந்த மோதலில், போர்ச்சுகல் அணி வடகொரியாவை பின்னி எடுத்து விட்டது. இந்த போட்டியில் 7 கோல்கள் அடித்து வடகொரியாவை தோற்கடித்தது போர்ச்சுகல். அடுத்து ஐவரிகோஸ்ட் அணியிடமும் 3 கோல்கள் வாங்கி தோற்று போனது.  மொத்தம் 12 கோல்கள் வாங்கி முதல் சுற்றிலேயே வடகொரிய அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. இதையடுத்து நாடு திரும்பிய வடகொரிய வீரர்கள் சில காலம் சுரங்கத்தில் அடைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டனர்.

 -எம். குமரேசன்.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!