வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (16/09/2016)

கடைசி தொடர்பு:13:21 (19/09/2016)

''முடியாதா...அகராதியிலேயே கிடையாது''!- ஆச்சரியப்பட வைக்கும் ஆர்ம்லெஸ் ஆர்ச்சர்

மத் ஸ்டட்ஸ்மேனுக்கு பிறக்கும் போதே இரு கைகளும் கிடையாது. தோள்பட்டைக்கு பிறகு ஒன்றும் இல்லை.ஆனால்,  கையில்லாத ஸ்டட்ஸ்மேனின் அகராதியில் 'முடியாது ' என்ற வார்த்தைக்கு  மட்டும் இடம் கிடையாது. காரை காலால் ஓட்டி வித்தைக் காட்டுவார். தலையால் கூடைப்பந்து விளையாடுவார். காலால் தோள்பட்டையால் வாயால் கூட எழுதுவார். கையால் தாடியை ஷேவ் பண்ணும் போதே நமக்கு நாலு இடத்தில் வெட்டு விழுகிறது. ஆனால், ஸ்டட்ஸ்மேன், காலால் ஐந்தே நிமிடத்தில் ஷேவிங்கை முடித்துவிட்டு போய்கிட்டே இருப்பார்.ஒரு வாசல் அடைக்கப்பட்டால் இன்னொரு வாசல் திறக்கும்... ஆனால், அந்த வாசலை நாம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை எனச் சொல்வார்கள். கைகள் இல்லை என்று ஸ்டட்ஸ்மேன் சோர்ந்து விடவில்லை. கால்களைத் திரும்பிப் பார்த்தார். கைகள் போல கால்களைப் பயன்படுத்தினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயதான மத் ஸ்டட்ஸ்மேனின் சாதனைகளில் இதுவெல்லாம் ஒரு சாம்பிளுக்குத்தான். இதையெல்லாம் தாண்டி அவர் மிகச்சிறந்த வில் வித்தை வீரர். கை இல்லாதவர் எப்படி வில்வித்தை வீரர் ஆக முடியும் என்றெல்லாம் ஸடட்ஸ்மேன் விஷயத்தில்  யோசிக்க வேண்டாம். இவரது அகராதியில்தான் 'முடியாது' என்ற வார்த்தைதான் கிடையாதே. உலகிலேயே அதிக தொலைவு உள்ள இலக்கை மிக துல்லியமாக குறி வைத்து அம்பை எய்தவர் என்ற சாதனைக்கும் இவர் சொந்தக்காரர்.கையுள்ள வீரர்களால் கூட ஸ்டட்ஸ்மேனின் இந்த சாதனையை இன்று வரை முறியடிக்க முடியவில்லை. 

வலது காலால் வில்லைப் பிடித்து கழுத்தை சாய்த்து நாணை இழுத்து நாடியால் அவர் அம்பு எய்யும் அழகை பார்க்கவே கோடிக் கண்கள் வேண்டும். சாதாரண வில்வித்தை வீரர்களால் கூட அத்தனை துல்லியமாக இலக்கை நோக்கி அம்பை செலுத்த முடியாது. அத்தனைத் துல்லியம் ஸ்டட்ஸ்மேனிடம் இருக்கும். இத்தனைக்கும் கடந்த 2009ம் ஆண்டு வரை  நம்ம ஸ்டட்ஸ்மேனுக்கு வில்வித்தை என்றால் என்னவென்றுத் தெரியாது. வேலை வெட்டியில்லாமல் சும்மாதான் சுற்றித்திரிந்தார். இவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உண்டு. மனைவிதான் வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்றி வந்திருக்கிறார்.

 

 

 

''ஒரு நேரத்தில் வேலையில்லாமல் வீட்டில் முடங்கி கிடந்தேன். இப்போது நிற்க கூட நேரமில்லை. வேலைக்கு போய்க் கொண்டிருந்த எனது மனைவி ஹவுஸ்வொய்ஃப் ஆகி குழந்தைகளை பார்த்துக் கொள்கிறார்;; எனக் கூறும் ஸ்டேட்ஸ்மேனுக்கு கார்ட்டர், கேமரான், அலெக்ஸ் என மூன்றுக் குழந்தைகள். ''நான் ஒன்றும் லெப்ரான் ஜேம்ஸ் அளவுக்கு 'ரிச்' கிடையாது. ஆனாலும் வசதியாக வாழும் அளவுக்கு சம்பாதிக்கிறேன்'' என்கிறார் ஸ்டேட்ஸ்மேன்.

லண்டன் பாராலிம்பிக் போல, ரியோ பாராலிம்பிக் ஸ்டட்ஸ்மேனுக்கு இனிப்பாக அமையவில்லை. காலிறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவினார். ''  பதக்கம் வெல்வதற்காக மட்டும் வில்வித்தையில் நான் பங்கேற்கவில்லை. பதக்கம் வென்றிருந்தால் கூடுதல் மகிழ்ச்சி அவ்வளவுதான். என்னைப் பார்த்து மற்றவர்களும் முயல வேண்டும். முடங்கிவிடக்  கூடாது என்பதுதான் எனது நோக்கம்'' தோல்வியின் தாக்கம் இல்லாமல் அதே உற்சாகத்துடன் கூறுகிறார் ஸ்டட்ஸ்மேன்.

ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த ஸ்டட்ஸ்மேனை 13 மாதக் குழந்தையாக இருக்கும் போது லியோன்- ஜீன் தம்பதியர் தத்தெடுத்து வளர்த்துள்ளனர். தனது வளர்ப்பு பெற்றோர் பற்றி கூறுகையில் ஸ்டட்ஸ்மேனுக்கு கண்களில் நீர் தளும்புகிறது. '' என்னைப் போன்ற ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க யார் விரும்புவார். ஆனால், எனது பெற்றோர் என்னை வளர்த்து ஆளாக்கினர். அவர்கள் என்னிடம் சொன்ன ஒரே வார்த்தை, 'முயற்சிக்காமல் எந்த உதவியையும் எங்களிடம் கேட்கக் கூடாது' என்பதுதான். எனது தந்தை என்னை ஆகாயத்தில் பந்து போல போட்டு பிடிப்பார். அப்போது, 'உன்னை நாங்கள் தத்தெடுத்தது மாதிரி இந்த உலகத்தை தத்தெடுப்பது எப்படி என நீ யோசிக்க வேண்டும்' என்பார். அதுதான் எனக்கு மந்திரச் சொல்.

ஆனாலும் 25 வயதில்தான் எனக்கு ஒரு வழி தெரிந்தது.  வில்வித்தை வீரரான பிறகு, புதியதாக ஒரு வில் வாங்க ஒரு கடைக்குச் சென்றேன். வில் வேண்டுமென்ற போது, அந்த கடைக்காரர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். சிரித்தே விட்டார். பின்னர், 'எப்படி எய்வீங்க' என்றார்.நான் ' எனக்குத் தெரியாது' என்றேன். வில்லை கொடுத்து விட்டு, ஒரு வித நமட்டுச்சிரிப்புடன் நகர்ந்தார். இப்போது, நான் அம்பு எய்வதே பார்க்கவே ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடுகிறது. இந்த உலகம் அலட்சியம் நிறைந்த மனிதர்களால் நிரம்பியது. அவர்களை எளிதாக கடந்தால் நாம் சம்திங் டிஃபரன்ட்தான்'' என்கிறார் வெற்றிச் சிரிப்புடன்!

-எம்.குமரேசன்

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்