வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (17/09/2016)

கடைசி தொடர்பு:08:14 (26/09/2016)

இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி எங்கு கிடைத்தது தெரியுமா?? #500testsofIndia

வரும் 22 ஆம் தேதி கான்பூரில் நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டி விளையாடுகிறது இந்திய அணி. இது இந்தியாவின் 500வது டெஸ்ட் போட்டி.  1932 ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில்  பங்கேற்க  ஆரம்பித்தது  இந்தியா.  84 வருட டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?  படங்கள், தகவலுடன் ஒரு  பிளாஷ்பேக் இங்கே ...

1.  முதல் டெஸ்ட் :-

1932 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகத்தான் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆடியது இந்திய அணி. முதல் டெஸ்ட் நடந்தது இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில். ஆம். அங்கிருந்து தான் இந்திய அணி தனது பயணத்தை துவக்கியது.  இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. ஜூன் மாதம் 25,27,28 ஆகிய தேதிகளில் மூன்று நாள் டெஸ்ட் போட்டியாக நடந்தது. நடுவுல எங்கப்பா 26 ஆம் தேதியை காணோம் என தேடுகிறீர்களா? அப்போதெல்லாம் மேட்ச் ஆரம்பித்து இரண்டாவது நாள் டெஸ்ட்  ஆடும் வீரர்களுக்கு லீவு உண்டு.

 ஜூன் 26 ஆம் தேதி ஞாயிற்று கிழமை வேறு என்பதால் லீவு விட்டு விட்டார்கள். சரி மேட்ச் என்னாச்சு? இந்தியா 158 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த மேட்சில்  இன்னொரு சுவாரஸ்யமும் உண்டு. இந்தியா தான் விளையாடிய இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒரு பவுண்டரி கூட அடிக்க வில்லை. ஆனால் ஒரே ஒரு சிக்ஸர்  அடித்திருந்தது. 

 

 

 

2. தொடர் தோல்விகள்:-

1932-1946  ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து அணியுடன் மட்டும்தான் இந்தியா டெஸ்ட் போட்டி விளையாடிக் கொண்டிருந்தது. இந்த 14 ஆண்டு கால இடைவெளியில் வெறும் பத்து போட்டிகளில் தான் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. ஒன்றில் கூட இந்தியா வெற்றி பெற வில்லை. 1947-48 சீஸனில் முதன் முறையாக இந்தியாவும்  ஆஸ்திரேலியாவும் மோதின. இந்திய அணி ஆஸ்திரேலிய  நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட அந்த தொடரில் இந்தியா நான்கில் தோற்று தொடரை இழந்தது. 1948 - 49 சீஸனில் முதன் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் விளையாட ஆரம்பித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நான்கு டெஸ்ட் டிரா ஆனது. சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் வெல்ல, அந்த தொடரும் இந்தியாவுக்கு அம்பேல். 

3.  முதல் வெற்றி :-

டெஸ்ட் விளையாட  ஆரம்பித்து 20 ஆண்டுகள் கழித்து தான் இந்தியா முதல் வெற்றியை சுவைத்தது. 1952  ஆம் ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக, இந்தியா தனது 25வது டெஸ்ட் போட்டியை ஆடியது.  இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது  இந்தியா. 

இந்தியா சார்பில் பங்கஜ் ராய், பாலி உமரிக்கர் இருவரும் சதம் அடித்தார்கள்.  வினூ மங்கட் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். மேட்ச் எங்கே நடந்தது தெரியமா ? நம்ம சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தான். கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்திய அணியின் முதல் வெற்றி அமைந்தது சென்னையில் என்பது வரலாற்றுச் சிறப்பு. 

4. ரோலர் கோஸ்டர் பயணம் : -

இந்தியா முதல் டெஸ்ட் போட்டியை  வென்றதற்கு பிறகு தான் இந்திய மக்கள் இந்திய அணியை கவனிக்க ஆரம்பித்தார்கள். பத்திரிகைகளில் கிரிக்கெட் போட்டி குறித்த அப்டேட்ஸ்கள் தொடர்ந்து வர ஆரம்பித்தது. 1952 -1956 வரையிலான காலகட்டத்தில் விளையாடிய 20 டெஸ்ட் போட்டிகளில் இரண்டை மட்டும் தோற்றது இந்திய அணி, ஆனால் அதற்கடுத்த மூன்றாண்டுகள் இந்திய கிரிக்கெட்டுக்கு சோதனை காலகட்டமாக இருந்தது. 16 டெஸ்ட் போட்டியில் 12 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. 1959-1961 வரையிலான காலகட்டத்தில்  விளையாடிய 14 டெஸ்ட் போட்டியில் மூன்றில் வெற்றி பெற்றது. ஒன்றில் மட்டுமே தோற்றது. இந்த சீசனில் தொடர்ச்சியாக ஒன்பது போட்டிகளை இந்திய அணி டிரா செய்தது. இன்று வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. 

 

 

 

 

5.  வெஸ்ட் இண்டீஸ் ஆதிக்கம் : -

டெஸ்ட் உலகில் இந்தியாவை வெல்வது கடினம் என்ற சூழ்நிலை மெல்ல மெல்ல உருவாகிக்கொண்டிருந்த வேலையில், புயலென புறப்பட்டது வெஸ்ட் இண்டீஸ். இந்தியா  வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது விளையாடிய ஐந்து  டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவை நையப்புடைத்தது. பிறகு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்து இங்கேயும் இந்தியாவை தோற்கடித்தது. அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ்  ராஜ்ஜியம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. 

 

 

 

 

6.  கவாஸ்கர், கபில் தேவ் வரவு : -

1971 ஆம் ஆண்டு  ஃபோர்ட் ஆஃப் ஸ்பெயினில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் சுனில் கவாஸ்கர். முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து மிரளவைத்தார். இந்தியா அந்த மேட்சை வென்றது. கவாஸ்கரை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மொஹிந்தர் அமர்நாத், கபிலதேவ், ரவி சாஸ்திரி, பி.எஸ்.சந்து, வெங்கர்சர்க்கார்,  கிர்மானி என நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்தார்கள். 1983 உலகக்கோப்பையை இந்தியா வெல்லவே, பட்டி தொட்டியெங்கும் கிரிக்கெட் போய்ச் சேர ஆரம்பித்தது. ஒவ்வொரு டெஸ்ட் போட்டியையும் ரேடியோ வர்ணனை கேட்பதையே பொழுது போக்காக வைத்திருந்தனர் மக்கள். 

7. 'டை' யான  டெஸ்ட் போட்டி :-

சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 18-22 வரை நடந்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 574 ரன்களை குவித்தது. ஆஸி கேப்டன் டீன் ஜோன்ஸ் இரட்டைச் சதமும், ஆலன் பார்டர், டேவிட் பூன்  சதமும் விளாசினர்.  இந்திய அணியில் ஸ்ரீகாந்த், ரவி சாஸ்திரி, முகமது அசாருதீன்  அரை சதம் அடிக்க, கபில்தேவ் அதிரடியாக ஒரு சதம் விளாசினார். கபிலதேவ் புண்ணியத்தால் இந்தியா ஃபாலோ  ஆனை தவிர்த்து மட்டுமில்லாமல் 397  ரன்களையும் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 170   ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கியது  இந்திய அணி. ஆனால் 347 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து வரலாற்றில் முதன் முறையாக  இந்தியா விளையாடிய டெஸ்ட் போட்டி டை ஆனது.

 

 

 

8. உலகை கவனிக்க வைத்த உலக நாயகன் :- 

கிரிக்கெட்டின் உலக நாயகன் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளுக்கும் கிரிக்கெட்டை கொண்டு சேர்ந்ததில் சச்சினின் பங்கு அளவிடமுடியாதது. 1989 ஆம் ஆண்டு கராச்சியில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமானார் சச்சின். 16 வயதில் சிங்கமென புறப்பட்ட சச்சின் டெண்டுல்கரை எந்த பவுலராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

 

 

 

 

இந்திய வீரர்களுக்கு அயல்நாட்டு மண் என்றாலே அலர்ஜி என்றிருந்த காலகட்டத்தில், கிரிக்கெட்டின்  ஆல் டைம் தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் நிரம்பியிருந்த (1990 -2000) காலகட்டத்தில், அத்தனை பந்துவீச்சாளர்களுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கினார். சச்சின் விக்கெட்டை எடுத்தால் தான் இந்தியாவை ஜெயிக்க முடியும் என்ற நிலையை கொண்டு வந்தார். இந்தியா அயல் மண்ணில் மெல்ல மெல்ல தலைநிமிர ஆரம்பித்து வெற்றிகளை குவிக்க ஆரம்பித்தது. 1992 இல் ஆரம்பித்து 1996 ஆம் ஆண்டு வரை சச்சினின் மாயாஜாலத்தால் விளையாடிய  22 டெஸ்ட் போட்டிகளில் இரண்டை மட்டுமே தோற்றது இந்தியா. 12 போட்டிகளை வென்று ஆச்சர்யப்படுத்தியது.

9.  கங்குலி  கேப்டன்சியில் இந்தியாவின் எழுச்சி :- 

 

 

 

கங்குலி இந்திய அணிக்கு கேப்டனான பிறகு இந்திய அணி புலிப்பாய்ச்சலை நிகழ்த்தியது. அதிரடி ஷேவாக், ஆக்ரோஷ கங்குலி, சுவர் டிராவிட், பிளாக்கத்தான் லட்சுமணன், சத மன்னன் சச்சின், சுழல் சிங்கம் ஹர்பஜன், கும்ளே என ஆடும் லெவனில் அத்தனை பேருமே நட்சத்திர வீரர்களாக உருமாறிய காலகட்டம் (2000 -2007). ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  கொல்கத்தா  டெஸ்ட் (2001) இன்றளவும் வரலாற்றின் சிறந்த டெஸ்ட் போட்டியாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஷேவாக் அடுத்தடுத்து அடித்த முச்சதம், அவரை வேற லெவல் பேட்ஸ்மேன் என உலகுக்குக் காட்டியது. 

10  தோனி தலைமையில் இந்தியாவின் பொற்காலம் ;- 

2007 -2011 வரையிலான  காலகட்டம் இந்திய அணிக்கு பொற்காலம். டெஸ்ட் தரவரிசையில் முதன் முறையாக இந்திய அணி முதலிடம் பிடித்து அசத்தியது. உலகின் அத்தனை அணிகளையும் இந்தியா மிரள வைத்த தருணம் இது. இந்த காலகட்டத்தில் ஆடிய 47 டெஸ்ட் போட்டிகளில் 22 டெஸ்ட் போட்டியை வென்று வரலாறு படைத்தது இந்திய அணி. கங்குலி தலைமையில் உழைத்த இந்திய அணி வீரர்களுக்கு முழு பலனும் கிடைத்தது இந்த காலகட்டத்தில் தான். 

11.   டெஸ்ட் அரங்கில் இந்தியாவின் வீழ்ச்சி.

2011 மத்தியில் இருந்து 2015 மத்தி வரை இந்திய அணி கடும் சரிவை கண்டது. இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா  என சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் பெரும் அடி விழுந்தது. இந்தியாவின்  ஜாம்பவான் வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்த ஓய்வு பெற, தட்டுத்தடுமாறியது இந்திய அணி. கங்குலியின் கேப்டன்சியில் உருவான அணியால் புகழின் உச்சத்தை தொட்ட தோனிக்கு இரண்டாம் பாதி காலகட்டம் மிகுந்த சோதனையாக அமைந்தது. பதினைந்து ஆண்டுகால கட்டமைப்பு திடீரென ஆட்டம் கண்ட சூழ்நிலையில், மீண்டும் மெல்ல மெல்ல இந்திய அணியை கட்டமைத்தார் தோனி. இந்தியாவுக்கும், தோனிக்கும் நேர்ந்த இந்த சோதனை காலகட்டத்தில் கொஞ்சம் சீக்கிரமாகவே மீண்டது இந்திய அணி. 

12.  இளம் வீரர்களின் எழுச்சி : -

1990 களின் இறுதியில் இந்திய அணி எப்படி எழுச்சி பெற்றதோ, அது போன்றதொரு எழுச்சியை மீண்டும் அடைந்திருக்கிறது இந்திய அணி. விராட் கோஹ்லியின் தலைமையில் முற்றிலும் மாறுபட்ட ஃபார்முலாவில் அசரடிக்கும் வெற்றிகளை பெற்று வருகிறது. இலங்கை, தென்னாபிரிக்க, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக வரலாற்று சிறப்பு மிக்க தொடர் வெற்றிகளை பெற்றுள்ளது கடைசியாக ஆடிய 11 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி, ஆறு போட்டியில் வெற்றி என பாசிட்டிவாக இருக்கிறது இந்திய அணி. "வெற்றிக்காக ஆடு" என்ற கோஹ்லியின் அக்ரஸிவ் மனப்பான்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில்  இந்தியா இன்னும் உச்சங்களை தொடும் என எதிர்ப்பார்க்கலாம். 

கொசுறு தகவல் : - இந்தியா  தனது 500 வது டெஸ்ட்போட்டியை விளையாடவுள்ளதை தொடர்ந்து இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்கள் அனைவரையும் அழைத்து போட்டி தொடங்குவதற்கு முன்  கவுரவிக்க முயற்சி செய்து வருகிறது பி.சி.சி.ஐ. குறிப்பு - 500 டெஸ்ட் போட்டிகளில், இந்திய வீரர்கள் படைத்த சாதனைத் தொகுப்பை   திங்களன்று விகடன்.காமில் பார்க்கலாம்.

- பு.விவேக் ஆனந்த் 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க