Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'2015 உலகக்கோப்பை அரையிறுதியில் நடந்தது என்ன?' சுயசரிதையில் டி வில்லியர்ஸின் ஃப்ரீ ஹிட்

ஒருமுறை இயக்குநர் சிகரம் பாலசந்தர், ரஜினியிடம் சுயசரிதை எழுதும் எண்ணம் உண்டா என கேட்டார். அதற்கு ரஜினி ‘நான் மகாத்மா காந்தி சுயசரிதை படிச்சிருக்கேன். சுயசரிதைன்னா உண்மை இருக்கனும். உண்மையை எழுதுனா பல பேரோட பகையை சம்பாதிக்க வேண்டி இருக்கும். ஸோ.. இப்போதைக்கு அந்த ஐடியா இல்லை’ என பதிலளித்திருப்பார். ரஜினி சொல்வது போல, சுயசரிதை என்பது சுயதம்பட்டமாக இல்லாமல், உண்மையை உள்ளபடி எடுத்துரைக்கும்படி இருக்க வேண்டும். இல்லையேல் பெரிதாகப் பேசப்படாது. 

எம்ஜிஆரின் ‘நான் ஏன் பிறந்தேன்’, கருணாநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’, கண்ணதாசனின் ‘வனவாசம்’ இந்த மூன்று சுயசரிதையில் எது பெஸ்ட் என்ற வாசகர் கேள்விக்கு, ‘வனவாசம்’ ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருந்தது. காரணம் அதில் உண்மை இருந்தது. எல்லாவற்றையும் எழுதி இருப்பார். எல்லாவற்றையும் என்றால்? கருணாநிதியுடன் இருந்த நட்பு, பின் பகை, எம்ஜிஆருடன் இருந்த மோதல், ரத்னா கஃபேயில் ஆறு தோசகைள் சாப்பிட்டது, விலைமாது என எல்லாம் இருந்தது அதில். 

சுயசரிதைக்கான விளக்கம் போதும். விஷயத்துக்கு வான்னு சொல்றது கேட்குது. தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஆப்ரஹாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ், அதாங்க நம்ம ஏபிடி இன்னிக்கு சுயசரிதை ரிலீஸ் பண்ணி இருக்கார். 'ஏபி: ஆட்டோபயோகிராபி’ என்பது சுயசரிதையின் பெயர். தென் ஆப்ரிக்காவில் இன்று வெளியான அந்த புத்தகம் இந்தியாவில் செப்டம்பர் 8-ல் விற்பனைக்கு வரும். 

டி வில்லியர்ஸுக்கு ஸ்லெட்ஜிங் (வெறுப்பேற்றுவது) செய்யப் பிடிக்காது, சக வீரரை திட்டத் தெரியாது. எதிரணியினருடன் மல்லுக்கு நிற்கத் தெரியாது. அப்படிப்பட்டவர் சுயசரிதையில் மட்டும் மற்றவர் புண்படும்படி எழுதி விடுவாரா என்ன? ‘பிளேயிங் இட் மை வே’ சுயசரிதையில் எப்படி சச்சின் நமக்குத் தெரிந்த விஷயத்தையே எழுதி இருப்பாரோ அதேபோலத்தான், டி வில்லியர்ஸ் சுயசரிதையும் இருக்கும் போல.

இருந்தாலும், தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் இருக்கும் ‘கோட்டா’ முறை பற்றி லேசாக அதிருப்தியைப் பதிவு செய்திருக்கிறார். “2015 உலகக்கோப்பை காலிறுதியில் இலங்கையை வென்றோம். கிட்டத்தட்ட அரையிறுதியில் அதே அணியுடன்தான் களமிறங்குவோம் என நினைத்தோம். அரையிறுதிக்கு முந்தைய நாள் இரவு, அணி கூட்டத்தில் பங்கேற்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன், ‘வெர்னன் பிலாண்டர் ஃபிட்டாக இருக்கிறார். நாளை நடக்கும் அரையிறுதியில் ‘கைல் அபோட்’டுக்குப் பதிலாக பிலாண்டரை களமிறக்க வேண்டும்’ என ஒருவர் எனக்கு ஃபோன் செய்தார்” என, டி வில்லியர்ஸ் தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். ஃபோன் செய்தவர் யார் என சொல்லவில்லை.

