''நான் மாரியப்பன் தங்கவேலு அல்ல.. மாரியப்பன் மட்டுமே!' - மனம் வெதும்பும் தங்கமகன்

'' இந்த உலகத்திலேயே இப்போதைக்கு  நான்தான் சந்தோஷமான மனிதன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ரியோவில் ஒவ்வொரு இரவிலும் நான் தூக்கம் வராமல் தவிக்கிறேன். இங்கிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் பயத்துடன்தான் இருக்கிறேன். எனது தாயாருக்கு போன் செய்யும் போதெல்லாம் அவர் அழுகிறார்.  மிகுந்த பயத்துடன் எனது தாயார் இருக்கிறார். எனது வெற்றிக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாதவர்கள் இப்போது என்னைத் தேடி வருகின்றனர் '' என்கிறார் பாராலிம்பிக் நிறைவுவிழா அணி வகுப்பில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிச் செல்லப் போகும் மாரியப்பன்.

ரியோ பராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து, தமிழக அரசு ரூ.2 கோடியும், மத்திய அரசு ரூ. 75 லட்சமும் பரிசாக அறிவித்தள்ளன. இந்த நிலையில், மாரியப்பன் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில், ரூ. 30 லட்சத்தை தான் படித்த பள்ளிக்கு நன்கொடை வழங்கியதாகவும் வதந்தி பரவியது. சேலம் பெரியவடகம்பட்டியைச் அரசு பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன் கூறியதாக இந்த தகவல் வெளியானது. ஆனால்,' அந்த தகவல் உண்மையில்லை. தான் அவ்வாறு கூறவில்லை ' என  ராஜேந்திரன் மறுத்துள்ளார்.

இதற்கிடையே சேலம் பகுதியைச் சேர்ந்த சில வங்கிகள் மாரியப்பன் குடும்பத்தார், உறவினர்களை அணுகி பரிசுப் பணத்தை தங்கள் வங்கியில் முதலீடு செய்யுமாறு வற்புறுத்தி வருகின்றன. தங்கள் வங்கியில் டெபாசிட் செய்தால் கார் பரிசளிக்கவும் சில வங்கிகள் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவெல்லாம் மாரியப்பனின் தாயார் சரோஜாவை வெகுவாக பாதித்துள்ளது.

கணவர் கைவிட்டு விட்ட நிலையில்,  சரோஜா காய்கறி வியாபாரம் செய்து மாரியப்பன் உள்பட நான்கு குழந்தைகளை காப்பாற்றியிருக்கிறார். இந்த நிலையில் மாரியப்பன் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தனது ஆதங்கங்களை கொட்டியுள்ளார். பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,  '' ஒவ்வொரு நிமிடமும் நான் பயத்திலேயே இருக்கிறேன். எனது வெற்றியை அடுத்து அதற்கு கொஞ்சம் கூட  சம்பந்தமில்லாதவர்கள் என்னைத் தேடி வருகிறார்கள்.  எனது வெற்றிக்கு முழு முதல் காரணம் எனது பயிற்சியாளர் சத்ய நாராயாணா சார்தான். இரண்டு வருடங்களுக்கு முன் சத்யாநாராயணா சாரை நான் சந்தித்தேன். அன்று முதல், அவர்தான் எனக்கு பயிற்சி அளித்து வருகிறார். சத்யநாரணா சாரை சந்தித்த பிறகுதான் காலணி  அணிந்து பயிற்சி பெற ஆரம்பித்தேன். அதுவரைக்கும் வெறுங்காலில்தான் நான் உயரம் தாண்டுவேன்.

அது மட்டுமல்ல... மாதம் எனக்கு ரூ. 10 ஆயிரம் அளித்து எனது குடும்பத்துக்கும் அவர்தான் உதவியாக இருந்தார். பயிற்சி அளிக்கவே பணம் வாங்கும் இந்த காலத்தில் பணம் கொடுத்து யார் பயிற்சி அளிப்பார்கள். ஆனால், சத்திய நாராயாணா சார் எனக்குச் செய்தார். என்னை ஜெர்மனிக்கு அனுப்பி பயிற்சி பெற வைத்தார். எனக்காக அவர் எவ்வளவோ கஷ்டப்பட்டுள்ளார். சத்யநாராயணா சார் தந்த பயிற்சியிலும் உதவியினாலும்தான் இன்று நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். இப்போது நான் வெற்றி பெற்ற பிறகு ராஜேந்திரன், இளம்பரிதி போன்றவர்கள் உரிமை கொண்டாடுவதாக எனக்குத் தகவல் வருகிறது.  அவர்களுக்கும் இந்த வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழ்நாடு பராலிம்பிக் சங்கம்  எனக்காகத் துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை. இந்த வெற்றிக்கு முழு முதற் காரணம் எனது குரு சத்ய நாராயாண சார்தான். இந்த பதக்கத்தை நான் அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.

எனது உறவினர்கள் என்னையும் எனது தாயாரையும் மதித்ததில்லை. ஆனால் இப்போது எனது தாயாரை நெருக்கிக் கொண்டிருப்பதாக என்னிடம் அவர் போனில் கூறி அழுகிறார். அதனால் ரியோவில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நான் நிம்மதியி ல்லாமல் தவிக்கிறேன். எனது தாயை எப்போது பார்க்கப் போகிறேன் என்று இருக்கிறது. சில விஷயங்களைக் கூறி என்னிடம் தாயார் அழும் போது ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கிறேன். எங்களை பரிதவிக்க விட்டு சென்ற தந்தை தங்கவேலு இப்போது குடும்பத்தினரிடம் உரிமை கோருவதாக எனது தாயார் சொல்கிறார். எனது தாயை கருணையே இல்லாமல் துன்புறுத்தியவர் அவர். எந்த காரணத்தைக் கொண்டும் அவரை நான் பார்க்க விரும்பவில்லை. ஒரு முறை என்னை உயிரோடு எரித்து கொல்ல முயற்சித்தார். எனது தாயையும் அவரது நான்கு குழந்தைகளையும் தவிக்க விட்டு சென்றவருக்கு எனது மனதில் என்றுமே இடம் கிடையாது. நான் மாரியப்பன் தங்கவேலு என்று அழைப்பதைக் கூட விரும்பவில்லை. நான் வெறும் மாரியப்பன் அவ்வளவுதான்...! என்கிறார்.

ஒரு பதக்கத்திற்கு மறைவில் எத்தனை துயரம் புதைந்து கிடக்கிறது!

                                                                                                                                                                                                                           -எம். குமரேசன்

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!