டெஸ்ட் தரவரிசையில் ஸ்டெயின்  மீண்டும் நம்பர் 1.  | Dale Steyn leapfrogs R Ashwin, James Anderson to reclaim No. 1 spot in ICC Test bowlers' rankings

வெளியிடப்பட்ட நேரம்: 16:38 (01/09/2016)

கடைசி தொடர்பு:17:03 (01/09/2016)

டெஸ்ட் தரவரிசையில் ஸ்டெயின்  மீண்டும் நம்பர் 1. 

 கடந்த ஆண்டு இந்தியாவில்,  தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஸ்டெயின் காயமடையவே அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. மூன்று மாத ஓய்வுக்கு பிறகு மீண்டும் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார் ஸ்டெயின் . அப்போது மீண்டும் காயம்.  ஸ்டெயின் இனி அவ்வளவு தான் என எல்லாரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். அதற்கேற்றார் போல கடந்த சில மாதங்களாக அவர் விளையாடிய போட்டிகளில் பந்துவீச்சும் சுமாராகத்தான் இருந்தது, ஐ.பி.எல்லில் அவருக்கு சரிவர வாய்ப்பும் கிடைக்க வில்லை. இதையடுத்து தென்னாபிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்திலும் ஸ்டெயினை கழட்டிவிட்டது அணி நிர்வாகம். 

காயத்தில் இருந்து முழுமையாக குணமான ஸ்டெயின்,  வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடக்கும் கரீபியன் டி-20 தொடரில் பங்கேற்றார். கிறிஸ் கெயில் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணி சார்பாக விளையாடினார். அந்தத் தொடரில் ஸ்டெயின் அருமையாக பந்துவீசியதால் ஜமைக்கா அணி வெற்றி மேல் வெற்றி குவித்தது. இதையடுத்து  தென்னாபிரிக்கா - நியூசிலாந்து இடையேயான  டெஸ்ட் தொடரில் மீண்டும் ஸ்டெயின் சேர்க்கப்பட்டார். 

முதல் டெஸ்ட் போட்டி  மழையால் டிரா ஆனது. அந்த போட்டியில் வீசிய ஆறு ஓவர்களில் வெறும் மூன்று  ரன் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டாவது  டெஸ்ட் போட்டி  செஞ்சுரியன் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார் ஸ்டெயின். இரண்டாவது இன்னிங்ஸை  பொறுத்தவரையில் ஸ்டெயின் வீசிய இன்ஸ்விங்குகள்  அபாரம். பழைய ஸ்டெயின் அப்படியே வெளிப்பட்டார். ஸ்டெயினின் தெறி பவுலிங்கில்  ஏழு ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து. அதன் பின்னர் 195   ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  204 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது தென்னாபிரிக்கா.  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடர் தோல்விகளுக்கு பிறகு 1-0 என நியூசிலாந்து அணிக்கு எதிராக  டெஸ்ட் தொடரை வென்றுள்ளது தென்னாபிரிக்கா. இதையடுத்தது டெஸ்ட் தரவரிசையில் ஏழாம் இடத்தில் இருந்து ஐந்தாம்  இடத்துக்கு முன்னேறியுள்ளது  தென்னாபிரிக்கா அணி. 

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக பத்து விக்கெட்டுகள் அள்ளியதால் தரவரிசையில் சரசரவென முன்னேறி நான்காம் இடத்தில் இருந்து முதல் இடத்தை பிடித்தார் டேல் ஸ்டெயின். காயம் காரணமாக சில மாதங்கள் பின்னடைவை சந்தித்திருந்தவர் மீண்டும் முதல் இடத்துக்கு வந்துள்ளது அந்நாட்டு  ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.  டெஸ்ட் தரவரிசை வரலாற்றில் மிக அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்துள்ளது ஸ்டெயின் மட்டும் தான். சுமார் 263 வாரங்கள் முதலிடத்தில் இருந்துள்ளார் இந்த வேகப்பந்து ராஜா. இவரையடுத்தது முத்தையா முரளிதரன் மட்டுமே 214 வாரங்கள் முதலிடத்தில் இருந்துள்ளார். 


எது எப்படியோ, எங்க ஸ்டெயின் மீண்டும் பழைய மாதிரி திரும்பிவந்துட்டார். இனி  எதிரணியில் அத்தனை ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் பாடு திண்டாட்டம் தான் என ஸ்டெயின் புகழ் பாடுகின்றனர் அவரது ரசிகர்கள். 

- பு.விவேக் ஆனந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்