Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கைகலப்பு, வார்த்தைப் போர், ஆக்ரோஷ அஸ்வின் ... சூடுபிடிக்குது #TNPL

கைகலப்பு, வார்த்தைப் போர், ஸ்லெட்ஜிங் இல்லாத கிரிக்கெட்டில் என்ன சுவாரஸ்யம் இருந்து விடப் போகிறது? அந்த வரிசையில் பார்த்தால், தமிழ்நாடு பிரிமியர் லீக் #TNPL தொடர் இப்போதுதான் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. 

திண்டுக்கல் & சேப்பாக்கம் அணிகள் மோதிய போட்டி நத்தம் மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த சேப்பாக்கம் அணிக்கு ஓபனிங் பேட்ஸ்மேன்களான கோபிநாத் (76), தலைவன் சற்குணம் (72) அமர்க்கள தொடக்கம் கொடுக்க, அந்த அணி 20 ஓவரில் 172/6 ரன்கள் எடுத்தது.

இந்த இலக்கை விரட்டிய திண்டுக்கல் அணிக்கு தொடக்க வீரர் ஜெகதீசன் (60) அபாரமாக ஆடினார். அவருடன், சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஒத்துழைப்பு கொடுக்க, ரன் ரேட் சீராக இருந்தது.

லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர் சாய் கிஷோர் வீசிய 16வது ஓவரில் ஒரு திருப்புமுனை. 5.2 ஓவர்களில் 72 ரன்கள் தேவை என்பதால், ஜெகதீசன் சிக்ஸர் அடிக்க முயன்றார். ஆனால், அது தேர்ட் மேன் திசையில் இருந்த ஆன்டனி தாஸ் கையில் தஞ்சம் புகுந்தது. முக்கியமான விக்கெட்டை எடுத்த மகிழ்ச்சியில் சாய் கிஷோர் ஆர்ப்பரித்தார்.

பெவிலியன் திரும்பும் முன் ஜெகதீசன், அஸ்வினிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென சாய் கிஷோரும், ஜெகதீசனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வார்த்தைப் போர் வெடித்தது. ஒரு கட்டத்தில் சாய் கிஷோர், ஜெகதீசன் இருவரும் ஒருவரையொருவர் மார்பில் கை வைத்து தள்ளி விட்டனர். அருகில் இருந்த அஸ்வின், ஜெகதீசனை ஓய்வு அறைக்குச் செல்லுமாறு சொல்லி விட்டு, சாய் கிஷோரை எச்சரித்தார். பரபரப்பானது களம். 

அதற்குள் நடுவர்கள், இரு அணி கேப்டன்கள், சக வீரர்கள் தலையிட்டு, அஸ்வினை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த தொடரை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலும், மீண்டும் மீண்டும் இந்த காட்சியை ஒளிபரப்பி, போட்டிக்கு ‘மசாலா’ சேர்த்தது.

போட்டி முடிந்ததும், ‘ஸ்போர்ட்ஸ்ல இதெல்லாம் சகஜமப்பா’ என்ற ரீதியில் அஸ்வின் பேட்டி கொடுத்தார். ‘‘அணியில் இருப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள். ஆட்டத்தின் நெருக்கடியான தருணத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது சகஜம். ஜெகதீசன் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்பதில் சாய் கிஷோரும் வெறியாக இருந்தார். அந்த விக்கெட்டை எடுத்து விட்டதால், அவர் அப்படி நடந்து கொண்டார். இரு அணி கேப்டன்களும் உடனடியாக தலையிட்டு பிரச்னையை முடித்து வைத்தது நல்ல விஷயம். இருந்தாலும், அந்த வீரர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டியது அவசியம்’’ என்றார் அஸ்வின். 

அஸ்வின் அதிரடி:

சேப்பாக் அணிக்கு எதிராக அஸ்வின் பிரமாதமாக ஆடினார். முதலில் நிதானமாக ஆடிய அஸ்வின், சரியான நேரத்தில் விஸ்வரூபம் எடுத்தார். குறிப்பாக, ஜெகதீசன் அவுட்டானது, அந்த வார்த்தைப் போர் இதுவெல்லாம் அவரை ரொம்பவே சூடேற்றியது. ஆன்டனி தாஸ் வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரி 1 சிக்ஸர் பறக்கவிட்ட அஸ்வின், 18வது ஓவரை வீசிய சாய் கிஷோரின் பந்தில் அட்டகாசமாக ஒரு சிக்ஸர் அடித்தார். அதே சூட்டில் யோ மகேஷ், தமிழ் குமரன் ஓவரையும் விட்டுவைக்காது வெளுத்து வாங்கினார்.

ஆனால், துரதிருஷ்டவசமாக தமிழ்குமரன் வீசிய 19.5வது ஓவரில் அஸ்வின் அவுட்டாக, திண்டுக்கல் அணி தோல்வியைத் தழுவியது. ஆனாலும், 23 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 49 ரன்கள் விளாசியது, திண்டுக்கல் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும். 

பொறுப்புடன் ஆடியது குறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘நன்றாக ஆடிக் கொண்டிருந்த நான், கடைசி வரை களத்தில் நின்று வெற்றியுடன் முடித்திருக்க வேண்டும். இருந்தாலும், எங்கள் வீரர்கள் 100 சதவீத திறமையை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி’’ என்றார்.

-தா.ரமேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close