இதற்குத்தான் இந்தியா வந்தாரா நடால்? | Is this the reason Nadal visited India ?

வெளியிடப்பட்ட நேரம்: 17:52 (17/09/2016)

கடைசி தொடர்பு:17:51 (17/09/2016)

இதற்குத்தான் இந்தியா வந்தாரா நடால்?

'ஐ.. ரெய்னாடி..' ஒவ்வொரு முறை ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா வெளுத்து வாங்கும்போதெல்லாம் ட்விட்டரில் ஒரு பெண் இப்படி உணர்ச்சிவசப்படுவார். இந்திய கிரிக்கெட்டில் சுரேஷ் ரெய்னாவுக்கு பெண் ரசிகைகள் அதிகம் எனில், சர்வதேச டென்னிஸ் அரங்கில் ரசிகைகளை வசீகரிப்பவர் ரஃபேல் நடால். 

சென்னை ஓபன் தொடர் நடந்து கொண்டிருந்த சமயத்தில், ஒரு பெண் நிருபரிடம் சக நிருபர் ‘உங்களுக்கு பிடிச்ச டென்னிஸ் பிளேயர் யார்?’ என கேட்டார். ‘என் ஹீரோ தோஹால இருக்கான்’ என அந்த பெண்ணிடம் இருந்து பதில் வந்தது. அந்த பெண் சொன்ன நடால் அப்போது, தோஹாவில் கத்தார் ஓபன் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தார். இன்று நடால் இந்தியாவில் இருக்கிறார். தகவல் அறிந்து அந்தப் பெண்ணும் நடாலை பார்க்க டில்லி சென்றிருக்கிறார்.

இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக நடால், டில்லிக்கு வந்திருக்கிறார் என்றதுமே டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்தன. ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் நடால், இந்திய வீரர் ராம்குமார் ராமநாதனை எதிர்கொள்கிறார் என்ற தகவல் இன்னும் சூடேற்றியது. ரசிகர்களை விடுங்கள்... தன் வாழ்நாளில் மறக்க முடியாத போட்டியை ஆடப் போவதை நினைத்து ராம்குமாரும் பூரிப்பில் இருந்தார். முந்தைய நாள் இரவு நடால் உடன் ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்து லைக்ஸ் அள்ளினார். இப்படி... டேவிஸ் கோப்பையில் இந்தியா - ஸ்பெயின் மோத இருப்பதைக் கடந்து, நடாலின் வருகைதான் வசீகரித்தது.

நடாலின் பெயரைச் சொல்லிச் சொல்லியே ஸ்பான்சர்களை அள்ளியது இந்திய டென்னிஸ் சங்கம். ஆச்சரியமாக இந்திய அணிக்கும் ஸ்பான்சர் கிடைத்தது. பகலில் நடப்பதாக இருந்த போட்டி மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டது. போட்டி துவங்குவதற்கு முன் 2 கி.மீ. தூரம் வரை ரசிகர்கள் காத்துக் கிடந்தனர். இவை எல்லாவற்றுக்கும் காரணம் நடால். 

டென்னிஸ் என்பது எலைட் பிரிவினருக்கான விளையாட்டு. அதன் ரசிகர்களும் அவ்வாறே. கடந்த ஆண்டு சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் நடந்தபோது இந்தியா வந்திருந்தார் டென்னிஸ் உலகின் பிதாமகன் ரோஜர் ஃபெடரர். அந்த கிராண்ட் ஸ்லாம் நாயகனைப் பார்ப்பதற்காகவே, கொல்கட்டாவில் இருந்து டில்லி சென்றிருந்த ஒரு பெண் ரசிகை, டிக்கெட் விலையைப் பார்த்து ஆவேசமானார். ‘ஃபெடரரை பார்க்க வேண்டும் என்பதற்காகவே டில்லி வந்தேன். இங்கு வந்து பார்த்தால் சீசன் டிக்கெட் விலை ரூ 40,000 சொல்கிறார்கள். அதுகூட பரவாயில்லை. இருக்கைகள் எல்லாம் மோசமாக இருக்கிறது. ஃபெடரருக்காக இதை எல்லாம் சகித்துக் கொள்கிறேன்’ என்றார் காட்டமாக. 

கிட்டத்தட்ட, களிமண் தரையின் நாயகன் நடாலை பார்க்கவும் இப்படியொரு கூட்டம் டில்லியில் நேற்று முண்டியடித்தது. ரசிகர்களும் அலைமோதினர். நடாலும் மைதானத்தில் இருந்தார். ஆனால், ரசிகர்கள் முகத்தில் அதிர்ச்சி. காரணம் நடால் களமிறங்கவில்லை. விஐபிகள் இருக்கும் வரிசையில் அமர்ந்து மொபைல் ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தார். அவ்வப்போது தன் அணி வீரர்களுக்கு உற்சாகம் அளித்துக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்த ரசிகன் கடுப்பானான். ‘நடால் விளையாட மாட்டார்னு முன்னாடியே சொல்லி இருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன்ல...’ என சலித்துக் கொண்டான். காரணம், அவன் பார்க்க நினைத்தது இது அல்ல. ஆர்ம்ஸ் தெரிய உடம்பை எல்லாம் முறுக்கிக் கொண்டு நடால் அடிக்கும் ஃபோர்ஹேண்ட் ஷாட்கள், டாப் ஸ்பின் ஷாட்களைப் பார்க்க. 

நடாலுக்குப் பதிலாக களம் புகுந்த ஸ்பெயினின் இன்னொரு நட்சத்திர வீரர் ஃபெலிசியானா லோபஸ், ராம்குமார் ராமநாதனை சிரமமின்றி வீழ்த்தினார். மற்றொரு ஒற்றையர் பிரிவிலும் சாகேத் மைனேனியை, டேவிட் ஃபெரர் தோற்கடிக்க ஸ்பெயின் 2-0 என முன்னிலை வகித்தது. கிட்டத்தட்ட நடால் ஆடாமலேயே ஸ்பெயின் வென்று விட்டது.

இந்த முடிவு இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்ததே என்றாலும், அவர்கள் நடாலைப் பார்க்க முடியாமல் விரக்தி அடைந்தனர். நடால் களமிறங்காதது இன்னும் ரகசியமாகவே இருக்கிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணமும் விநோதமானது. ‘‘வெள்ளிக்கிழமை பயிற்சி முடித்ததும் வயிற்று வலியால் அவதிப்படுவதாக நடால் தெரிவித்தார். எனவே நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அவருக்குப் பதிலாக லோபஸ்  விளையாடுவார்’ என்றார் ஸ்பெயின் பயிற்சியாளர் மார்டினெஸ்.

ஆனால், ஃபெலிசயானா லோபஸ் சொன்னது வேறு பதில். ‘நடாலுக்கு பதிலாக நான் களமிறங்கலாம் என்பது எனக்கு முன்பே தெரியும். ஏனெனில் பயிற்சியின் போது இடது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக நடால் அவதிப்பட்டார்’ என்றார் லோபஸ். நடால் விஷயத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

 ஏனெனில், பிரெஞ்ச் ஓபன் இரண்டாவது சுற்றின்போதும் மணிக்கட்டு காயம் காரணமாகவே நடால் பாதியில் விலகினார். விம்பிள்டன் தொடரின்போதும் அந்த காயம் குணமாகவில்லை. இதுதவிர, கடந்த இரண்டு சீன்களாக நடால் பல்வேறு காயம் காரணமாக, பல தொடர்களில் பாதியிலேயே விலகி உள்ளார். அப்படி இருந்தும் அவர் இந்திய வர என்ன காரணம்? இந்தியா வந்தும் விளையாடாதது ஏன் என பல கேள்வி எழுகிறது. ஆக, பிளான் செய்து ரசிகர்களை ஏமாற்றி விட்டனர். 

இன்று நடக்கும் இரட்டையர் பிரிவில் நடால் விளையாட வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், அதற்கும் வாய்ப்புகள் குறைவே. 

- தா.ரமேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்