'நம்பர் 1'-களை நாக்-அவுட் செய்யும் 'வாவ்'ரிங்கா ரகசியம்!

 

டென்னிஸ் உலகின் பிதாமகன் ரோஜர் ஃபெடரர் கடைசியாக கிராண்ட் ஸ்லாம் வென்றது 2012ல். ‘ஃபெடரர் ஆட்டம் முன்ன மாதிரி இல்லை. சிவனேன்னு ரிட்டையர்டு ஆயிடுறது நல்லது’ என ஒவ்வொரு முறை அவர் தோற்கும்போதெல்லாம் விமர்சனங்கள் எழும்.

முப்பது வயதைக் கடந்த எந்த வீரனையும் விளையாட்டு உலகம் பரிதாபக் கண்ணோடுதான் நோக்கும். முந்தைய சாதனைகளின் மிதப்பில் காலம் கழிப்பதை விட, மரியாதையோடு ஓய்வு பெறுபவர்கள் ஒரு சிலரே. ‘இன்னும் என்னிடம் ஏராளமான டென்னிஸ் மிச்சமிருக்கிறது’ என ஃபெடரர் சொன்னாலும், பாழாய்ப்போன மனசு ஃபெடரரின் பழைய ஆட்டத்துக்கே ஏங்குகிறது. வயது ஒருபுறம், காயம் மறுபுறம் வதைக்கிறது அவரை. 

ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ஃபெடரர் தன் டென்னிஸ் வாழ்வின் அந்திமக் காலத்தில் இருக்கும் அதேவேளையில்தான், அங்கிருந்து புறப்பட்ட இன்னொரு வித்தான ஸ்டான் வாவ்ரிங்காவின் ‘கிராப்’ செமயாக எகிறிக் கிடக்கிறது. 2014ல் ஆஸ்திரேலிய ஓபன், 2015ல் பிரெஞ்ச் ஓபன், 2016ல் அமெரிக்க ஓபன் என ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கிராண்ட் ஸ்லாம் அடுக்கி வருகிறார்.

மெல்போர்னில் 2014ல் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில், அப்போது நம்பர்&1 வீரராக இருந்த ஸ்பெயினின் ரஃபேல் நடாலை வீழ்த்தி, முதல் முறையாக கிராணட் ஸ்லாம் வென்றபோது வாவ்ரிங்காவின் வயது 29. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2015ல் நடந்த, பிரெஞ்ச் ஓபன் ஃபைனலில், அப்போது நம்பர் &1 வீரராக இருந்த செர்பியாவின் ஜோகோவிச்சை தோற்கடித்து, களிமண் தரையிலும் கால் பதித்தபோது வாவ்ரிங்காவின் வயது 30.

இப்போது நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் இறுதிச் சுற்றில் மீண்டும் ஜோகோவிச்சை விழி பிதுங்க வைத்து யு.எஸ்.ஓபனை முதல் முறையாக முத்தமிட்டபோது வாவ்ரிங்காவின் வயது 31. நான்கு மணி நேரம் திணறத் திணற போராடி 6&7(1), 6&4, 7&5, 6&3 என்ற செட் கணக்கில் உலகின் நம்பர்&1 வீரரை வீழ்த்தியபோது, கிராண்ட் ஸ்லாம் மட்டும் வாவ்ரிங்கா வசமாகவில்லை, 46 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க ஓபனை வென்ற வயதான வீரர் என்ற பெருமையும் கிடைத்தது. இதற்கு முன், 1970ல் கென் ரோஸ்வெல் தன் 35வது வயதிலும், 2002ல் பீட் சாம்ப்ராஸ் தன் 30 வயதிலும் அமெரிக்க ஓபன் வென்றதே முந்தைய சாதனையாக இருந்தது.

வாவ்ரிங்கா இதுவரை மூன்றுமுறைதான் கிராண்ட் ஸ்லாம் ஃபைனலுக்கு முன்னேறி இருக்கிறார். மூன்றும் வெற்றி. அவர் தோற்கடித்த மூன்று பேருமே நம்பர்1 வீரர்கள். நேற்று நடந்த அமெரிக்க ஓபன் ஃபைனலில், 29 வயதாகும் ஜோகோவிச், நான்காவது செட்டில் இரண்டு முறை ‘மெடிக்கல்’ உதவியை நாடினார். இதற்காக நடுவர் அவரை எச்சரிக்கவும் செய்தார். ஆனால், மறுமுனையில் இருந்த 31 வயது வாவ்ரிங்கா ‘ஏஸ்’ சர்வ், பேக்ஹேண்ட் ஷாட் என படு கூலாக பின்னிப் பெடலெடுத்தார்.

தற்போதைய டென்னிஸ் உலகில் ஃபெடரர், ஜோகோவிச், நடால், முர்ரே ஆகிய டாப்&4 வீரர்களை கிராண்ட் ஸ்லாம் ஃபைனலில் வீழ்த்தும் திறமை வாவ்ரிங்காவுக்கு மட்டுமே உள்ளது. இந்த நான்கு பேருக்கும் சிம்ம சொப்பனமாக திகழும் வாவ்ரிங்காவிடம் இன்னும் ஏராளமான டென்னிஸ் மிச்சமிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வீரருக்கும் கரியர் முடியும் காலத்தில் ஆட்டம் கொஞ்சம் சொதப்பும். வாவ்ரிங்கா அதற்கு விதிவிலக்கு. 


சென்னை ராசி:


இன்று காலை வாட்ஸ் அப்பில் அறிமுகமில்லாத நம்பரில் இருந்து ஒரு தகவல். ‘2014ல் சென்னை ஓபனில் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார். அந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் அவருக்கு கிராண்ட் ஸ்லாம் கிடைத்தது. 2015ல் இங்கு பட்டம் வென்றார். அந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் அவர் சாம்பியன். 2016 சென்னை ஓபனில் வென்று ஹாட்ரிக் நாயகன் என பெயரெடுத்தார். இப்போது அவர் அமெரிக்க ஓபன் நாயகன்’ என நீண்டது அந்த தகவல். உண்மை அது.

இந்தமுறை சென்னை ஓபன் முடிந்ததும் வாவ்ரிங்காவிடம், மேற்சொன்ன தகவலைச் சொல்லி, ‘உங்கள் அடுத்த இலக்கு விம்பிள்டனா?’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு வாவ்ரிங்கா, ‘நான் அதை மனதில் வைத்து செயல்படவில்லை’ என்றார். அவர் அப்படி நினைக்கவில்லை என்றாலும், சென்னை ராசி அவருக்கு கைகொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. அடுத்தமுறை அவருக்கு விம்பிள்டன் வசமாகட்டும்.

தா.ரமேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!