அணியில் மாற்றம் செய்வதற்கான அவசியம் என்ன என இரவு முழுவதும் குழம்பிய ஏபிடி, மறுநாள் காலையில் ‘ஓகே. பிலாண்டரை வைத்து விளையாடலாம்’ என திருப்தி அடைந்தார். அந்தப் போட்டியில் தென் ஆப்ரிக்கா தோல்வி. அந்த உலக கோப்பையிலேயே அதுதான் பெஸ்ட் மேட்ச். மீண்டும் ஒருமுறை ‘சோக்கர்ஸ்’ பட்டம் தென் ஆப்ரிக்காவை தொற்றிக்கொண்டதை நினைத்து பிட்ச்சிலேயே படுத்து அழுதார் ஸ்டெயின். ஈரமான ஏபிடியின் கண்களை க்ளோஸ் அப்பில் பார்த்தபோது, இந்திய ரசிகர்களுக்கும் என்னவோ போல் இருந்தது. இந்த தருணத்தை ‘என் கிரிக்கெட் வாழ்வின் மோசமான தருணம்’ என சுயசரிதையில் ‘தி ட்ரீம்’ என்ற தலைப்பில் விலாவரியாக விவரித்துள்ளார் ஏபிடி.

இப்போதும் கூட, அணித் தேர்வில் நடந்த அரசியல் குறித்து வசைபாடவில்லை. ‘மூன்று ரன் அவுட், இரண்டு கேட்ச் வாய்ப்பை மிஸ் செய்தோம். அதனால்தான் தோற்றோம். அபோட்டுக்குப் பதிலாக பிலாண்டரை அணியில் சேர்த்ததால் அல்ல’ என, விளக்கம் அளித்துள்ளார். அதேநேரத்தில், அணித் தேர்வில், களமிறங்கும் அணியில் இடம்பெறும் ‘கோட்டா’ முறையை நாசூக்காக விமர்சித்துள்ளார்.

இந்த விமர்சனத்தைப் புரிந்து கொள்ளும் முன், தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் இருக்கும் கோட்டா முறையை அறிவது அவசியம். இனவெறி பிரச்னைக்குப் பின், 1992 உலக கோப்பையில்தான் முதல்முறையாக தென் ஆப்ரிக்கா பங்கேற்றது. அப்போது முதல் இப்போது வரை, கருப்பு இனத்தைச் சேர்ந்த வீரர்கள் குறிப்பிட்ட அளவில் அணியில் இடம்பெற வேண்டும் என்பது தென் ஆப்ரிக்க சட்டம். கிரிக்கெட்டைப் பொருத்தவரை அந்த எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை என்பதே பிரச்னை.

‘காலாவதியான இந்த இனவெறி நடைமுறையால், அணித் தேர்வு எனக்கு மன அழுத்தத்தை தந்தது. என்ன நடந்தது என புரியவில்லை. அரையிறுதியில் நான்கு கருப்பின வீரர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக பிலாண்டர் சேர்க்கப்பட்டாரா இல்லை கிரிக்கெட் வியூகங்களுக்காக சேர்க்கப்பட்டாரா என தெரியவில்லை. இந்த கோட்டா முறை குறித்து விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்படுவதற்கு அந்த நடைமுறை தடையாக இருக்க கூடாது’ என, எழுதியுள்ளார்.

தவிர, ஹாக்கி, ரக்பி, தடகளம், நீச்சல் என டீன் ஏஜில் எல்லா ஏரியாவிலும் கல்லா கட்டிய ரகளையான சம்பவங்களும் சுயசரிதையில் இடம்பெற்றுள்ளன. கூடவே, ‘ஐசிசி நடத்தும் உலக கோப்பையை தென் ஆப்ரிக்கா வெல்ல வேண்டும். அதில் நானும் ஒருவனாக இருக்க வேண்டும்’ என ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி உள்ளார். ஆக, 2019 உலக கோப்பையில் டி வில்லியர்ஸ் பங்கேற்பது உறுதி.

-தா. ரமேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement