Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுழல் மன்னன்... சோர்விலன்... அஸ்வின்! #HBDAshwin

‘ரோட்டுல கல்லு பொறுக்கி போடுற வேலை செஞ்சா கூட, அதுலயும் நான்தான் நம்பர் ஒன்னா இருக்கனும்’ என்பது இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் பாலிசி. அதனால்தான் டெஸ்ட் ஆல்ரவுண்டர் ரேங்கிங்கில் அவர் நம்பர் 1. இந்திய அணியின் கேப்டன்கள் தோனி, கோலி இருவரும், விக்கெட் தேவைப்படும் நேரத்தில் தேடும் பவுலர் அஸ்வின். சொல்லி வைத்தாற்போல அந்த ஓவரில் விக்கெட் எடுத்து, கேப்டனின் வயிற்றில் பால் வார்க்கும் இவர், டெஸ்ட் போட்டிகளில் மிக விரைவாக 50, 100, 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். 

2011ல் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த அஸ்வின், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 9 விக்கெட் வீழ்த்தி, அறிமுக போட்டியில் இரண்டாவது அதிக விக்கெட் எடுத்தவர் என்ற பெருமை பெற்றதோடு, ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். அதன் பின், அவர் டெஸ்ட் பயணத்தில் ஏறுமுகம். ஆனால், 2013ல் இந்திய அணி தென் ஆப்ரிக்க சென்றிருந்தபோது, ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 42 ஓவர்கள் வீசியும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. 

இதற்கு தண்டனையாக அடுத்த ஆறு டெஸ்ட்களில் அவர், டிரெஸ்ஸிங் ரூமில் உட்கார வைக்கப்பட்டார். ‘பிளேயிங் லெவன்ல இடம் கிடைக்காம இருந்த டைம்தான், என்னை நானே அனலைஸ் பண்ணிகிட்டேன். அதுக்கு அப்புறம்தான் தீவிரமா டிரெயன் பண்ண ஆரம்பிச்சேன்’ என சொல்லும் அஸ்வினுக்கு, 2015 சீசன் உச்சம். கடந்த ஆண்டு இந்தியா & தென் ஆப்ரிக்க தொடரில் 31 விக்கெட்டுகளை அள்ளிய அவரது விக்கெட் வேட்டை, இலங்கை சுற்றுப் பயணத்திலும் நீண்டது. 

சங்ககராவில் இருந்து ஏபி டி வில்லியர்ஸ் வரை எதிரணி வீரர்களுக்கு அஸ்வின் சிம்ம சொப்பனம். ‘சங்ககரா ஒரு லெஜெண்ட். அவர் ஒருமுறை ஒரு பவுலரிடம் விக்கெட்டை கொடுத்து விட்டால், அடுத்த முறை அந்த பவுலர் பந்தில் ஆட்டமிழக்க மாட்டார். அவர் விக்கெட்டை எடுப்பது சிரமம்’ என கடந்த ஆண்டு இலங்கை தொடர் தொடங்கும் முன் சொல்லி இருந்தார் அஸ்வின். ஆனால், அந்த தொடரில் நான்கு இன்னிங்ஸ்களிலும் சங்ககரா விக்கெட்டை எடுத்து பிரமிக்க வைத்தார். இது எப்படி சாத்தியமாச்சு என கேட்டபோது ‘சங்ககரா ரிட்டையர்டுமென்ட் டென்ஷன்ல இருந்தார். அதனால நினைச்ச கேமை அவரால் ஆட முடியலை. இதை யூஸ் பண்ணி மாத்தி மாத்தி பவுலிங் போட்டேன். அவ்வளவுதான்’ என சிம்பிளாக பதில் சொன்னார்.

ஏபி டி வில்லியர்ஸ் & எதிரணியை நடுநடுங்க வைக்கும் பேட்ஸ்மேன். டி 20, ஒருநாள், டெஸ்ட் என எந்த ஃபார்மாட்டானாலும், எந்த பிட்ச்சானாலும் 360 டிகிரியில் சுற்றிச் சுழலும் சூறாவளி. அப்பேர்பட்டவரே, கடந்த ஆண்டு நாக்பூர் டெஸ்டில் அஸ்வின் பந்தை எதிர்கொள்ள திணறினார். இரண்டு முறை லைனை விட்டு இறங்கி வந்து பந்தை பேடில் வாங்கினார். டி வில்லியர்ஸ் அன்கம்ஃபர்ட் ஜோனில் இருப்பதை உணர்ந்த அஸ்வின், அடுத்த பந்திலேயே அவரை பெவிலியின் அனுப்பி வைத்தார். 

சப் கான்டினென்ட் மைதானங்களில் மட்டுமே அஸ்வின் விக்கெட் வீழ்த்துகிறார். ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்ரிக்காவில் அவரால் ஜொலிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ‘அப்படி எல்லாம் இல்லைங்க. ஸ்ரீலங்காவுலயே கொழும்பு விக்கெட்டுக்கும் காலே விக்கெட்டுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. என்னைப் பொறுத்தவரை எந்த பிட்ச்சா இருந்தாலும், என்னுடைய பெஸ்ட்டைக் கொடுக்கணும்’ எனச் சொல்லும் அஸ்வின், சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புதிய சாதனை படைத்திருந்தார். சச்சின், சேவாக்குக்கு அடுத்ததாக டெஸ்ட்டில் அதிக முறை (6) மேன் ஆஃப் தி சீரிஸ் விருதை வாங்கியவர் அஸ்வின் என்பதே அந்த சாதனை. அதுவும் அவரது 36வது டெஸ்ட் போட்டியில் என்பது கூடுதல் கவுரவம். அதோடு, கரீபிய மண்ணில் இரண்டு சதங்கள் அடித்து தான் ஒரு ஆல் ரவுண்டர் என்பதையும் அழுந்தப் பதிவு செய்துள்ளார்.

டி 20 கிரிக்கெட்டில் அஸ்வின் உச்சம் தொடக் காரணம் ஐபிஎல். 2008ல் சாதாரண ரசிகனாக சேப்பாக்கத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அஸ்வின், 2009ல் களம்புகுந்து, 2010ல் உச்சத்தைத் தொட்டார். டெத் ஓவர்களில் அஸ்வின் கையில் பந்தைக் கொடுத்து கொம்பு சீவி விட்டார் தோனி. இதற்கு பலனாக ஐபிஎல் மட்டுமல்லாது 2010 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மேன் ஆஃப் தி சீரிஸ் விருது வாங்கி, இந்திய அணியிலும் இடம் பிடித்தார்.

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களில் அஸ்வினும் ஒருவர். எனவே சிஎஸ்கே சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் இனி என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்டதும் ‘சொந்த ஸ்டேட்ல ஆடுறுதுதான் சந்தோஷம். ஆனா, டீம் இல்லைன்னா என்ன செய்ய முடியும். ஒரு வீட்டுல இருக்குறோம். அது இடிஞ்சி போனா, வேற வீட்டுக்கு குடிபோறது இல்லையா? அதே மாதிரிதான், சென்னை சூப்பர் கிங்ஸுக்குப் பதிலா சென்னை சூப்பர் சூப்பர் கிங்ஸ்னு ஒரு டீம் வந்தா அதுலயும் விளையாடத் தயார். எந்த டீமா இருந்தாலும் என்னோட பெஸ்ட்டைக் கொடுக்கணும். தட்ஸ் ஆல்’ என சொன்ன அஸ்வின், இப்போது புனே அணியில் விளையாடி வருகிறார்.

கேரம் பால் வித்தையை கச்சிதமாக நிறைவேற்றும் அஸ்வின், நேரம் கிடைக்கும்போது தமிழ்நாடு அணிக்காகவும் விளையாடத் தவறுவதில்லை. தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடும் அஸ்வினுக்கு, நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு புதிய மைல்கல் காத்திருக்கிறது. 

ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி, பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் இருவரும், தங்கள் 38வது டெஸ்டில் 200 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் 193 விக்கெட்டுகளை சாய்த்துள்ள அஸ்வின், அடுத்த டெஸ்டில் 7 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில், அதி வேகமாக டெஸ்டில் 200 ரன் விக்கெட் எடுத்த இரண்டாவது பவுலர் என்ற சாதனை படைக்கலாம். இன்று தன் 30வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் அஸ்வினுக்கு அந்த சாதனை கைகூட வாழ்த்துகள்! 

-தா.ரமேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement